• உயர்கல்வி பயில இயலாத மாணவர்களுக்கான குறை தீர்வு கூட்டம்.
· அரசு பள்ளிகளில் 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்து பல்வேறு காரணங்களால் உயர்கல்வி பயில இயலாத மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம்.
வேலூர் மாவட்டத்தில் 2024-25-ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பயின்ற அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்க்கை பெற செய்ய 29.05.2025 முதல் 31.10.2025 வரை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாவட்ட திட்ட அலுவலகம், காந்தி நகரில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை (9788859190) உருவாக்கப்பட்டு உயர்கல்வி பயில ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று நிதி, குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வியை தொடர இயலாத மாணவ, மாணவிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவும், அவர்களின் குறைகளை களையவும், மாதந்தோறும் முதல் வெள்ளிகிழமை மற்றும் மூன்றாவது வெள்ளிகிழமை மாணாக்கர்களுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 8, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து பல்வேறு காரணங்களால் உயர்கல்வி பயில இயலாத மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் 06.06.2025 மற்றும் 20.06.2025, 04.07.2025, 18.07.2025 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் ஐந்தாவது குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற மாணாக்கர்களுக்கான சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் 24 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுக்கான கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சி தலைவர்-டம் வழங்கினார்கள்.
ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் தனித்தனியே மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் மாணாக்கர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், உயர்கல்வி பயில அவர்களுக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி சேர்க்கைக்கு வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகளை வழங்கினார். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாடப்பிரிவுகளிலும், பாரா மருத்துவ துறையில் 4 மாணவ, மாணவிகளுக்கும், வேளாண்மை துறையில் 1 மாணவருக்கும், பாலிடெக்னிக் பிரிவில் 01 மாணவருக்கும், பொறியியல் பாடபிரிவில் 3 மாணவ, மாணவிகளுக்கும் என 21 மாணவ, மாணவிகளின் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் பரிந்துரை செய்தார். மேலும் 3 மாணவ, மாணவிகளிடமிருந்து பள்ளி கல்வி துறை சார்பில் மாற்று சான்றிதழ் உள்ளிட்டவை வேண்டிய கோரிக்கையும் வரப்பெற்றது.
மேலும் மாணவர்களின் மனுக்களை பரிசீலனை செய்த ஆட்சியர் உயர்கல்வி பெறும் பொருட்டு கூட்டத்தில் கலந்து கொண்ட பிற துறை அலுவலர்களான ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மண்டல இணை இயக்குநர் (கல்லூரிகள்), அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் போன்றவற்றிலிருந்து வருகை புரிந்த அலுவலர்களிடம் மாணவர்களின் கோரிக்கை மனு மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சி தலைவர் அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக நான் முதல்வன் திட்டத்தில் அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின்கீழ் சென்னை ஐஐடி-க்கு தேர்வாகியுள்ள காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் ஸ்ரீசரண் என்ற மாணவருக்கு மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி மடிகணினியை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.சசிகுமார், உதவி திட்ட அலுவலர் ஜோதீஸ்வர பிள்ளை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment