• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.

 ·        P.T. Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின்  முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா!

·        "ஒழுக்கம் இல்லாத கல்வி பயனற்றது என ஓய்வு பெற்ற நீதிபதி. பொன். கலையரசன் அறிவுரை

     காஞ்சிபுரம் மாவட்டம், அரக்கோணம் பிரதான சாலையில், ஊவேரி சத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள P.T. Lee செங்கல்வராய நாயக்கர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி கடந்த 24 ஆண்டு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

            இக்கல்லூரியில், B. TECH: AI & DS, Information Technology மற்றும் B.E: CSE, ECE, EEE and Mechanical போன்ற பாடப்பிரிவுகளில் 24-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை முழுமை அடைந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் நீதியரசர் பொன்.கலையரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் ஆண்டு துவக்க விழாவிற்கு தலைமை ஏற்றார்.

    மேலும், அறங்காவலர்கள் முன்னாள் மாவட்ட ஆட்சியர் வி.சந்திரசேகரன், முன்னாள் மாவட்ட நீதிபதி S.சாத்தபிள்ளை, மருத்துவர் ஆர்.கண்ணையன், ஓய்வு பெற்ற ஆசிரியை S.ரேணுகா, பொறியாளர் H.வெங்கடேஷ், ஆராய்ச்சியாளர் முனைவர் B.அரிஸ்டாட்டில், சமூக செயற்பாட்டாளர் M.ராஜேந்திரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் M.N.விஜயசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

     இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் முனைவர் பி.பழனிச்சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

     தமிழ்நாடு தொழில் நுட்ப இயக்கத்தின் முன்னாள் கூடுதல் இயக்குனர் மற்றும் கல்லூரியின் இயக்குனருமான முனைவர் எம்.அருளரசு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றி அரங்கை சிறப்பித்தார்.

     மேலும், துறை தலைவர்கள், வகுப்பாசிரியர்கள், கல்லூரியின் மருத்துவர், விடுதி காப்பாளர்கள், வன்பகடி தடுப்பு குழு பேராசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்று தடுப்பு குழு பேராசிரியர்கள் என அனைவரையும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

      பின்னர், அறக்கட்டளையின் தலைவர் பொன்.கலையரசன், கல்லூரி இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் முதல் முறையாக பள்ளி கல்விக்கும் கல்லூரி கல்விக்கும் இடையிலான இடைவெளியை குறைக்கும் ஒரு முயற்சியாக,  அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்திற்கு ஏற்றபடி, அனைத்து பாடங்களுக்கான அடிப்படை தகவல்கள் அடங்கிய ஆறு குறுந்தகடுகளை வெளியிட்டார். மேலும், கல்லூரியின் அனைத்து தகவல்களும் அடங்கிய மாணவர் கையேடு மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அடங்கிய கையேடும் வெளியிடப்பட்டன.

     இதனைத் தொடர்ந்து, அவர் பேசுகையில், கல்லூரியில் கடந்த நான்காண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ஆய்வக வசதி மேம்பாடு ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார்.

     மேலும், கல்லூரியில் பயிலும் வன்னியர் குல சத்திரிய மாணவர்களுக்கு, பொறியியல் கட் ஆப் மதிப்பெண் 141-க்கு இருப்பவர்களுக்கு, பாதி கட்டண சலுகை மற்றும் 160-க்கு மேல் இருப்பவர்களுக்கு முழு கட்டண சலுகை என வழங்கப்படுகிறது. இதன் மூலம், அறக்கட்டளையின் நிறுவனர் வள்ளல் செங்கல்வராய நாயக்கர் அவர்களின் உயில்படி, ஏழை எளிய மாணவர்கள் தொழில்நுட்ப கல்வி பயில வேண்டும் என்ற கனவு நினைவாக்கப்பட்டுள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

            மேலும் அவர் மாணவர்கள் மிகுந்த ஒழுக்கத்துடன் திகழ வேண்டும் என்றும், ஒழுக்கம் இல்லாத கல்வி எந்த வகையிலும் பயனற்றது என்றும் அறிவுரை கூறினார். அண்ணா பல்கலை தரவரிசை பட்டியலில் முன்னேறியதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டுதலும் நன்றியும் தெரிவித்தார்.

     விழாவின் இறுதியில், துணை முதல்வர். S. பூபதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

     இவ்விழாவினை அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர் முனைவர் கா. சுரேஷ்குமார் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்.

     இந்நிகழ்ச்சியினை, பேராசிரியர் முனைவர். R.நாகராஜ்  ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

     முன்னதாக, கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு மூலம் கியூ ஸ்பைடர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கு அறக்கட்டளை தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பொன்.கலையரசன் பணி ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.

     இவ்விழாவில், அறக்கட்டளையின் செயலாளர் M.சாம்பசிவம், முன்னாள் அறங்காவலர் K.ஜெகநாதன், K.N.பாலாஜி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.