• அணைக்கட்டு மற்றும் கீ.வ. குப்பம் வட்டார சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.

அணைக்கட்டு
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு அணைக்கட்டு கே.கே.எஸ் மஹாலில் சமுதாய வளைகாப்பினை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அணைக்கட்டு வட்டாரத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை மாவட்ட ஆட்சித் தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர்.
கீ.வ.குப்பம்
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். கதிர் ஆனந்த், கீ.வ.குப்பம் கே.ஆர். திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கீ.வ.குப்பம் வட்டாரத்திற்குட்பட்ட 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைகளை மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கினர்.
இந்நிகழ்வுகளின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் தன்னுடைய குழந்தையை ஆறு மாத காலம் வரை வளர்த்தெடுக்கும் 1000 நாட்களுக்கு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களையும், சிகிச்சைகளையும் அளித்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்கள். இந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கான தொடர் நிகழ்வின் ஒரு பகுதியாக வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்கால தலைமுறையை வளர்த்தெடுக்கும் பொறுப்பு ஒரு தாய்க்கு தான் உள்ளது. ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் 1000 நாட்கள் வரை அதாவது குழந்தை பிறந்த ஆறு மாத காலம் வரை சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்த குழந்தை எதிர்காலத்தில் ஆரோக்கியமான குழந்தையாக இருக்கும்.
மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படுகிறது. எனவே பெண்கள் கருவுற்ற காலங்களில் அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறிப்பிடும் காலத்தில் சென்று முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தங்களுக்கு ஏதேனும் சிரமங்கள் இருந்தாலும் அப்பிரச்சனைகள் குறித்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர்களிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளலாம்.
அணைக்கட்டு வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் மலைப்பகுதிகளில் வாழும் தாய்மார்கள் தொடர்ந்து நம்முடைய செவிலியர்களாலும், மருத்துவர்களாலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. நம்முடைய அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியின் காரணமாக ரூபாய் 60 கோடி மதிப்பில் அணைக்கட்டு பகுதியில் ஒரு பொது மருத்துவமனை விரைவில் கட்டப்பட உள்ளது.
ஒரு பெண் கருவுற்ற காலத்திலும் தாய்மை காலத்திலும்தான் போற்றப்படுகிறார். நம்முடைய வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சியின் துறையின் 8 வட்டாரங்களிலும் தலா 100 கர்ப்பிணிகள் என 800 கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கீ.வ. குப்பம் வட்டாரத்தில் நடைபெறும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தன்னுடைய செலவில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் சீர்வரிசைகளை வழங்கி உள்ளார்.
ஒவ்வொரு கர்ப்பிணி தாய்மார்களும் அங்கன்வாடி மையப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ சிகிச்சைகளை தவறாது கடைப்பிடித்து ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்து சிறந்த எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக் குழுத் தலைவர் சி.பாஸ்கரன், கீ.வ.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவர் ரவிசந்திரன், ஒன்றிய குழு துணைதலைவர் சித்ரா குமாரபாண்டியன், கீ.வ.குப்பம் ஒன்றியக் குழுத் துணைதலைவர் பாரதிவெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ணமேனன், வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி விஷ்ணுபிரியா (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் அசோக்குமார், கவிதா சந்திரசேகர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சீதாராமன், ஜெயா முருகேசன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி சாந்தி பிரியதரிசினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment