• வேலூர் மாவட்ட எருது விடும் விழாஆலோசனைக் கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா-2025 நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து சார்நிநலை அலுவலர்கள் மற்றும் எருது விடும் விழா நடத்தும் விழா குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் விவாதிக்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அரசிடமிருந்து நிலையான இயக்க நெறிமுறைகள் (Standard Operating Procedure) வரப்பெற்றுள்ளது.
2025-ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள https://www.jallikattu.tn.gov.in/ என்ற இணைய தள முகவரியின் Event Registration-ல் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும், தங்களுடைய பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நிலையினை மேற்படி இணையதள முகவரியில் Sign in என்ற பகுதியில் சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் ஆவணங்களில் கிராமத்தின் பெயரினை ஏற்கனவே அரசு ஆணையில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ்வாறே விண்ணப்பம், உறுதி மொழி ஆவணம், காப்பீடு மற்றும் இதர இனங்களில் கிராமத்தின் பெயரினை வேறுபாடின்றி ஒரே மாதிரியாக குறிப்பிடவேண்டும்.
மேற்கண்ட அரசு இணையதளத்தில் ஏற்கனவே அரசாணை பெற்று நடத்தப்பட்ட கிராமங்களின் பெயர்களே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, எனவே, விழா குழுவினர்கள் தங்கள் கிராமத்தில் ஒரு விழாவினை நடத்திடவும், அதற்கேற்ப வகையில் ஆவணங்களை தயார் செய்து அதன் பின்னர் பதிவேற்றம் செய்யவேண்டும். தேவையில்லாமல் ஒரு கிராமத்தில் விழா நடத்த கிராமத்தின் பெயரினை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் ஆவணங்கள் தயார் செய்து அதனை பதிவேற்றம் செய்யமுடியாவிட்டால் மாவட்ட நிர்வாகம் பொறுப்பல்ல. எனவே, சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் ஒன்றினைந்து தங்கள் கிராமத்தில் ஒரு விழா நடத்த ஒத்துழைப்பு நல்கிட வேண்டியது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் :
விழாக் குழுவினர் மேற்கண்ட இணையதள மூலமாக விண்ணப்பத்தினை விழா நடைபெறும் நாளுக்கு 30 நாட்கள் முன்னதாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாடு மிருகவதை தடுப்பு (ஜல்லிகட்டு நடத்துதல் விதிகள்) 2017-ன் படி விழா நடத்த அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பேற்பதாக தெரிவித்து ரூ.50-ல் உறுதி மொழி ஆவணத்தில் கையொப்பத்துடனான ஆவணத்தை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
எருதுவிடும் விழா நடத்த நிகழ்வு தொடர்பாக ரூ.1 கோடி மதிப்பில் ஒரு நபருக்கு ரூ 5 லட்சம் என்ற விழா முழுவதையும் காப்பீடு செய்தும் அல்லது ரூ 20 லட்சத்திற்கான வங்கி உத்தரவாத ஆவணத்தை (Bank guarantee) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
எருதுவிடும் நடத்தப்படும் நிகழ்வு இடத்தின் வரைபடத்தினை மண்டல இணை இயக்குநர் அவர்களிடம் ஒப்பம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்..
பங்கேற்கும் அதிகபட்ச காளைகளின் எண்ணிக்கை மற்றும் காளைகளின் பட்டியல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின்படி விழா திடல் அமைக்கப்படும் என ஒப்பந்ததாரருடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்த பத்திரம்.
எருது ஓடு பாதையான வாடிவாசல் முதல் சேருமிடம் வரை Double Barricading ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த Double Barricading 8 அடி உயரத்தில் அமைக்கப்பட வேண்டும். அதே போல் ஓடு தளம் முடியுமிடத்திலும் 8 அடி உயரத்தில் வாயில் அமைக்கப்பட வேண்டும். இந்திய விலங்குகள் நல வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு பேனர்கள் வைக்கப்பட வேண்டும்.
பங்குபெறும் எருதுகளுக்கு தேவையான அளவு தங்குமிடம், தண்ணீர் வசதி மற்றும் தீவண வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு காளைகளுடனும் அந்த காளையின் பாதுகாப்பு கருதி அதன் உரிமையாளர் அருகிலேயே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு எருதும் கால்நடை துறை மருத்துவர்களால் உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்று பெறப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படவேண்டும்.
விழாவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு உரிய முறையில் உணவு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். விழா தளத்தில் ஒலிபெருக்கிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
வாடிவாசல், விழா அரங்கம் ஆகியவற்றை முழுமையாக கண்காணிக்க CCTV கோமிராவோ அல்லது Web Camera வசதியோ ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு காளையும் ஒரு சுற்று மட்டுமே ஓட அனுமதிக்கப்படும்.
பங்குபெறும் எருதுகளுக்கான நுழைவு தொகை ஏதும் வசூலிக்கப்படக்கூடாது.
எருதுவிடும் விழா நடைபெறும் இடங்களில் காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பதாகைகள் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு இடையூறு ஏற்படாத இடத்தில் வைக்கப்பட வேண்டும். எருதுகள் ஓடுதளத்தின் தூரம் 100 மீட்டர் இருக்க வேண்டும்.
எருது ஓடும் பாதையானது வாடிவாசல் முதல் சேருமிடம் வரை இரண்டு பக்கங்களிலும் இரட்டை தடுப்பான்கள் (Double Barricading ) 200 மீட்டர் வரை ஏற்படுத்தப்பட வேண்டும். இரண்டை தடுப்பான்களின் இடைவெளி 2 அடி அகலம் இருக்க வேண்டும். ஓடுதளத்தில் 150 மீட்டருக்குள் பாதுகாவலர்கள் தவிர மற்றவர்களை அனுமதிக்கக்கூடாது,
வாடிவாசல் மற்றும் சேருமிடங்களில் கால்நடை மருத்துவக் குழு பணிபுரிய இடத்தினை ஏற்படுத்தி தரப்படவேண்டும். ஓடுதளம் முழுவதும் தேங்காய் நார்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும். ஒரு எருது ஓடிமுடித்த பின்னரே அடுத்த எருதினை ஓடுதளத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும். எருதுகளின் உரிமையாளர்கள் 200 மீட்டருக்கு அப்பால் எருதுகள் வந்துசேரும் இடத்தில் இருந்து காளைகளை அழைத்து செல்லவேண்டும்.
எருது உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டியவை :
விழாவில் கலந்து கொள்ளும் காளைகளை the Transportation of Animals Ruls, 1978-ன்படி கடைபிடித்து விழாவிற்கு கொண்டு வரவேண்டும். காளைகளுக்கு போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டும் விழாவிற்கு அழைத்து வரவேண்டும். அதேபோல் விழா முடிந்தும் காளைகளுக்கு கட்டாயமாக போதிய ஓய்வு அளித்தும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டும் கொண்டு செல்லவேண்டும். 120 செ.மீ உயரமும் 2 வயதிற்கு மேற்பட்ட எருதுகளையே விழாவில் பங்கேற்க வேண்டும். பசு மாடுகள் விழாவில் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது,
தமிழ்நாடு மிருகவதை தடுப்பு (ஜல்லிகட்டு நடத்துதல் விதிகள்) 2017ன்படி எருதுகளை விழாவில் பங்கேற்பதாக தெரிவித்து எழுத்து மூலமாக விழாகுழுவினர்களுக்கு ஆவணம் அளிக்கப்பட வேண்டும். ஓடு பாதையின் இறுதியில் எருதுகளை பாதுகாப்பாக பிடித்து அழைத்துச் செல்ல வேண்டும். எருதுகளுக்கு மது பானங்களை வழங்கக்கூடாது, மிளகாய் பொடி தூவுதல், வாலை முறிக்கி விடுவது போன்ற துன்புறத்தல்கள் மேற்கொள்ளக்கூடாது-
எருது விடும் விழா – துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள்
வருவாய்த்துறை
விலங்குகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நடத்துதல்) விதிகள், 2017 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் அவரது குழுவினர் விழா நடைபெறும் இடத்தை நேரடியாக கள ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் போதிய இட வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
பெறப்பட்ட விண்ணப்பத்தில் ஏற்பாட்டாளர்களின் முறையான உறுதிமொழி உள்ளதா என்பதையும், அரசு முதன்மை செயலாளர், கால்நடை வளர்ப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அவர்களின் நேர்முக கடிதம் எண்.3813954/AH3/2022-5, நாள்: 02.02.2023 கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு எருது விடும் விழாவிற்கு காப்பீடு(Insurace) செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அவர்கள் சரிபார்க்க வேண்டும்.
எருது விடும் விழா நிகழ்வில் பங்கேற்கும் எருதுகளின் எண்ணிக்கை மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எருதுகளின் எண்ணிக்கை ஆகியவற்றை சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.கடந்த ஆண்டுகளில் எருது விடும் விழாவில் வீதி மீறல்கள் மற்றும் புகார்கள் இருப்பின் அதன் தன்மை குறித்து ஆய்வு செய்து வேண்டும்.
விழா ஏற்பாட்டாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்து, சரிபார்த்து அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சட்ட விதிகளுக்கு புறம்பாக ஏதேனும் நடைபெற்றால் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகாரளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். அதே போல் ஓடு தளம் முடியுமிடத்திலும் 8 அடி உயரத்தில் வாயில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விழா நடைபெறும் மைதானத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள கிணறுகளை விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். மேலும், விழா நடைபெறும் இடம் திறந்தவெளி மைதானமாகவும், குடியிருப்புகளுக்கு தொலைதூரத்தில் உள்ளதையும் உறுதி செய்தல் வேண்டும்.
துணை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர், கால்நடை மருத்துவர் ஆகியோர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு வாடிவாசல், காளைகள் சேருமிடம், காளைகள் பரிசோதனை செய்யுமிடம், அரங்கம் மற்றும் காளைகள் சென்று சேருமிடம் ஆகிய பகுதிகளில் விதிகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். விழா முடிந்தவுடன் படிவ அறிக்கையினை அன்றைய தினமே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
2. கால்நடை பராமரிப்புத் துறை
இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத் துறை விழா தொடர்பாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதை கண்காணித்து முழு படிவ அறிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அனுப்பதல் வேண்டும்.
விழா நடைபெறும் இடத்தின் வரைபடம் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
விழா திடலில் வாடிவாசல், காளைகள் சேருமிடம், காளைகளை பரிசோதனை செய்யுமிடம், அரங்கம் மற்றும் காளைகள் சென்று சேருமிடம் ஆகிய பகுதிகளில் தனித்தனியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி வைத்து பணிபுரிவதை முறைப்படுத்த வேண்டும்.
விழாவில் பங்கேற்கும் ஒவ்வொரு காளையும் கால்நடை மருத்துவக் குழுவால் பரிசோதனைக்குட்பட்ட பிறகே அனுமதிக்கப்பட வேண்டும்.
விழாவில் பங்ககேற்கும் காளைகளை பொது மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி, காளைகளுக்கு வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு போன்ற குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு காளைக்கும் மருத்துவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு மது/போதை பொருட்கள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டால், விழாவில் பங்கு பெற அனுமதிக்க கூடாது. காளைகளுக்கான அவசர ஊர்தி (Animal Ambulance) நிறுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
ஓடுதளம் முடியுமிடத்தில் பிரத்யேகமாக ஒரு மருத்துவ குழுவால் ஓடி முடித்த அனைத்து காளைகளையும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். விழாத் திடலில் காளைகளுக்கு ஏதும் உயிர் சேதம் ஏற்பட்டால் அக்காளைகளை உடல் கூராய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொண்டு எருது விடும் விழாவிற்கு தடையில்லாச் சான்றினை கண்காணிப்புக் குழு வழங்க வேண்டும்.
விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு (பிசிஏ) சட்டம், 1960, மோட்டார் வாகனச் சட்டம், 1988, இ.த.ச. 429 ஆகியவற்றின் போக்குவரத்து விதிகள் போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரி குழுவுடன் இணைந்து மண்டல இணை இயக்குநர் அவர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை அவர்களால், காளைகள் நிலை நிறுத்தப்பட்டுள்ள வாடிசாசல் (Holding Yard) பகுதியில் நிர்வாகக் குழு, சுகாதார ஆய்வுக் குழு, வாடிவாசல் மேலாண்மைக் குழு, ஓடு தள பகுதி மேலாண்மைக் குழு (Bull Run Area Management Team), சேகரிப்பு முற்ற நிர்வாகக் குழு (Collection Yard Management Team), மருத்துவக் குழு, அவசரகாலப் பதிலளிப்புக் குழு (Emergency Response Team) ஆகிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.
எருது விடும் விழா தொடக்கத்தின்போது காளைகளுக்கு இடையே 2 சதுர மீட்டர் இடைவெளி விடப்பட்டு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
3. சுகாதாரத் துறை :
ஓடுதளத்தில் காளையுடன் செல்லும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர்களை மருத்துவக் குழு பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்க வேண்டும். மது அல்லது போதை பொருட்களை உட்கொண்டிருந்ததை கண்டறியப்பட்டால் அவர்களை அனுமதிக்கக்கூடாது.
விழாவில் பங்குபெறும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் உரிய முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவசர கால மருத்துவ நிபுணர் மற்றும் அவசர ஊர்தி விழா திடலின் அருகில் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
4. பொதுப்பணித்துறை :
விழாவினை அமைக்கும் ஒப்பந்ததாரர் விழா திடலின் வரைபடத்தை கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
விழா நடைபெறும் திடலின் இருமருங்கிலும் பார்வையாளர்கள் அரங்கத்தை (Galleris) பிரிக்கும் வகையில் இரட்டை தடுப்பாண்கள் (Double Barricading) உறுதியாக அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பான்கள் (Barricade) குறைந்தபட்சம் 8 அடி உயரத்தில் வாடிவாசல் முதல் காளை வந்தடையும் இடம் வரை அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் எருது ஓடும் தளத்தில் எருதுகள் இரட்டை தடுப்பான்களை தாண்டி செல்லாவண்ணம் தடுப்பான்கள் அமைக்கப்பட வேண்டும். விழா நடைபெறும் இடத்தின் இடத்தில் அளவுபடி பார்வையாளர்களின் எண்ணிக்கையினை வரையறுக்கப்பட வேண்டும்.
5. காவல் துறை :
விழா திடலில் போதுமான அளவில் காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். விழா நடைபெறும் திடலில் ஒவ்வொரு நிகழ்விலும் சட்டம் ஒழுங்கினை பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட அடையாள அட்டையில் குறிக்கப்பட்டுள்ள வரிசை எண் படி காளைகளை வரிசையாக ஓடுதளத்தில் அனுமதிக்க வேண்டும். கால்நடை மருத்துவக்குழுவால் நிராகரிக்கப்பட்ட காளைகளை ஓடுதளத்தினுள் அனுமதிக்கக் கூடாது.
காளைகளை பரிசோதனை செய்யும் மருத்துவக் குழுவுடன் இணைந்து காளைகள் பதிவு செய்யப்படுவதற்கும் நிராகரிக்கப்படுவதற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விழா திடலில் தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓடுதளத்தில் அதிகபட்சம் 25 தன்னார்வலர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சுழற்சிமுறையில் தன்னார்வலர்களை அனுமதிக்கும்போது 25 எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
ஓடுதளத்தில் ஒரு காளையுடன் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதற்குமேல் உள்ளே நுழையும் உதவியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களுடன் விழா திடலில் இணைந்து பணிபுரிய வேண்டும்.
ஒளிப்பதிவு கேமராக்கள் (Circuit Cameras) மூலமாக விழாத் திடலில் நடைபெறும் அசம்பாவிதங்கள் மற்றும் காளைகள் துன்புறுத்துவதை கண்காணித்து, அது போன்ற நிகழ்வு தெரியவரும்பட்சத்தில் அக்காளைகளையும், அச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
எருது விடும் விழாவில் விதி மீறல்கள் நடைபெற்றால் விலங்குகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நடத்துதல்) விதிகள், 2017-ன் படி விதி மீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல் துறையினர் தாமாக முன்வந்து (Suo moto) சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
6. தீயணைப்பு மற்றும் மீட்பு ப்பணிகள் துறை:
விழா நடைபெறும் இடங்களை முன்கூட்டியே சென்று தணிக்கை மேற்கொண்டு அவற்றுள் பிரச்சினைக்குரிய இடத்தினை கண்டறியப்பட வேண்டும். விழா நடைபெறும் மைதானத்தை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள கிணறுகளை விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு விழா நடைபெறும் இடங்களிலும் விழா தொடங்கி முடியும்வரை தீயணைப்புத் துறையினர் தங்களது தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். விலங்கு மீட்பு பணியில் அனுபவம் பெற்ற அலுவலர்கள் தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வி.முத்தையன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. பரணிதரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) மரு.அந்துவன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பழனி (காட்பாடி), சாரதி (அணைக்கட்டு), துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment