• தென்மேற்கு பருவமழை வேலூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்.
தமிழகத்தில் எதிர்வரும் 01.06.2024 முதல் தென்மேற்கு பருவமழை 2024 தொடங்கப்பட உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை வேலூர் மாவட்டத்தில் 573.5 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 33 சதவீதம் கூடுதலான மழையாக உள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை 2024-யை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மாவட்டத்தில் மழைநீர் தேங்ககூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அங்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வேலூர் மாவட்டத்தில் இயல்பை விட கூடுதலாக பொழிந்துள்ளது. எனவே இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வருவாய்த்துறை
அனைத்து வட்டாட்சியர்களும் கடந்தகால அனுபங்களை கருத்தில் கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிய வேண்டும். முதல் நிலை பொறுப்பாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க வேண்டும். மழைக்காலங்களில் ஏற்படும் உயிர் சேதம், கால்நடை சேதம் மற்றும் உடைமைகள் சேதம் ஆகியவற்றிற்கான நிவாரணத் தொகையினை உடனடியாக பெற்று வழங்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை தங்கவைக்க நிவாரண முகாம்களை கண்டறிந்து அங்கு போதுமான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் போதிய அளவில் உணவு தானியங்கள், பிரட், பால் மற்றும் குழந்தைகளுக்கான உணவு, பால் பவுடர் ஆகியவற்றை போதிய இருப்பில் வைத்துக் கொள்ள கூட்டுறவுத் துறை அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி , பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள்
உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மழைநீர் வடிகால்களை பெரிய, நடுத்தர மற்றும் சிறிய மழைநீர் வடிகால்கள் என வகைப்படுத்தி அவற்றில் சேகரமாகியுள்ள படிவுகளை அகற்ற வேண்டும். இப்பணிகளுக்கு போதிய அளவில் ஆட்கள் மற்றும் JCB போன்ற இயந்திரங்களை ஏற்பாடு செய்து பயன்படுத்த வேண்டும்.
மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்களில் உடனடியாக மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மீட்பு உபகரணங்கள், மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள், மணல் மூட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்,
அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் உறுதித்தன்மையற்ற மற்றும் பழுதடைந்த கட்டிடங்களையும், உறுதித்தன்மையற்ற மேல்நிர்த்தேக்க தொட்டிகளையும் கண்டறிந்து அவற்றை சீர்செய்ய அல்லது அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கால்வாய்களில் தூர்வாரும் பணியினை 31.05.2024 முதல் மேற்கொள்ள வேண்டும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவ்வப்போது அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். கால்வாய் தூர்வாரும் பணிகளை 09.06.2024 க்குள் முடிக்க வேண்டும்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றினை தூர்வாரி மழைநீர் தங்கு தடை இன்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சாலைகளின் ஓரங்களில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வார வேண்டும்.
மழையின் காரணமாக சாய்ந்து விழும் மரங்களை அகற்றுவதற்கான மர அறுவை இயந்திரங்கள், சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்காக தேவையான ஜெசிபி புல்டோசர் வாகனங்களை பணியில் ஈடுபடுத்த பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் ஊரக சாலைகளின் ஓரங்களில் உள்ள மரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தணிக்கை செய்து அவற்றில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தயார் செய்து சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேளாண்மைத்துறை
பயிர் சேதங்கள் தொடர்பாக வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் வருவாய்த்துறை அலுவலர்களுடன் கூட்டுப் புலத்தணிக்கை மேற்கொண்டு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க உடனடியாக பரிந்துரை செய்ய வேண்டும்.
பொது சுகாதாரத்துறை
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சுகாதார வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். தொற்றுநோய் பரவுவதை தடுக்கும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை மருத்துவ துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டும். பொது இடங்களில் கிருமி நாசினி தெளித்து சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும்.
மின்சார வாரியம்
மழை மற்றும் சூறாவளி காற்றினால் சாய்ந்து விழும் மின்கம்பங்கள் மற்றும் மின் வடங்களை உடனடியாக சீரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மின்சார வாரியத்தின் சார்பில் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் .
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி
தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் பேரிடர்கள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் போலி ஒத்திகை (Mockdrill) பயிற்சியினை தேவையான இடங்களில் மேற்கொள்ள வேண்டும். வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களில் மீட்பு பணிகளுக்கான கயிறு மற்றும் படகு போன்ற உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
எனவே தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து துறை அலுவலர்களும் விழிப்புடன் செயல்பட்டு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) முத்தையா, வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்), மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இராமச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சி) செல்வி உமா, உதவி ஆணையர் (கலால்) முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment