• வேலூர் மாவட்ட நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்.

·        வேலூர் மாவட்டத்தில்  நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக 2025-26ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சி தலைவர்.

தமிழகத்தைச் சார்ந்த நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக 2025-26-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   

                விளையாட்டை மேம்படுத்தவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1978 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் நலிந்த நிலையிலிருக்கும் சிறந்த விளையாட்டு வீரர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பங்கள் பெற்று, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6000/-  வழங்கப்பட்டு வருகிறது.

       தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது நலிந்த நிலையில் (வருமானம் குறைந்து, வேலை இல்லாத நிலை போன்றவை) இருத்தல் வேண்டும். அரசு / தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet) வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.

      சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச/ தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.

       ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் அகில இந்திய பல்கலை கழங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் / இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச /  தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

                2025-ம் வருடம் ஏப்ரல் மாதம் (30.04.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

                விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூபாய் 6000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். (இதற்கான 2025ம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்திட வேண்டும்)

      தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் http://sdat.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் கிடைக்கும் மற்றும் வேலூர்  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பப் படிவம் பெற்று கொள்ளலாம். மேலும் விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025ஆம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), வருமானச் சான்று (2025ஆம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), ஒய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில் / விளையாட்டு சார்ந்த) ஆகியவை விண்ணப்பத்துடன் இணைத்தனுப்ப வேண்டும்.

        விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பதாரர் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் மட்டுமே வழங்கிட வேண்டும்.  சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வரவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடத் தேவையில்லை.

                ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் 31.07.2025 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.07.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதாரர் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.

                எனவே வேலூர் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

 


Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.