• வேலூர் மாவட்ட அனைத்து துறை அலுவலர் ஆலோசனை கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாக துறை, மருத்துவ துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, கூட்டுறவு துறை, வேளாண்மை துறை, பள்ளி மற்றும் உயர்க்கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, வணிக வரி துறை, சுற்றுலாத் துறை, நீர்வள துறை, இந்து சமய அறநிலைய துறை உள்ளிட்ட 55 துறைகள் சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் தொடர்புடைய துறை அலுவலர்களின் மூலம் விளக்க காட்சியாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முன்னதாக வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் அடங்கிய கையேட்டினை மாவட்ட ஆட்சி தலைவர் வெளியிட அதனை காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
அனைத்து துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் துறைகளின் செயல்பாடுகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களின் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனைத்து துறை அலுவலர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்தும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் குறிப்பிட்டு தெரிவிக்கும்பட்சத்தில் அதன்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது.
அரசு அலுவலகங்களுக்கு கோரிக்கையுடன் வரும் பொதுமக்களிடம் அலுவலர்கள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். காட்பாடி சட்டமன்ற தொகுதியில் குடிநீர், போக்குவரத்து, மின்விளக்குகள் போன்ற சிறு சிறு பிரச்சினைகள் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. அது குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கடிதம் மூலம் தெரிவிப்பதாகவும், அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டு கொண்டார். மேலும் சேர்க்காட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் சமையலறை வசதி, சுற்றுச்சுவர் மற்றும் கூடுதலாக மருத்துவர்களை நியமித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது.
நேற்றைய தினம் மாலை நேரம் பெய்த மழையின் காரணமாக சாலையில் விழுந்த மரங்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களால் அகற்றப்பட்டது. இதேபோன்று நள்ளிரவு 1 மணி அளவில்கூட மின்துறை அலுவலர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணிகளில் ஈடுபட்டிருந்ததை தானே நேரடியாக பார்வையிட்டதாகவும், அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
வேலூர் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் மாநகராட்சி பகுதிக்குள்ளாகவே அடங்கியுள்ளது. நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக பிரேத்யேக செயலி ஒன்றை உருவாக்கி உள்ளேன். அச்செயலியில் இதுவரை பெறப்பட்ட புகார்களில் பெருமளவு குடிநீர், கழிவுநீர் கால்வாய், வடிகால், மின்சாரம், சேதமடைந்த சாலைகள், குப்பைகள், தெருவிளக்கு, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்கள் ஆகியவை தொடர்பாக பெறப்பட்டுள்ளன. இப்புகார்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம்தான் அளிப்பதாகவும், அதன்மீது முடிந்த வரை விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டு கொண்டார். மேலும் பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்தவும், மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான உணவினை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டு கொண்டார்.
இக்கூட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது.
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் கடந்த காலங்களில் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான இடங்கள் அளவீடு செய்து தரப்படாமல் உள்ளது. இதனை வருவாய் துறை அலுவலர்கள் உடனடியாக அளவீடு செய்து தரவேண்டும்.
ஒடுகத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே அமைந்துள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் பகுதிகளில் அம்ரூத் திட்டப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் சீராக இல்லை. இதனையும் சீர்செய்ய வேண்டும். அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை விரைந்து மேற்கொண்டு, சுற்றுப்புற பகுதிகளில் ஏற்படும் நீர் மற்றும் நில மாசுபாடை உடனடியாக தடுக்க வேண்டும்.
அனைக்கட்டு மற்றும் ஊசூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அணைக்கட்டு பகுதி பெரும்பாலும் விவசாயம் மற்றும் மலை சார்ந்த பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகளில் விவசாயிகளுக்கும், மலைவாழ் மக்களுக்கும் கறவை மாடுகள் வாங்குவதற்கான கடனுதவி அளித்து அதன்மூலம் மாவட்டத்தின் பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் 34 அங்கன்வாடி மையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் இல்லை என தெரிவித்தனர். அது குறித்த விவரங்களை அலுவலர்கள் அளித்தால் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதற்கான நிதியை வழங்குவதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கீ.வ.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது.
பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்காக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், அடிப்படை தேவைகளுக்காக வட்டார வளர்ச்சி அலவலகங்களுக்கும் நாள்தோறும் செல்கின்றனர். இந்த இரு அலுவலகங்களிலும் அலுவலர்கள் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கனிவாக பெற்று கொண்டு அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் பகுதியில் மா உற்பத்தி அதிகளவு உள்ளது. எனவே இங்கு மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் துறை அலுவலர்கள் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் எளிதாக பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது.
குடியாத்தம் பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை சீரான முறையில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பள்ளிகளில் கழிவறை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். குடியாத்தம் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் ஒரு சில கழிவறைகளில் கதவு, தாபால் போன்றவற்றை பொதுப்பணித்துறையின் மூலம் சரிசெய்திட வேண்டும். குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அடுத்த ஆண்டு அதுபோல் சிறப்பாக நடைபெற அரசு அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். குடியாத்தம் மோர்தானா அணை சுற்றுதலமாக மாற்றவும் மற்றும் பத்தலபல்லி அணை கட்டுவதற்கும் துறை சாந்த அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் மரு.ம.சுதாகர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் மு.ம.வினோத்கண்ணன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், கீ.வ.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.தென்றல்குமார், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் க.சிந்து, மாவட்ட வன அலுவலர் டி.அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பாபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ச.திருகுணஐய்யப்பதுரை, மகளிர் திட்ட இயக்குநர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment