• நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையம்.
· தமிழ்நாடு துணைமுதலமைச்சர் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் விதமாக நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டம், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையத்தை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு அவர்களின் வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்தும் பொருட்டு இளைஞர்களின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தும் விதமாக நான் முதல்வன் திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 36 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திறன் கற்றல் மையங்கள் மிக அவசியமானதோடு மாணவர்கள் கல்விப் பயிலும் கல்லூரிகளிலேயே தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதும் மிக இன்றியமையாததாகும். இதனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டத்தின்கீழ் திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு மையங்கள் உருவாக்கப்படும் என மாண்புமிகு துணை முதலமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தார்.
இதனை செயல்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மாண்புமிகு துணைமுதலமைச்சர் வழிகாட்டுதலின்படி 28 அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையங்களை உருவாக்கியுள்ளது. இந்த சீர்மிகு திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களை தமிழ்நாடு துணைமுதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
ரூ. 24.43 கோடி மதிப்பில் 28 அரசு பொறியியல் கல்லூரிகளில் இந்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு திறன் மற்றும் வேலை வாய்ப்பு மையங்களிலும் 100 கணினிகள், உயர்தர பயிற்சி கருவிகள் மற்றும் இணைய வசதி உட்பட தேவையான அனைத்து உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.
வேலூர் அரசு தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையமானது ரூபாய் 87.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இந்த மையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலெட்சுமி, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, அங்கிருந்த கல்லூரி மாணவ மாணவிகளிடையே அவர்களின் எதிர்கால நோக்கங்கள் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடத்திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், 4-வது மண்டலக் குழுத் தலைவர் வெங்கடேசன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர் பி.கே.பழனி, பயிற்சி அலுவலர் தனகீர்த்தி, வேலூர் மாவட்ட நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment