• வேலூர் அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்க்கை.
· வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ், பார்வையிட்டு ஆய்வு செய்து, 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் கட்ட சேர்க்கையை தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி, வேலூர் வட்டம், பிள்ளையார்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த மாதிரி பள்ளியில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் தனித்திறன் மிக்க மாணவர்களிலிருந்து அவர்களது ஒட்டுமொத்த செயல் திறன்கள் அடிப்படையில் இப்பள்ளியில் பயில உரிய வாய்ப்பினை அளிக்கும் வகையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது விருப்பம் மற்றும் திறமைக்கேற்ப உயர்க்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ஏதுவாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
வேலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 10-ஆம் வகுப்பில் 39 மாணவ, மாணவிகளும், 12-ஆம் வகுப்பில் 46 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். தற்போது 11-ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் 57 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர். தற்பொழுது இரண்டாம் கட்டமாக அரசு பள்ளிகளில் பயின்ற 68 மாணவ, மாணவிகள் மாவட்ட பள்ளிக்கல்வி துறையின் சார்பில் தேர்வு செய்யப்பட்டு மாதிரி பள்ளியில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சி தலைவர் பெற்று கொண்டு, அவர்களுக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் மாதிரி பள்ளியில் பயிலும் மாணவிகளின் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் ஆகிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாணவிகளுக்கான கழிவறை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதியின் மையப்பகுதிகளில் தூய்மையாக பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
ஏழை மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் பள்ளிகளுக்கு இணையான அதிநவீன உள்கட்டமைப்பு, தங்கும் வசதி மற்றும் உயர் கல்விக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் தமிழக அரசால் தொடங்கப்பட்டதே மாதிரி பள்ளிகளாகும்.
அரசு பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மாதிரி பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் சேர்க்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளில் தனித்திறமையுடன் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இது அந்த மாணவ, மாணவிகள் பெருமைப்பட வேண்டிய விசயம். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர்களையே சாரும். பெற்றோர்கள் எந்தவித தயக்கமுமின்றி தங்களுடைய பிள்ளைகளை இங்கே சேர்க்க வேண்டும்.
இப்பள்ளிகளில் நவீன அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கான இலவச தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்குச் சிறப்புப் பயிற்சியும், JEE, NEET போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்குத் தகுதிபெற சிறப்பு நிபுணர்கள் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. திறன்மிகு கல்வியை வழங்கி, அரசுப் பள்ளி மாணவர்கள் உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர வழிவகை செய்யப்படுகிறது.
எனவே 11-ஆம் வகுப்பு சேர்க்கைக்கு வருகை தந்துள்ள அனைத்து மாணவ, மாணவிகளையும் மாதிரி பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா, மாதிரி பள்ளி தலைமையாசிரியர் தமிழ்பிரியா, வேலூர் வட்டாட்சியர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலை, சதீஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Comments
Post a Comment