• விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதனுக்கு பாராட்டு விழா.
· தாய்லாந்து பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதனுக்கு பாராட்டு விழா.
தாய்லாந்து பாங்காங் நகரில் உள்ள ராஜமங்கலா பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற விஐடி துணைதலைவர் சங்கர் விசுவநாதன்-க்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் விஐடி துணை தலைவர் சங்கர்விசுவநாதனுக்கு அருளாசி வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.வெங்கடசுப்பு வரவேற்று பேசினார்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்து பேசும்போது, “வடஆற்காடு மாவட்டம் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. கல்வி ஒன்று தான் நம்மை உயர்த்தும். அது தான் அழியாத, நிரந்தர செல்வம். அப்படியான உயர்கல்வியை அனைவருக்கும் வழங்குவதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம்.
இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 28 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்துடன் நாட்டிலேயே முதன்மையாக இருந்தாலும் வடஆற்காடு மாவட்டம் 30 முதல் 38 சதவீதத்துடன் பின்தங்கி உள்ளது.
இந்த மாவட்டங்களில் உயர்கல்வியை மேம்படுத்த அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை செயல்படுத்தி வருகிறது. இதற்கு ரூ.1.75 கோடி நிதி திரட்டி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது. கல்வி ஒன்று தான் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்” என்றார்.
விஐடி துணைதலைவர் சங்கர்விசுவநாதன் ஏற்புரையாற்றி பேசும்போது, “மனிதநேயத்தோடு நான் வாழ, வெற்றி சிகரங்களை தொட எனக்கு ஏணியாக இருந்த எனது தந்தை கோ.விசுவநாதனுக்கு இந்த கவுரவ பட்டத்தை காணிக்கையாக்குகிறேன். அவரிடம் வார்த்தை குறைவு, அவர் மவுனமே எனது முதல் பாடநூல். எனது கனவு இலக்கை அடைய ஊக்கம் கொடுத்தவர் எனது மனைவி ரமணி பாலசுந்தரம். கல்வி பணியின் மூலம் சமுதாயத்தோடு இணைந்து அதன் முன்னேற்றத்துக்கு உழைக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு தலைமுறையை முன்னேற்ற சொத்து உண்டு என்றால் அது கல்விதான். எனது உயர்கல்வி பயணத்திற்காக தாய்லாந்து பல்கலைகழகம் கவுரவ டாக்டர் வழங்கியுள்ளது. இதற்கு ஏணியாக, உந்து சக்தியாக, வழிகாட்டியாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.
தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைமை உறுப்பினர் ராஜமாணிக்கம் பேசுகையில், “உலகப் புகழ் பெற்று விளங்கும் விஐடி பல்கலைகழகம் 40 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் பொறியியல் கல்லூரியாக தொடங்குவதற்கு தனது தந்தையான வேந்தர் கோ.விசுவநாதனிடம் அறிவுறுத்தியவர் சங்கர் விசுவநாதன். அவரது உழைப்பையும் மக்கள் சேவையும் பாராட்டி தாய்லாந்து பல்கலைகழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதேபோல இதர சர்வதேச அளவில் பல்கலைகழகங்கள் மேலும் பல பட்டங்களை வழங்கி கவுரவிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி பேசும்போது, “ஜாதி, மதம் என்ற எல்லைகளை கடந்து விஐடி பல்கலைகழகம் உலகளவில் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது. கல்வியானது அறம், மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வாழ்க்கையின் இறுதி வரை அழியாத செல்வமாக இருப்பது கல்வி ஆகும். அத்தகைய அழிவற்ற கல்வி செல்வத்தை அளிக்கும் விஐடி குடும்பத்தினர் வாழும் உதாரணம் ஆகும்”என்றார்.
முன்னதாக அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் காசோலையை விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணைதலைவர் சங்கர் விசுவநாதனிடம் தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், டார்லிங் குழுமத்தின் தலைவர் வெங்கடசுப்பு மற்றும் நிர்வாக இயக்குநரான முரளி ஆகியோர் வழங்கினர்.
விழாவில் விஐடி துணைதலைவர் ஜி.வி.செல்வம், உதவி துணைதலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கலியமூர்த்தி, திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் என்.பாலாஜி, தங்க கோவில் தலைமை இயக்குநர் எம்.சுரேஷ்பாபு, எம்எல்ஏ-க்கள் கார்த்திகேயன், ஈஸ்வரப்பன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், சிஎம்சி மருத்துவமனை உதவி இயக்குநர் தீபக் செல்வராஜ், விழா குழு தலைவர் ரமேஷ் ஜூவல்லரி ரமேஷ்குமார், விழா குழு செயலாளரும், வேலூர் வணிகர் சங்கத்தின் தலைவருமான ஆர்.பி.ஞானவேல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Comments
Post a Comment