• வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் சர்வதேச மகளிர் தினம்
· வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் சர்வதேச மகளிர் தினம்
· நாடாளுமன்றம், சட்ட பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் – விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்.
நாடாளுமன்றம், சட்ட பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசினார்.
வேலூர் விஐடி பல்கலைகழகத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது:
உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, பெண்களுக்கு சமமான அந்தஸ்து வழங்கப்படவில்லை. உலக மக்கள் தொகையில் பெண்கள் சுமார் 48.5% உள்ளனர். இந்தியாவிலும் அதே எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் பட்டியலில் உள்ள 193 நாடுகளில் 19 பெண் அதிபர்களும், 22 பெண் பிரதமர்களும் மட்டுமே உள்ளனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட 106 நாடுகளில் இதுவரை ஒரு பெண் கூட அதிபர் அல்லது பிரதமராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.
உலகளவில் அமைச்சரவையில் 23 சதவீதம் அளவுக்கு பெண்கள் உள்ளனர். இந்தியாவில் மக்களவையில் 14 சதவீதம் பெண் உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களில் சட்டப்பேரவைகளில் 10 சதவீதம் பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2023-இல் நிறைவேற்றப்பட்டது. இது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது.
இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு 80 சதவீதமாக உள்ள நிலையில், பெண்களில் 62 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
கேரளா 95% பெண் கல்வியறிவுடன் முதலிடத்தில் உள்ளது. பீகார் 50% கல்வியறிவுடன் பின் தங்கியுள்ளது.
இந்தியாவில் 2016-ம் ஆண்டின் புள்ளி விவரப்படி 22 கோடி குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதில் திருமணமானவர்களில் 10 கோடி பேர் 15 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பள்ளி படிப்பை 5, 10, 12-ம் வகுப்புகளுடன் பாதியிலேயே நிறுத்திவிடுவதால் உயர்கல்வி பெற வாய்ப்பின்றி குழந்தை திருமணங்கள் நடக்கின்றன.
வடஆற்காடு மாவட்டங்களில் படிக்கும் அனைவரும் உயர்கல்வி பெறும் வகையில் அனைவர்க்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் 11,000 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 67% பெண்கள் ஆவர். நாட்டிலேயே விஐடி பல்கலைக்கழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
தமிழக அரசு புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு உயர்கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இது தனியார் பள்ளிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். அப்போதுதான் பெண் தொழிலாளர் பங்களிப்பு அதிகரிக்கும்.
பாலின சமத்துவக் குறியீட்டில் இந்தியா 131-வது இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், கொரியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்றவை முதல் 20 இடங்களுக்குள் உள்ளன. அமெரிக்கா 45-வது இடத்திலும், வங்கதேசம் 24-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் 148–வது இடத்தில் உள்ளது. இதில் நாம் முன்னேற்றம் அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விஐடி துணைதலைவர் சேகர்விசுவநாதன் பேசும்போது, பெண்கள் பொருளாதாரத்தில் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் அனைவரும் கல்வி பெறும்போது சமூகம் மேம்பாடு அடையும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். பாலின சமத்துவம் பெற வேண்டும். பணியிடங்களில் பெண்களுக்கு உள்ள பாகுபாட்டை மாற்றிட வேண்டும். நாட்டிலேயே சொத்துரிமையில் பெண்களுக்கு சமபங்கு என்ற சட்டத்தை முதலில் கொண்டு வந்தது தமிழ்நாடுதான். பெண்களின் வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது” என்றார்.
சிறப்பு விருந்தினராக ஜெர்மனியின் போயிங் பொறியியல் பிரிவின் இயக்குநர் லிண்டா சார்டோ பேசும்போது, “மாணவிகள் எதிலும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்” என்றார்.
கவுரவ விருந்தினராக ரெட் பஸ் மனிதவள பிரிவின் துணைதலைவர் திவ்யா அமர்நாத் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்த பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் ஜெயபாரதி, மாணவர் நல இயக்குநர் நைஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comments
Post a Comment