• வேலூர் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு.
- வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 குறித்து அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு - முதன்மை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணிகளில் ஈடுபடவுள்ள கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் பிற அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதன்மை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலக்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027
இந்தியாவில் 1872 ஆம் ஆண்டு முதல், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும், சுதந்திரத்திற்கு பிறகு 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பாகவும் உள்ளது.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் கருவிகள் மற்றும் வழிமுறைகளின் மூலம் சேகரிக்கப்படவுள்ள முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கெடுப்பாளர்கள் தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களில் பிரத்யேக கைப்பேசி செயலியை பயன்படுத்தி குடும்பங்களிலிருந்து தரவுகளை சேகரிக்க உள்ளனர். மேலும் இணையதளத்தின் வாயிலாகவும், சுய கணக்கெடுப்பு செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் சுய கணக்கெடுப்பின் மூலம் இணையத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து தரவுகளும், கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களால் சரிபார்க்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (Census) என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். இது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். கடந்த 2011-ஆம் ஆண்டில், நம்மில் சிலர் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருப்போம்.
இந்த கணக்கெடுப்பு என்பது ஒரு அடிப்படை தரவு ஆகும். நம்முடைய எதிர்காலத் திட்டமிடல், வருங்காலத்தில் வரவிருக்கும் நலத்திட்டங்கள் அல்லது இதர உள்கட்டமைப்பு மேம்பாடுகள் போன்ற அனைத்து பணிகளுக்கும் அரசாங்கம் இதனை ஒரு அடிப்படை தரவாகத்தான் எடுத்துக்கொள்ளும்.
அப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியைத்தான் நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பொறுப்பு அலுவலர்களும் மற்றும் ஒவ்வொரு துணை கணக்கெடுப்பு அலுவலர்களும் மிகவும் கவனமாகவும், பொறுப்புடனும், இதனை ஒரு முக்கிய பணியாக எடுத்துச் செய்ய வேண்டும். அப்போதுதான் நம்முடைய திட்டமிடல் அனைத்தும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறும், துல்லியமாகவும் அமைவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நாம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள உள்ளோம். முதல் கட்டமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில், வீடுகள் கணக்கெடுப்பு பணியை நாம் செய்ய உள்ளோம். இரண்டாம் கட்டமாக வரும் பிப்ரவரி 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளோம் என மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலக்ஸ் தெரிவித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வன அலுவலர் டி.அசோக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், இணைஇயக்குநர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆர்.வாசுதேவன், மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சுமணன், உதவி இயக்குநர் (மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆர்.ஜெ.திர்ஷியா, புள்ளியல் ஆய்வாளர் என்.சிந்து, அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment