• மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி கடனுதவி.

·        உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தை சார்ந்த   817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் வழங்கினார்.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான நேரடி வங்கி கடனுதவிகளை சென்னையில் வழங்கியதை தொடர்ந்து  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த 817 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிகளை காட்பாடி வட்டம், ஜாப்ராபேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட  தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 5 மகளிருக்கு ரூ.16.76 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான 8 கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் ரூ.3,75,000/- பரிசுத் தொகையும், சமூக நலத் துறையின் சார்பில் பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ.50,000/- வீதம் என 3 பயனாளிகளுக்கு ரூ.1,50,000/- மதிப்பிலான திருமண நிதியுதவி தொகை மற்றும் தலா 2 கிராம் தங்கம் என மொத்தம் 6 கிராம் தாலிக்கு தங்கமும் நீர்வளத் துறை அமைச்சர்  வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களை சிறப்பிக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 609 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.69.58 கோடி மதிப்பிலான நேரடி வங்கி  கடனுதவிகளும், நகர்ப்புற பகுதிகளில் 208 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 3 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கும் ரூ.18.28 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிகளும் வழங்கப்பட்டது.

மேலும் தற்போது ஒருங்கிணைந்த பண்ணை செயல்பாட்டிற்காக முதற்கட்டமாக ரூ.27 இலட்சம் 300 பயனாளிகளுக்கும் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.14.30 இலட்சம் என மொத்தமாக வேலூர் மாவட்டத்தில் 817 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்ததாவது.

இந்த அரங்கில் கூடியிருக்கும் அனைத்து மகளிருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். மகளிர் மட்டுமே நிறைந்திருக்கும் இந்த அரங்கை பார்ப்பதற்கு பெருமையாக இருக்கிறது. இன்று நடைபெறும் இந்த மகளிர் தின விழாவில் மகளிர் திட்டத்தின் சார்பில் 817 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூபாய் 88.27 கோடி மதிப்பிலான நேரடி வங்கி கடன் உதவிகளும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் மகளிர் தொழில் முனைவோருக்கு 5 நபர்களுக்கு ரூ.16.76 இலட்சம் மதிப்பில் வங்கி கடனுதவியும், சமூக நலத்துறையின் சார்பில் பட்டதாரி மகளிருக்கு திருமண உதவித்தொகையாக தலா ரூபாய் 50,000 விதம் 3 நபர்களுக்கு ரூபாய் ஒரு  லட்சத்து 50 ஆயிரம் மற்றும் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமாக ஒரு நபருக்கு இரண்டு கிராம் வீதம் 3 நபர்களுக்கு 6 கிராம் வழங்கப்பட உள்ளது.

ஒரு காலத்தில் ஆண் சமூகம் பெண்களை அடக்கி ஆண்டு கொண்டிருந்தது. அதை தகர்த்தவர் தந்தை பெரியார். பெண்கள் எந்த விதத்தில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் என்று கேள்வி எழுப்பினார். இந்த பூமிக்கு பெயர் பூமாதேவி, படிப்பிற்கு சரஸ்வதி, செல்வத்திற்கு லட்சுமி, கடலுக்கு கடல் மாதா என்று அழைக்கிறோம். இவ்வுலகில் அனைத்திற்கும் பெண்களின் பெயரே இருக்கும் பொழுது சமூகத்தில் ஏன் அவர்கள் ஆண்களுக்கு நிகராக அவர்களுடைய உரிமையை பெறக்கூடாது என கேள்வி எழுப்பி அதை போராடி பெற்று தந்தவர் தந்தை பெரியார்.

பெண்களுக்கு கல்வி அவசியம் என்று பெரியார் போராடியதன் விளைவு தமிழ்நாட்டில் முதன் முதலில் டாக்டராக படித்து பட்டம் பெற்றவர் முத்துலட்சுமி ரெட்டியார் அவர்கள். பெரியார் வலியுறுத்திய பெண் கல்வியின் காரணமாக பெண்கள் இன்று உலக அளவிலும் சிறந்து விளங்குகிறார்கள். இந்தியாவிலிருந்து சென்ற கமலா ஹரிஷ், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். கனடாவில் இந்திய பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். பெண்களுக்கு கல்வியில் சம உரிமை வழங்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு சொத்திலும் சமூக உரிமையை கலைஞர் வழங்கி உள்ளார். பெண்கள் அரசியலிலும் சம பங்கோடு இருக்க வேண்டும் என்று முதலில் அவர்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவீதத்தை வழங்கியவர் கலைஞர். அது இன்று 50 சதவீதமாக உயர்ந்து வேலூர் மேயர் உள்பட தமிழ்நாட்டில் 8 பெண் மேயர்கள் அந்த இடத்தை அலங்கரித்துக் கொண்டுள்ளனர்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் அவருடைய ஆட்சி காலத்தில் சிறந்து விளங்கியது. மகளிரின் பொருளாதாரம் இதன் மூலம் உயர்ந்தது. இடையிலே ஒரு பத்தாண்டு காலம் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உதவிகள் வெகுவாக குறைக்கப்பட்டன. ஆனால் தற்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் மகளிர் குழுக்களுக்கு எண்ணற்ற கடன் உதவிகளை வழங்கி வருகிறார். இன்றுகூட சென்னையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி வங்கி கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இங்கு நம்முடைய மாவட்டத்திலும், பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் மகளிருக்கா வங்கி கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். இந்த வங்கி கடனுதவிகளை பெறும் மகளிர் அனைவரும் நல்லமுறையில் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு,  மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் மா.சுனில்குமார், ஒன்றியக் குழுத் தலைவர்கள் வே.வேல்முருகன் (காட்பாடி), ரவிசந்திரன் (கீ.வ.குப்பம்), மகளிர் திட்ட இயக்குநர் உ. நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.