• காட்பாடி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகள்.

  • காட்பாடி, அம்மூண்டி அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.46.44 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மற்றும் வெப்பாலை கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.23.08 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு நீர்வள துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அம்மூண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.46.44 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை மற்றும் ரூ.23.08 கோடி மதிப்பீட்டில் காட்பாடி வட்டம், வெப்பாலை கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிகளுக்கு சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் அம்மூண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அம்மூண்டி கிராமம் அருகே பாலாற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையில் இருந்து தொலைக்கல் 90.00 கி.மீட்டரில் இத்தடுப்பணை அமையவுள்ளது. இத்தடுப்பணை  அமைக்க மாநில நிதியின் கீழ் ரூ.46.44 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்தடுப்பணையானது 470 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்படஉள்ளது. இத்தடுப்பணையானது இருபுறங்களிலும் மொத்தம் 10 மணற்போக்கிகள் கொண்டு அமைக்கப்படவுள்ளது. இத்தடுப்பணையானது 10.27 மில்லியன் கனஅடி நீர் தேக்கிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்படுப்பணையின் முழு நீர் மட்டத்தில் இருக்கும் போது 720 மீட்டர் நீளத்திற்கும், 92 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுப்படுகையில் தண்ணீர் நிற்கும். இத்தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 107836 கன.அடி தண்ணீர் வெளியேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பணை அமைக்கப்படுவதினால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு பாலாற்றின்  இருபுறங்களிலும் உள்ள 4 கிராமங்கள் (அம்மூண்டி, கார்ணாம்பட்டு, கீழ்மின்னல் மற்றும் அரப்பாக்கம்) 40 கிணறுகள் மற்றும் 600.80 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இத்தடுப்பணை அமைக்கப்படுவதால் 465 விவசாயிகள் நேரடியாகவும் மற்றும் சுமார் 9,700 நபர்கள் மறைமுகமாகவும் பயனடைவர்.  இத்தடுப்பணை அமைக்கும் பணியை நீர்வள துறை அமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

 வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் வெப்பாலை கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வெப்பாலை கிராமம் அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையில் இருந்து தொலைக்கல் 16.20 கி.மீட்டரில் இத்தடுப்பணை அமையவுள்ளது. இத்தடுப்பணை அமைக்க மாநில நிதியின் கீழ் ரூ.23.08 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்தடுப்பணையானது 198 மீட்டர் நீளமும், 1.50 மீட்டர் உயரம் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இத்தடுப்பணையானது இருபுறங்களிலும் மொத்தம் 6 மணற்போக்கிகள் கொண்டு அமைக்கப்படவுள்ளது. இத்தடுப்பணையானது 7.36 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்படுப்பணையில் முழு நீர் மட்டத்தில் இருக்கும் போது 640 மீட்டர் நீளத்திற்கும், 35 ஏக்கர் பரப்பளவில் ஆற்றுப்படுகையில் தண்ணீர் நிற்கும். இத்தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 61000 கன.அடி தண்ணீர் வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தடுப்பணை அமைக்கப்படுவதினால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு பொன்னை ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள 6 கிராமங்கள் (வெப்பாலை, மேல்பாடி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர் மற்றும் ஸ்ரீபாதநல்லூர்), 275 கிணறுகள் மற்றும் 600 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இத்தடுப்பணை அமைக்கப்படுவதால் 4,572 விவசாயிகள் நேரடியாகவும் மற்றும் சுமார் 8,000 நபர்கள் மறைமுகமாகவும் பயனடைவர். இத்தடுப்பணை அமைக்கும் பணியை நீர்வள துறை அமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வள துறை அமைச்சர் காணொளி வாயிலாக பேசியதாவது.

நீர்ரத்து கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் செம்மையாக மேற்கொள்ளப்பட்டு ண்டல்கள் மற்றும் செடி, கொடிகள் முறையாக அகற்றப்பட்டால் நீர் வளமானது எந்த காலத்திலும் வீணாகாது. நான் 2021 ஆம் ஆண்டு நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான கால்வாய்கள் தூர்ந்து இருந்தன. ஒரே ஒரு கால்வாய் மட்டும் நல்ல நிலையில் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு இருந்தது. இந்த விவரங்களை தமிழ்நாடு முதலமைச்சர்-டம் எடுத்து சென்று கால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட வேண்டும் என்பதை தெரிவித்தேன். தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து கால்வாய்களையும் தூர்வார அப்பொழுது உத்தரவிட்டார்கள்.

அதன் அடிப்படையிலேயே டெல்டா மாவட்டங்கள் உட்பட 24 மாவட்டங்களில் 13 லட்சம் க்கர் நிலங்கள் பயன்படக்கூடிய வகையிலே 5913 கிலோ மீட்டர் நீளத்திற்கு கால்வாய்கள் தூர்வாருவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற உள்ளது. மேட்டூர் அணையானது விவசாய பாசனத்திற்காக ஜூன் மாதத்தில் திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக இந்த கால்வாய்கள் தூர் வாரும் பணிகளை முடிக்க வேண்டும். அடுத்து வருவது தேர்தல் காலம் என்பதால் நீர்வள துறை செயலாளர் உட்பட அரசு அதிகாரிகள் இந்த பணிகளை எவ்வித தொய்வும் இன்றி விரைவாக நடைபெறுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அடுத்தபடியாக வேலூர் மாவட்டம், காட்பாடியில் இரண்டு தடுப்பணை பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பெரிய ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி அந்த இடங்களில் சுமார் 5 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைப்பதன் மூலம் அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபொழுதுதான் முதன் முதலில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையானது காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக கட்டப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை. எனினும் அந்த தடுப்பணையின் காரணமாக அந்த பகுதியில் தண்ணீரானது கடல் போல் தேங்கி அதன் மூலம் நீர்மட்டம் உயர்ந்து விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.

அந்த வகையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு விவசாயிகள் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படாதவாறு இத்தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் மூலம் விவசாயத்திற்கு தேவையான பாசன கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாய பாசனம் பயனடைகிறது. அரசு அலுவலர்கள் சிரமம் பார்க்காமல் இந்த துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என நீர்வள துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வள துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், நீர்வள துறை முதன்மை தலைமை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், தலைமை பொறியாளர் சி.பொதுபணி திலகம், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வே.வேல்முருகன், வேலூர் மாநகராட்சி துணைமேயர் மா.சுனில்குமார், காட்பாடி ஒன்றிய குழு துணைதலைவர் எஸ்.சரவணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுலோக்சனா கிருபாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் நந்திவர்மன், கண்காணிப்பு பொறியாளர் பவழக்கண்ணன், செயற்பொறியாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



 

Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.

• வேலூர் வாசகர் வட்டம் - டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா.