• அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி ஆலோசனை கூட்டம்.
- தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையிலும், தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர், செலவின பார்வையாளர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டுமெனவும், தேர்தல் தொடர்பான புகார்களை சம்மந்தப்பட்ட தொகுதியின் பார்வையாளர்களிடம் தொலைபேசி எண்ணிலும், குறிப்பிட்ட பார்வையாளர் நேரங்களில் நேரடியாகவும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் இதர பிரச்சாரங்களுக்கான அனுமதியை சுவிதா (Suvidha) செயலியின் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ள வேண்டுமெனவும், கடந்த காலங்களில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல்களை போல அமைதியான முறையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நடைபெறும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களின் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டுமெனவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் விரிவான விளக்கங்களை எடுத்துரைத்தனர்.
குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள வாக்குச்சாவடி மையங்களை கணக்கில் கொள்ள வேண்டுமென அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் உறுதி அளித்தனர்.
மேலும் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் தகவல் சீட்டினை எந்தவொரு அரசியல் கட்சியின் பிரதிநிதிகளிடம் வழங்காமல் வாக்காளர்களிடம் நேரடியாக வழங்க வேண்டுமென அரசியல் கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் தகவல் சீட்டு சம்மந்தபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மூலமாக நேரடியாக வாக்காளர்களிடம் வழங்கப்படும். எந்தவொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடமோ அல்லது எந்தவொரு வேட்பாளரின் பிரதிநிதிகளிடமோ வழங்கப்படாது என மாவட்ட தேர்தல் அலுவலர் உறுதியளித்தார்.
அனைத்து வாக்கு சாவடிகளிலும் வாக்கு பதிவின்போது காவல் துறையின் கண்காணிப்பினை தீவிரப்படுத்த வேண்டுமென அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின்படி மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையின் சார்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அனைத்து வாக்குச்சாவடிகளின் உட்புறமும், வெளிபுறமும் இணைய ஒளிப்பரப்பு (Web Casting) மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரு சில இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக மறைந்த தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மறைந்த தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட வேண்டியதில்லை ஆனால் அச்சிலைகளில் அமைந்துள்ள அரசியல் கட்சிகளின் சின்னங்கள், பெயர் பலகைகள் மற்றும் இதர சுவர் ஓவியங்கள் மறைக்கப்படும் என தெரிவித்தார். அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களும் இதனை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காட்பாடி மற்றும் கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ரீமன்சுக்லா, வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் யுகல்கிஷோர் பண்ட், குடியாத்தம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் மிர்தாரிக்அலி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சந்தீப்குமார், வேலூர் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் காவல் பார்வையாளர் டாக்டர் கவுஸ்தூப்ஷர்மா, காட்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அஷ்வின் டி கவுடா, வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அட்டேஷாம்அன்சாரி, அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் அர்ஜுன் லால் ஜட், கீ.வ.குப்பம் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் பிரதீப்குமார் சிங் செங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment