• வண்டறந்தாங்கல் ஊராட்சியில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணி.
· காட்பாடி, வண்டறந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வள துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
காட்பாடி வட்டம், வண்ட்றந்தாங்கல் ஊராட்சியில் ரூ.77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் அமைக்கும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அறிவுசார் மையத்தின் சிறப்பம்சங்கள்
இந்த அறிவுசார் மையம் 203.90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே கழிவறை மற்றும் சமையலறைக்கூடம் கட்டப்படவுள்ளது. இப்பணியானது தொடங்கப்பட்டு அடுத்த 4 மாத காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
இந்த அறிவுசார் மையத்தின் மூலம் வண்ட்றந்தாங்கல், அண்ணாநகர், வண்ட்றந்தாங்கல் காலனி, இந்திரா நகர், புது குடியிருப்பு, லட்சுமிபுரம், கோட்டை மோட்டூர், அக்கிரெட்டி புதூர், புளியாமரத்தூர், தென்னமரத்தூர், வெங்கடேசபுரம், சல்லாவூர், சொரக்கால்பேட்டை, கிறிஸ்டியான்பேட்டை, சித்தப்பாறை ஆகிய 15 கிராமங்களை சார்ந்த 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர் தெரிவித்ததாவது.
வண்ட்றந்தாங்கல் ஊராட்சியில் ரூபாய் 77.89 இலட்சம் மதிப்பில் கிராம அறிவுசார் மையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் நான்கு மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு இந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைய கூடிய வகையில் விரைவில் திறக்கப்படும்.
வண்ட்றந்தாங்கலை சுற்றியுள்ள 15 கிராமங்களை சார்ந்த சுமார் 3000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடையக் கூடிய வகையில் இந்த திட்டம் இங்கே தாட்கோ மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மையமானது பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையிலே சமுதாய கூடமாகவும் பயன்படும் வகையில் கட்டப்பட உள்ளது.
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வண்ட்றந்தாங்கல் ஊராட்சியில் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என கூறிய பொழுது சட்டமன்றம் இருந்தாலும் இடையிலே ஒரு நாள் நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டுகிறேன் என்று தெரிவித்து வந்துள்ளேன். இதேபோல் திறப்பு விழாவிற்கும் நானே வந்து திறந்து வைப்பேன்.
சட்டமன்றத்தில் கலைஞருக்கு அடுத்தபடியாக 52 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக நான் இருப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் இந்த காட்பாடி தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன தேவைகள் என்பதை அறிந்து அதனை அவ்வப்போது நிறைவேற்றி வருகிறேன். 1971 ஆம் ஆண்டு காட்பாடி சட்டமன்ற தொகுதியில் என்னை கலைஞர் அவர்கள் போட்டியிட வேண்டும் என தெரிவித்த போது நான் முதன் முதலில் சென்னையில் இருந்து நேராக வந்து இறங்கிய இடம் இந்த வண்ட்றந்தாங்கல். அதனால் இந்த ஊராட்சிக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ அதை என்னிடம் பொதுமக்கள் அல்லது ஊராட்சி மன்ற தலைவர் தெரிவிக்கும்போது உடனே நிறைவேற்றி வருகிறேன். இன்னும் என்ன திட்டங்கள் தேவை என்பதை தெரிவித்தாலும் அதை அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தில் இருந்தோ அல்லது என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்து தர நான் தயாராக இருக்கிறேன் என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வே.வேல்முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கவிதா சுதா சேகர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தணிக்காசலம், ஒன்றியக் குழு உறுப்பினர் சாந்திவீரசாமி, வண்டறந்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராகேஷ், தாட்கோ செயற்பொறியாளர் சுதா, உதவி செயற்பொறியாளர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment