• ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம்.
· தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அரசியல் விளம்பரங்கள், கட்டண செய்தி வெளியிடுதல் மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் மையங்களில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு அரசியல் விளம்பரங்கள், கட்டண செய்தி வெளியிடுதல் மற்றும் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணும் மையங்களில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 யை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்கவும், ஊடகங்களில் கட்டணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகளை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மாவட்ட ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி வழங்குதல்.
இந்திய தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை காப்பதில் ஊடகங்கள் ஆற்றும் பங்கினை பெரிதும் பாராட்டுகிறது.
ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு (MCMC) உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்கள் மற்றும் காட்சிகளை மட்டுமே மின்னணு ஊடகங்களில் (Television, FM, Social Media, Bulk SMS and Voice Message) வெளியிட வேண்டும். ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதியில்லாத தேர்தல் விளம்பரங்களை எக்காரணம் கொண்டும் மின்னணு ஊடக நிறுவனங்கள் வெளியிடவோ / ஒளிபரப்பவோ கூடாது.
நாளிதழ்களில் போட்டியிடும் வேட்பாளர்களால் அல்லது அவர்கள் சார்ந்து வெளியிடப்படும் விளம்பரங்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கட்டண விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு வேட்பாளரின் செலவினத்தில் சேர்க்கப்படும்.
வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (Silent Perood-48 Hours) அச்சு ஊடகங்களில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவின் அனுமதி பெறப்பட்ட விளம்பரங்களை மட்டுமே வெளியிட வேண்டும்.
வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளில் (Silent Perood-48 Hours) மின்னணு ஊடகங்களில் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது.
சட்டத்திற்கு ஒத்திசைவாக இல்லாததும் ஒழுக்கம் மற்றும் கண்ணியத்தை பாதிப்பதும், உணர்ச்சியை தூண்டக்கூடியதும் அல்லது அதிர்ச்சி தரக்கூடிய, வெறுப்பு மற்றும் புரட்சியை தூண்டுகிற விளம்பரங்களை நாளிதழ்களோ, தொலைக்காட்சிகளோ வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் தகவல்கள் மற்றும் பிரச்சாரங்கள் வேட்பாளர்களின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும்.
நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியினர் நேரடியாக தேர்தல் குறித்த விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிட அனுமதி கோரி விண்ணப்பிக்க கூடாது.
கட்டணம் செலுத்தி வெளியிடப்படும் செய்திகள்.
கட்டணம் செலுத்தி செய்தி வெளியிடுவது என்பது யாதொரு ஊடகத்திலும் (அச்சு, மின்னணு) ரொக்கத்திற்காக அல்லது பொருளுக்காக வெளியிடப்படுகின்ற யாதொரு செய்தி அல்லது பகுப்பாய்வு.
யாதொரு வேட்பாளரின் தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக அல்லது யாதொரு வேட்பாளரின் தேர்தல் வெற்றி வாய்ப்பை பாதிக்கின்ற வகையில் கட்டணம் செலுத்தி வெளியிடப்படும் செய்தி.
ஓரே நேரத்தில் வெவ்வேறு செய்தியாளர்களின் பெயர்களை தாங்கி வெவ்வேறு ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள். ஓரே மாதிரி புகைப்படங்களுடன் கூடிய செய்திகளாக இருந்தால்,
ஊடகங்களில் ஒரே பக்கத்தில் இரண்டு போட்டியாளர்களை பற்றி வரும் செய்திகளில் இருவருமே வெற்றி வாய்ப்பு உள்ளவர்களாக எழுதினால்,
குறிப்பிட்ட வேட்பாளர், சமூகத்தில் ஒவ்வொரு பிரிவினரிடமும் ஆதரவு பெற்றுள்ளார் என்றும், அவர்தான் தொகுதியில் வெற்றி பெறுவார் என்றும் வரும் செய்திகள்.
சில ஊடகங்களில், குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் ஒருசில குறிப்பிட்ட பகுதிகளில் பிரசுரம் செய்யும் செய்தி மீண்டும் மீண்டும் வெளிவந்தால்,
குறிப்பிட்ட ஊடகங்களில் தொகுதி தேர்தலில் வரலாறு படைக்க உள்ளார் என்று ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை பற்றி தலைப்பில் மட்டும் போட்டு விட்டு, செய்திகளில் இல்லாமலோ அல்லது அவ்வாறு அதைப்பற்றி செய்தி வெளியிடப்படாமல் இருந்தாலோ,
ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் இதுவரை செய்த பணியில் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ளார். ஆதனால் ஆதரவு பெற்றுள்ளார் என்று திரும்ப திரும்ப ஒரு செய்தியில் எழுதினால், சுமாராக 125-150 வார்த்தைகளில் இரண்டு பத்தி செய்தியாக புகைப்படத்துடன் எப்பொழுதும் ஒரேஅளவில் தேர்தலின்போது செய்தி வருவது உண்டு. இது மக்களின் தகவலுக்காக எழுதப்படுகின்ற பொதுவான செய்தி அல்ல. ஓரே விளம்பரத்தின் அளவில் வெளியிடப்படும் கட்டண செய்தி.
சில ஊடகங்களில் குறிப்பிட்ட செய்திகள் வெவ்வேறு அச்சு வடிவங்களிலும், எழுத்து அளவிலும் வேறுபட்டிருக்கும். இது எதனாலென்றால், பத்திரிகையாளர்கள் இந்த செய்தியை தயாரிப்பதிலும், வேட்பாளர்கள் சார்பில் வெவ்வேறு தகவல்களை ஒன்றாக சேர்த்து வெளியிடுவார்கள். இது கட்டண செய்தி.
தொலைக்காட்சிகளில் குறிப்பிட்ட வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றதை அதே காணொலி காட்சியை குறித்து மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவது.
வானொலியில் ஒரே வேட்பாளரை குறித்து அவரது வெற்றி வாய்ப்பை பெரிதாக கூறி மீண்டும் மீண்டும் பேசுவது
ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு மேற்காணும் வழிமுறைகளின் அடிப்படையில் பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளாக இனம் காணும் அனைத்து செய்திகளும் சம்மந்தப்பட்ட வேட்பாளரின் செலவினக் கணக்கில் சேர்ப்பதற்காக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் ஊடகங்களுக்கான அனுமதி
வேட்பாளர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும் நேரத்திலும் இடத்திலும், ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதில்லை. இருப்பினும், அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் மற்றும் அனுமதி அளிக்கும் முறை ஆகியவை, அப்பகுதியின் சூழல் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் தீர்மானிக்கப்பட வேண்டும்.
வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளில் ஊடகங்களுக்கான அனுமதி
இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை வைத்திருக்கும் ஊடக துறையினர் மட்டுமே வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடிகளில் செய்தி சேகரிக்கும் பணிக்கு அனுமதிக்கப்படுவர்.
வாக்குச்சாவடிகளில் உள்ள சூழல், அறையின் அளவு மற்றும் அங்குள்ள இடவசதி, வாக்களிக்கக் காத்திருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அனுமதிக்கப்படும் நேரங்களில் மட்டுமே ஊடக துறையினர் செய்தி சேகரிக்கும் பணி மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
வாக்களிக்கும் மறைவிடங்களுக்குள் (Voting Compartments) நடைபெறும் செயல்பாடுகளைப் படம்பிடிக்கும் வகையில், வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் காட்சிகளை எந்தவொரு ஊடகவியலாளரும் புகைப்படம் எடுக்கவோ அல்லது காணொளி பதிவு செய்யவோ கூடாது; இது வாக்களிப்பின் ரகசியத்தன்மைக்கு எதிரான மீறலாகும்.
வாக்கு எண்ணும் மையத்தில் ஊடகங்களுக்கான அனுமதி
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை வைத்திருக்கும் ஊடக துறையினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இருப்பினும், அவர்கள் மிகச் சிறிய எண்ணிக்கையிலும், பல குழுக்களாகவும் (batches) மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்;
ஊடக துறையினர் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையானது வாக்கு எண்ணிக்கை மையத்தின் அளவு, அங்குள்ள இடவசதி மற்றும் பிற தொடர்புடைய காரணிகளைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் அலுவலரால் தீர்மானிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பாக, அந்தந்த நேரத்தில் நிலவும் சூழல் மற்றும் பிற தொடர்புடைய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் முழுமையான அதிகாரமும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கும், தேர்தல் தொடர்பான பிற அதிகாரிகளுக்கும் உண்டு;
ஊடகவியலாளர்கள் மையத்திற்குள் அனுமதிக்கும்போது, அவர்கள் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு (ஒரு கோடு அல்லது கயிற்றின் மூலம் குறிக்கப்படும்) அப்பால் செல்லக்கூடாது.
ஊடகவியலாளர்கள் தங்கள் அலைபேசிகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் நிலையான (அசைவற்ற) கேமராப் புகைப்படம் அல்லது காணொளிப் பதிவு அனுமதிக்கப்படாது. கேமரா ஸ்டாண்டையும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
மேலும், வாக்கு எண்ணும் செயல்முறையை, கையில் அல்லது தோளில் சுமந்து செல்லும் கேமரா மூலம் ஒலி-ஒளிப் பதிவு செய்யும் போது, எந்தச் சூழ்நிலையிலும், ஒவ்வொரு மின்னணு வாக்குச்சீட்டில் (EVM) பதிவான உண்மையான வாக்குகளையோ, தற்செயலாகக் கூட புகைப்படம் எடுக்கவோ அல்லது ஒலி-ஒளிப் பதிவில் பதிவு செய்யவோ கூடாது.
எனவே ஊடக துறையினர் விளம்பரங்களை வெளியிடும்பொழுதும், வாக்குச்சாவடி மையம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாஸ்கரன், சிறப்பு துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) ரமேஷ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கதிரவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment