• வேலூர் மாநகராட்சி பணிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

·        வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கால்வாய்களில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர்  பார்வையிட்டு ஆய்வு.

வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2 சத்துவாச்சாரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கால்வாய்களில் திடக்கழிவுகளை அகற்றும் பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமான பணி போன்ற பல்வேறு திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மாவட்ட ஆட்சித் தலைவர் சர்க்கார் தோப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணியின் ஒரு பகுதியாக நடைபெற்று வரும் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளையும், பாலாற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கழிவு நீரை கொண்டு செல்லும் கழிவு நீர் குழாய்கள் அமைப்பதற்கான தூண்கள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாலாற்றின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு கழிவு நீர் குழாய்களை கொண்டு செல்வதற்காக மொத்தம் 24 எண்ணிக்கையிலான தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் இதுவரை 19 எண்ணிக்கையிலான தூண்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 5 தூண்கள் அமைப்பதற்கான பணிகளை விரைந்து முடிக்கவும், பின்னர் கழிவு நீர் குழாய்களை பொருத்தவும் மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் தென்றல் நகர் பகுதியில் 77 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதியில் மொத்தம் 77 மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் குழாய்கள் அமைக்கப்பட வேண்டும். கழிவுநீர் குழாய் பதிப்பதற்கான இடத்தினை வேலூர் வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனடியாக இணைந்து ஆய்வு மேற்கொண்டு இறுதி செய்யும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் சத்துவாச்சாரி பாலாறு கார்டன் பகுதியில் நிக்கல்சன் கால்வாயில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை ஹிட்டாச்சி இயந்திரம் கொண்டு தூர்வாரப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கால்வாயில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்றும் பணியை மழைக்காலத்தில் மட்டும் மேற்கொள்ளாமல், அவ்வப்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் தூர்வாரி பராமரிக்கும்படி மாவட்ட ஆட்சி தலைவர் மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அலமேலுமங்காபுரத்தில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுகாதார மையத்தில் உள்நோயாளிகள் பிரிவு, ஸ்கேன் அறை, மருந்தகம், பிரசவ அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பகுதியில் தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழும நிதியின் கீழ் ரூபாய் 75 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுகாதார மையத்திற்கான புதிய கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சத்துவாச்சாரியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இச்சுகாதார மையத்தில் 15-ஆவது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 22 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இம்மையத்தில் டயாலிசிஸ் கருவிகளை பொருத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் தோட்டப்பாளையம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சுமார் 665 மீட்டர் நீளத்திற்கு  கழிவு நீர் குழாய் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் இதுவரை 375 மீட்டர் நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 290 மீட்டர் நீளத்திற்கு பணிகள் நடைபெற வேண்டி உள்ளதாகவும் மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இப்பகுதியானது மிகுந்த போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதியாகவும்,  மாநகரின் முக்கிய பகுதியாகவும் இருப்பதால் காவல்துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்தியானந்தம், மாநகர நல அலுவலர் மரு.பிரதாப்குமார், உதவி ஆணையாளர் சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், சுகாதார அலுவலர்  சிவக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.