• வேலூர் வேளாண் அடுக்கக திட்டம் - 58,696 விவசாயிகள் பதிவு.
· வேலூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் 58,696 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் 31.05.2026 தேதிக்குள் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் அடுக்கக திட்டம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்கள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் நிதி திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் அவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
தற்போது வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. வேளாண் அடுக்கக திட்டத்தில் தனிப்பட்ட அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் தவணை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் இதுவரை 58,696 விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு, மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் விவசாயிகளுக்கு தங்கு, தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேளாண் அடுக்கக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 34,983 விவசாயிகள் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். இவர்களில் இதுவரை 29,571 பேர் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 5,412 விவசாயிகள் பதிவு செய்யாமல் இருப்பதால் நிதி உதவி நிறுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இது கடைசி வாய்ப்பாக கருதி 31.05.2026-க்குள் பதிவு செய்து தொடர்ந்து பிரதான் மந்திரி கிசான் நிதி பெற கேட்டு கொள்ளப்படுகிறது இந்த விவசாயிகள் அனைவருக்கும் வேளாண் அடுக்கக திட்டத்தில் தனிப்பட்ட அடையாள எண் பெறும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அல்லது பொது சேவை மையத்துக்கு விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா மற்றும் ஆதார் அட்டை எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் ஆகியவற்றுடன் சென்று இலவசமாக வேளாண் அடுக்கக அடையாள எண் பெற்று கொள்ளலாம்.
இதுகுறித்து விவசாயிகளுக்கு கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 71,344 விவசாயிகளில் இதுவரை 58,696 பேர் வேளாண் அடுக்கக திட்டத்தில் பதிவு செய்து அடையாள எண் பெற்றுள்ளனர். 12,648 விவசாயிகள் பதிவு செய்யவில்லை. இவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் அடையாள எண் பெற வேண்டும்.
எனவே விவசாயிகள் தங்கள் பெயரில் நிலம் இருந்தால் அதற்கான ஆவணங்களை கொண்டு வந்து வேளாண் அடுக்க திட்டத்தில் பதிவு செய்து விவசாய அடையாள எண் பெற்று கொண்டு பயனடையுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment