• கீ.வ.குப்பம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்.
· கீ.வ.குப்பம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் - மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி நீதியரசர் கே.முரளிசங்கர் திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி நீதியரசர் கே.முரளிசங்கர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஜி.ஜெயச்சந்திரன் பேசியதாவது,
மக்களைத் தேடி நீதி என்ற அடிப்படையில் கீ.வ குப்பம் பகுதியில் நீதிமன்றம் அமைப்பதற்கு 2022-ம் ஆண்டில் தொடங்கிய முயற்சி இன்று நனவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் பகுதி மக்கள் நீதியைத் தேடி வெகுதூரம் அலைய வேண்டியதில்லை என்ற ஒரு கூற்றினைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றது இன்றைய விழா.
நீதிமன்றங்கள் திறந்தால் போதுமா என்ற கேள்வி மக்களிடையே நிச்சயமாக எழும். ஜனநாயகத்திலே மிக முக்கியப் பங்கு வகிப்பது நீதித்துறை. நீதித்துறைக்கு இணையாக நாம் சொல்வது Legislative (சட்டமன்றம்), Executive (நிர்வாகத்துறை) மற்றும் நான்காவது தூண் என்று அழைக்கப்படுகின்ற Press (ஊடகத்துறை). இவை அனைத்துமே சமபலத்துடன் சுதந்திரமாக பணியாற்றுகின்ற பொழுது ஜனநாயகம் தழைத்தோங்கும். சில நேரங்களிலே இந்த நான்கு தூண்களிலே ஒன்று, இரண்டு அல்லது மூன்றும் கூடத் தொய்வடையலாம் அல்லது சற்றுப் பின்தங்கலாம். ஆனால், நீதித்துறை மட்டும் எக்காலத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தொய்வடையக் கூடாது, பின்தங்கக் கூடாது, தன்னுடைய கடமையிலே வழுவக் கூடாது.
நீதித்துறை தொய்வடையக் கூடாது, தளர்வடையக் கூடாது, தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால், அதற்கு மிக வலிமையான ஒரு வழக்கறிஞர்களின் அமைப்பு இருக்க வேண்டும். அந்த வழக்கறிஞர்களின் அமைப்பிற்கு மூன்று கடமைகள் இருக்கின்றன. அந்த மூன்று கடமைகளையும் தவறாமல் செய்ய வேண்டும். ஏனென்றால் நீதிபதிகள் என்பவர்கள் வேறு எங்கிருந்தும் வருவதில்லை, வழக்கறிஞர்களிடையே இருந்துதான் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
நீதிபதிகள் எதையுமே பாரபட்சம் இன்றிப் பாராமல், நடுநிலையோடு நீதி வழங்குவதால் மக்கள் நீதித்துறையை நாடி வருகிறார்கள். அப்படி நாடி வருகின்ற மக்களுக்கு மிக விரைவாக நீதி பரிபாலனம் செய்வதுதான் மிகச் சாலச்சிறந்த ஒரு கடமையாக இருக்க முடியும்.
அப்படி நாம் செய்கின்ற பொழுது நீதித்துறையின் மீது நம்பிக்கை கூடுகிறது. நீதித்துறையின் மீது நம்பிக்கை கூடினால் ஜனநாயகத்தின் பலம் கூடுகிறது. ஜனநாயகத்தின் பலம் கூடினால் மக்கள் சுபிட்சமாகப் பயமின்றி வாழ்வார்கள். எனவே நமக்கெல்லாம் ஏனைய தொழிலில் இருப்பவர்களுக்கு உள்ள கடமையைவிடச் சற்று கூடுதலான கடமை இருக்கின்றது. அந்தக் கடமையை உணர்ந்து நாம் செயலாற்றுவோம், இந்திய ஜனநாயகத்தைக் காப்போம் என்று சொல்லி இந்த அருமையான வாய்ப்பு தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி, வணக்கம்."
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாக நீதிபதி நீதியரசர் கே.முரளி சங்கர் பேசியதாவது.
வேலூர் மாவட்ட நீதித்துறை வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். அதிலும் கே.வி.குப்பத்தினுடைய வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு பொன்னாள். 2022 ஜூன் 24-ஆம் தேதியிட்ட தமிழக அரசாணை 309-இன் படியும், அதன் பின்பற்றி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின்படியும் இந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் 222-ம், குற்றவியல் வழக்குகள் 562-மாக மொத்தம் 784 வழக்குகள் மாற்றப்பட்டிருக்கிறது. மாண்புமிகு நம்முடைய மாவட்ட ஆட்சியர் பேசிக் கொண்டிருந்தபோது, இந்தப் பகுதி வாழ் மக்கள் வெகுகாலமாக இந்த நீதிமன்றத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னார். இன்று வந்திருக்கின்ற அவையினரைப் பார்த்தாலேயே அந்த ஆவல் தெரிகிறது.
இந்தச் சிறப்பான நீதிமன்றத்தைப் பெற்றிருக்கின்ற கே.வி.குப்பம் வாழ் பொதுமக்களுக்கும், இந்தப் பகுதி வழக்கறிஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஒரு நாணயத்தினுடைய இரண்டு பக்கங்கள் என்று சொல்வார்கள். பேராசிரியர் டேவிட் பென்னட் சொல்வார்: "Judges are mere mortals, they are asked to perform a duty that is utterly divine". நீதிபதிகள் வெறும் மனிதர்கள்தான், ஆனால் அவர்கள் செய்யச் சொல்கின்ற பணி தெய்வீகப் பணி. நீதி வழங்குவது தெய்வீகக் கடமையாகப் பார்க்கப்படுகிறது. அத்தகைய பணியாற்றுகின்ற நீதிபதிகள், மாவட்ட நீதித்துறையில் இருக்கின்ற நீதிபதிகள், அதற்கேற்றாற்போன்ற கடமைகளையும் உத்வேகத்தையும் பெற்று அவர்கள் பணியாற்ற வேண்டும். பணிவு, எளிமை, மனிதாபிமானம், அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு இணங்கச் சிறப்பாகச் செயலாற்ற வேண்டும்.
வழக்கறிஞர் தொழிலை நாம் புனிதமான தொழிலாகப் பார்க்கிறோம். எந்தத் தொழிலுக்கும் எந்தப் பணிக்கும் இல்லாத வகையிலே வழக்கறிஞர்களுக்குத் தான் மூன்று வித கடமைகள் சொல்லப்பட்டிருக்கிறது:
Duty towards society (சமூகத்திற்கான கடமை)
Duty towards court (நீதிமன்றத்திற்கான கடமை)
Duty towards client (கட்சிக்காரர்களுக்கான கடமை)
இந்த வகையில் கடமைகள் சொல்லப்பட்டிருப்பதே தனிச் சிறப்புதான். வழக்கறிஞர்கள் சட்டம் சார்ந்த வல்லுநர்கள் மட்டுமல்லாது, நீதித்துறையின் அதிகாரிகளாக நீதி நிர்வாகத்திலே முக்கியப் பங்காற்றுகிறார்கள். வழக்கறிஞர் தொழிலை எந்த ஒரு இதர பாரம்பரியத் தொழிலோடும் ஒப்பிட முடியாது. அவர்கள் செய்கின்ற கடமைகளின் தன்மை, அது சமூகத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பார்க்கிற பொழுது, வழக்கறிஞர் தொழில் உன்னதத் தொழில் என்றே சொல்ல வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தமாகத் தற்போது 24,095 வழக்குகள் நிலுவையிலே இருக்கிறது. அதில் சிவில் வழக்குகள் (உரிமையியல் வழக்குகள்) 13,125-ம், குற்றவியல் வழக்குகள் 10,970-ம் இருக்கின்றன. அதில் ஐந்து வருடங்களுக்கு மேலான வழக்குகள் 4,627. சிவில் வழக்குகள் 2,677-ம், குற்றவியல் வழக்குகள் 1,950-ம் இருக்கின்றன. அது 19.20 சதவீதமாக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து நீதிமன்றங்களிலும் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று '5+0' என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி நம்முடைய தமிழ்நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்த அதிகப்படியான வழக்குகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. இன்னும் சில வழக்குகள் இருக்கின்றன. வழக்கறிஞர்கள் இது போன்ற பழைய வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து நீதிமன்றத்தோடு ஒத்துழைக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று சொன்னால், நீதிமன்றப் பணியாளர்களுடைய பங்களிப்பும் அவசியம். என்னைப் பொறுத்தவரை நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் போன்றவர்கள். மூன்று பக்கங்களும் சரியாக இருக்க வேண்டும், அப்பொழுதுதான் நீதி பரிபாலனம் சிறக்கும்.
நீதிமன்றத்திற்கு வந்தால் நீதி கிடைக்கும் என்றுதான் பொதுமக்கள் வருகிறார்கள். அந்த நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும். மூன்று தரப்பினருமே பொதுமக்களுடைய விரைவாகவும் செம்மையாகவும் நீதி வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, இந்த வாய்ப்பிற்குப் பாராட்டுத் தெரிவித்து நிறைவு செய்கிறேன்."
இந்நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எம்.இளவரசன், மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், தலைமை நீதித்துறை நடுவர் ஜி.இசக்கியப்பன், காட்பாடி பார் அசோசியேஷன் தலைவர் டி.முனுசாமி, காட்பாடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி.திருஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Comments
Post a Comment