• அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி - ரூ.102 கோடி செலவினம்


 ·         அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு ரூ.102 கோடி செலவினம் - 1147 மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

-    விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்

     வேலூர், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்துக்கு ரூ.102 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.

   அரசு மேல்நிலை பள்ளிகளில் படித்து, அதிக மதிப்பெண் பெற்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்தின், ஸ்டார்ஸ் தினம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

     விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

    கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கும் வகையில் கடந்த 2008-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ஸ் திட்டத்தில் இது வரை மொத்தம் 1147 மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

     இலவச கல்வி, தங்குமிடம், உணவு என விஐடி நிர்வாகம் ரூ. 102 கோடி  செலவழித்துள்ளது.

     அரசுகள் கல்வியை இலவசமாகக் கொடுங்கள், அதுவே போதும்.  அவர்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் இதுவரை இந்தியாவிலே யாரும் இலவசக் கல்வியைக் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் இல்லை.

     இந்தியாவில் 10 சதவீதம் பேர் நாட்டின் 80 சதவீத சொத்துக்களை வைத்துக் கொண்டுள்ளனர். ஜிஎஸ்டி மூலம் 2 லட்சம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது. இதில் 80 சதவீத சொத்துக்களை வைத்துக் கொண்டிருப்பவர்கள் 3 அல்லது 4 சதவீதம் தான் வரி செலுத்துகின்றனர்.

     இதற்கு அடிப்படையாக இருப்பது கல்வி இல்லாத காரணம்தான். ஒன்று மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. இந்த ஏற்றத்தாழ்வை குறைப்பதற்கு கல்வியைக் கொடுக்க வேண்டும்.

    நார்வே, ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நோர்டிக் நாடுகள் ஐரோப்பியாவை விட வளர்ச்சி பெற்ற நாடுகளாகும். அண்மையில் பிரதமர் அந்நாடுகளுக்கு பயணம் செய்திருப்பதன் மூலம் அந்த நாடுகளை பார்த்து நாம் எப்படி வளர்வது, என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.

     ஜனநாயகத்திற்கும் முன்மாதிரியாக இருக்கும் நாடாகவும் உள்ளது. அந்த நாடுகளில் தேர்தல் என்பது விளையாட்டு போட்டி மாதிரி.  'இந்த முறை நீ வெற்றி பெற்றால், அடுத்த முறை நான் வெற்றி பெற்றுக் கொள்வேன்' என்று சொல்வார்கள்.

    தமிழ்நாட்டில் அப்படி இல்லை, தேர்தல் என்பது வாழ்வா, சாவா என்று நினைக்கிறார்கள். பணத்தைக் கொடுத்தாவது வெற்றி பெற நினைக்கிறார்கள். இந்த முறை அதுவும் இல்லாமல் போய்விட்டது.

     நான் 60 ஆண்டு காலமாக அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை போல ஒரு தேர்தலை நான் பார்த்ததே இல்லை. இப்படி ஒரு மாறுதல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறுதல் நல்ல மாறுதலாக இருக்க வேண்டும் என்பதுதான்.

     காரணம் தமிழ்நாடு எல்லாவற்றுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகள் அப்படி அமையும் என்று நான் எதிர்பார்க்கின்றேன்.

   சமூக முன்னேற்றம், நாட்டு முன்னேற்றம் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருப்பது கல்வி. அந்தக் கல்வியைத் தான் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விஐடியைப் பொறுத்தவரை நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

     இவ்வாறு அவர் பேசினார்.

    திருப்பூர் ராம்ராஜ் குழுமத்தின் நிறுவனர் தலைவர் கே.ஆர்.நாகராஜன் பேசுகையில், “ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வறுமை தான் மிகப்பெரிய பலம். வறுமையை பாடமாகக் கொண்டு வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல. அடுத்து நாம் எடுக்கும் முடிவில் தான் முழு வெற்றி உள்ளது. ஒருவரின் அறிவு மூலம் குடும்பம், சமூகத்துக்கு எப்போது பயன்படுகிறதோ அப்போது தான் முழு வெற்றி கிடைக்கும். சமூகத்துக்கு நல்லதை மட்டும் செய்யும் மனோபலம் வேண்டும். இலவசங்கள், ஊழல் போன்றவையால் நாடு பொருளாதார சிக்கலில் உள்ளது. 1947-ல் இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலரின் மதிப்பு நிகராக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 96 ரூபாயாக உள்ளது. அதனால் சரி செய்ய இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் வாங்க வேண்டும் என்றார்.

     சிறப்பு விருந்தினராக விஐடி ஸ்டார்ஸ் முன்னாள் மாணவியும், தேனி தனி துணை ஆட்சியருமான ஜெ.கவிதா பேசுகையில்அரசு வேலையோ, தனியார் நிறுவன வேலையோ எந்த வேலையாக இருந்தாலும் சிறப்பாக செய்திட வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற இலக்கை நிர்ணயித்து விடாமுயற்சியுடன் கடுமையாக உழைத்தால் நிச்சயம் சாதிக்க முடியும் என்றார்.

     ஸ்டார்ஸ் திட்ட சமூக வலைதள சேவையை வேந்தர் கோ.விசுவநாதன் தொடங்கி வைத்தார். ஸ்டார்ஸ் திட்ட முன்னாள் மாணவர்கள் சார்பில் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு ரூ.10.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

   நிகழ்வில் விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி,  துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி, மாணவர் நல இயக்குநர் நைஜு மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.