நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும்.

  • நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும் -    பழ.நெடுமாறன் கருத்து.

     நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.

     குடியாத்தம் நெல்லூர்பேட்டை நகராட்சி உயர்நிலை பள்ளியில் 1954-1955-ம் ஆண்டு 6-ம் படிவம் படித்த மாணவர்களின் 71-ம் ஆண்டு குடும்பக் கூடல் விழாவின் நிறைவு விழா வேலூரில் நடைபெற்றது.

     இதில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வாழ்த்துரை வழங்கி பேசியதாவது:

     குடும்பக் கூடல் நிகழ்ச்சி என்பது புதுமையாக இருக்கிறது. இது ஆங்கில அறிஞர் ஜான்சன் சொல்வது போல, பாடும் பறவைகளின் கூடு என்பது போல இங்கே குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர்.

     விஐடி வேந்தர் விசுவநாதன் பேசும்போது, மாணவர்களின் படிப்பில் பெற்றோர் பங்குதான் அதிகம் என்று சொன்னார்கள். உண்மை தான், பெற்றோர்கள் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதின் காரணமாக கவலையற்ற மாணவர் வாழ்வில் ஈடுபட்டோம்.

     ஆசிரியர்கள் நமக்காக உழைத்து, நம்மை முன்னேற்ற கல்வியை வழங்கினர். நாம் வளர்ந்து இருப்பதற்கு அடித்தளமிட்ட பெருமை ஆசிரியர்களுக்கு உண்டு, பெற்றோர்களுக்கும் உண்டு.

     சங்க காலத்தில் புலவர் பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் எப்படி நட்பு கொண்டு பழகினார்கள் என்பதை சங்க இலக்கியம் நமக்குச் சொல்கிறது.

     நட்பு என்பது பழமையான நண்பரின் நட்புரிமையைப் பாராட்டுவதே ஆகும் என்று திருவள்ளுவர் கூறி இருக்கிறார்.

    நானும், வேந்தர் விசுவநாதனும் சட்ட பேரவையில் எதிரும் புதிருமாக இருந்திருக்கிறோம். நான் எதிர்க்கட்சி வரிசையில் அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் ஆளும் கட்சியில் இருந்து அப்போது வேந்தர் விசுவநாதனை பதில் அளிக்க வைப்பார்கள்.

     அவர் எங்களுடைய உள்ளங்கள் சிறிதளவு புண்படாமல் பார்த்துக் கொண்டு பதில் சொல்வார்.

     அரசியல் ஒரு தத்துவமாக வெவ்வேறாக இருக்கலாம். அதுதான் உண்மையான ஜனநாயகம். கட்சி வேறுபாட்டின் காரணமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் எதிரிபோல நினைப்பது கேடான விஷயம் உலகத்திலே வேறு எதுவும் இல்லை.

     நட்பு என்பது உண்மையான உள்ளன்பாக இருக்க வேண்டும் அதில் எந்த வேறுபாடும் இருக்கக்கூடாது.

     இவ்வாறு அவர் பேசினார்.

     விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:

     நாம்தான் குடும்பக் கூடல் விழாவில் 71 ஆண்டாக தொடர்ந்து சந்தித்து இருக்கிறோம். இது உலகில் வேறு எங்கும் நிகழவில்லை. 

     அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற வேண்டும்.  வெளிநாடுகள் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறது.

     கல்விக்கான முக்கியத்துவத்தை அரசு புரிந்து கொள்ளவில்லையா என்று கேள்வி எழுகிறது. பாதுகாப்பு துறை, வெளியுறவு கொள்கையைப் போல கல்வியை சேர்த்து ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒத்துழைத்தால் ஒரு தொடர்ச்சி இருக்கும்.

     தமிழகத்தில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான உறவில் பிரச்சினையால் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 15 பல்கலை கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படவில்லை.

     பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாமல் செயல்படுவது போன்ற நிலைமை பல்கலைகழங்களில் உள்ளது. இந்த நிலை நீடிக்கக்கூடாது. கல்வியை வழங்குவதில் அரசை விட பெற்றோருக்கு தான் அதிக அக்கறை உள்ளது.

    தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னணி பெற்று விளங்குவதற்கு கல்வி ஓர் அடித்தளமாகும்.

     இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு வந்தாலும், தனி நபர் வருமானம் என்பது 3,000 டாலர்களாக உள்ளன. ஆனால், ஜப்பானில் தனி நபர் வருமானம் 36,000 டாலர்களாக உள்ளன. இது ஜெர்மனியில் 20 மடங்கு அதிகமாகும்.

     நாட்டின் 80 சதவீத சொத்தை 10 சதவீதம் பேர் வைத்திருக்கின்றனர். 50 சதவீதம் சொத்தை 3 சதவீதம் பேர் வைத்திருக்கின்றனர்.

     ஸ்டார்ஸ் திட்டத்தில் 1100 ஏழை மாணவர்களுக்கு இலவச மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 11000 பேருக்கு உயர்கல்வி படிக்க உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

     எனவே அனைவருக்கும் தரமான கல்வி வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

     இவ்வாறு அவர் பேசினார்.

     திரைப்பட இயக்குநர் சேரன் பேசும்போது, “குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் உருவாக்கி கொடுத்த பாதையை நாம் பின்பற்ற வேண்டும். தகவல் தொடர்புகளை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கல்வி மூலம் மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதற்காக அரசியல் என்பதை மாணவப் பருவத்தில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் முக்கியம் என்பதை அறிய கல்வி முக்கியமாகும் என்றார்.

     முன்னதாக குடியாத்தம் நெல்லூர்பேட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1954-1955-ம் ஆண்டு 6-ம் படிவம் படித்த மாணவர்களின் 71-ம் ஆண்டு குடும்பக் கூடல் தொடக்க விழா நடைபெற்றது.

     விழாவில் விழா குழு செயலாளர் பதுமனார் வரவேற்று பேசினார். விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா குழு செயலாளர் அன்பரசு நன்றி கூறினார்.

 





Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.