• வேலூர் மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்.

·        வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு  மகளிர்  தொழில் முனைவோர் மேம்பாட்டுத்   திட்டத்தின்கீழ் (TWEES) பயன்பெற  இணையதளத்தில்   விண்ணப்பிக்கலாம் -  மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு பெற்று தொழில் முனைவோராக உருவாகி, தங்களுக்கும் பிறருக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் சார்பில் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள் ரூ.10 இலட்சம் வரை திட்ட செலவு கொண்ட புதிய உற்பத்தி, சேவை மற்றும் வணிக தொழில்களை தொடங்க வங்கிக் கடன் உதவி பெறலாம். மேலும், திட்ட செலவில் 25 சதவீத மானியம் (அதிகபட்சம் ரூ.2 இலட்சம் வரை) வழங்கப்படுகிறது.

2026-27-ம் ஆண்டிற்காக வேலூர் மாவட்டத்திற்கு 402 பயனாளிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தகுதியுடைய பெண்கள் மற்றும் திருநங்கைகள் அதிக அளவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

தகுதிகள்:

·        தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் மற்றும் திருநங்கைகள்

·        வயது 18 முதல் 55 வரை

·        புதிய தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள்

விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் (தலா 2 நகல்கள்):

·        பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

·        ஆதார் அட்டை

·        PAN அட்டை

·        குடும்ப அட்டை

·        வகுப்பு சான்றிதழ்

·        தொழில் தொடர்பான விலைப்புள்ளிகள் (Quotations) – 2 நகல்கள்

          சுய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உயர விரும்பும் தகுதியுடைய பெண்கள் மற்றும் திருநங்கைகள் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவு செய்து இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை பெறவும், விண்ணப்பம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், காங்கேயநல்லூர் சாலை, காட்பாடி, வேலூர் 632 006 அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 0416-2242512/2242413 என்ற எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ். லீலாஅலக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments