• வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் பணி ஆய்வுக் கூட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன், தலைமையில் வேலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களின் பணி, வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்ததாவது.
அனைத்து துறைகள் சார்ந்த தூய்மை பணியாளர்களிடம் அவர்கள் பெரும் ஊதியம் பற்றி விசாரிக்கப்பட்டது. அவ்வாறு விசாரணை செய்யும்போது அவர்கள் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதினால் கடந்த ஆண்டு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் மாற்றி அமைக்கப்பட்ட ஊதியத்தினை அவர்களுக்கு வழங்கவும், நிலுவையில் உள்ள தொகையினை எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் அவர்களின் கணக்குகளில் ஒப்பந்ததாரர் மூலம் செலுத்தி அவ்வாறு செலுத்தியதற்கான அறிக்கையினை டெல்லி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார்.
தூய்மை பணியாளர்கள் அவர்களின் பி.எப். சம்பந்தமான கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு செல்லும்போது அவர்களை அவமரியாதையாக நடத்துவதாகவும், உள்ளே அனுமதிக்காதது தொடர்பாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்த புகாரியின்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பணி செய்யும் நேரங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு விசாகா கமிட்டி என்று இருப்பதை பெண் தூய்மை பணியாளர்கள் அறிந்திடும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அறிவிப்புகள் அனுப்பவும் அவர்களிடம் நேரில் இந்த கமிட்டி குறித்து எடுத்துரைக்கவும் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக ஐசிசி கமிட்டி உறுப்பினரிடம் தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ போன்ற விவரங்களை அறிந்திடும் பொருட்டு அவர்களுக்கு ஹுமாங்க ஆப் என்று இருக்கும் செயலியை அவர்களது செல்பேசியில் பதிவிறக்கம் செய்து கொடுக்கும்படியும், தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வருடத்திற்கு இரண்டு வழங்குமாறும், அவர்கள் பணி செய்ய பணி செய்யும்போது பாதுகாப்பிற்காக காலணிகள், கையுறை, முககவசம், பூட்ஸ் போன்றவற்றை ஒப்பந்ததாரர் வழங்கவும், தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அவர்கள் அறியும் பொருட்டு காப்பீட்டின் நகல் ஒன்றினை அவர்களிடம் கொடுக்கும்படியும், அவர்களுக்கு தேவையான மருத்துவ ஹெல்த் செக்கப் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை உரிய மருத்துவர் மூலம் வழங்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
தூய்மை பணியாளர்கள் அளிக்கும் புகார்கள்மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-க்கு அறிவுறுத்தினார்.
தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அது தொடர்பான புகாரினை 011 24 64 8924 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், தூய்மை பணியாளர்கள் அவர்களின் பிரச்சனைகளை என்.சி.எஸ்.கே.என்ற இணையதளத்தின் மூலமாகவும் தெரிவிக்கலாம் என தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்தார்.
பின்னர் தாட்கோ மூலம் விபத்தினால் இறந்த 2 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தாரிடம் விபத்து இறப்பு உதவித் தொகையாக தலா ரூ.5 இலட்சம் வீதம் ரூ.10 இலட்சத்திற்கான காசோலை மற்றும் 3 தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை பணியாளர் நலவாரிய மின்னணு அடையாள அட்டைகளை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வே.முத்தையன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment