• வேலூர் அரசு அருங்காட்சியகத்தை மரு.மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு.
· வேலூர் அரசு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு. மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு. மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேலூர் கோட்டை வளாகத்தில் தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் 1985-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் கலை, தொல்லியல், மானுடவியல், புவியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் சார்ந்த வரலாற்று விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் 16 அடி உயரமுள்ள டைனோசர் மாதிரியும், 18-ஆம் நூற்றாண்டை சார்ந்த 2 பீரங்கிகளும் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள கற்சிற்ப பூங்காவில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து கண்டுடெக்கப்பட்ட கற்சிற்பங்களும், வீர கற்களும், கல்வெட்டுகளும், 2 வெடிமருந்து குடுவைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் ரூ.96.88 இலட்சம் மதிப்பில் காட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு மற்றும் நவீன மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக வரலாற்று நிகழ்வுகள் மற்றும் புராதான சின்னங்கள் மறுசீரமைக்கப்பட்டு சுவர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும், புதிய காட்சி பலகைகளையும், கலை பொருட்களுக்கு என புதியதாக அமைக்கப்பட்டுள்ள மாடங்களையும், கற்சிற்பங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புதிய மாடங்களையும், எல்.இ.டி விளக்குகளையும், புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலி இயக்கத்துடன்கூடிய டைனோசர் விலங்கையும், 3D திரையரங்கத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கற்சிற்பங்கள் அமைந்துள்ள அறைக்கு அபாய ஒலி அறிவிப்பு (Alarm) பாதுகாப்பு வசதியினை ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.2.50 கோடி மதிப்பில் வேலூர் அருங்காட்சியகத்தில் கூடுதலாக அமையவுள்ள அருங்காட்சி பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கூடுதல் தலைமை செயலாளர் இப்பணிக்கான ஒப்பந்தத்தை விரைவில் கோரவும், பின்னர் ஒப்பந்தத்தை இறுதி செய்து விரைவாக பணிகளை தொடங்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் படவேட்டான், அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment