• குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா.

  • குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா - பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்  முன்னேற்பாடு பணிகள் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், கோபாலபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் சிரசு திருவிழா முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சி தலைவர் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு கெங்கையம்மன் சிரசு புறப்படும் இடமான முத்தாலம்மன் கோயில், அங்கிருந்து சிரசு வரும்  தெருக்கள், அருள்மிகு கங்கை அம்மன் திருக்கோயில், கவுண்டன்ய மகா நதியின் இருபுறமும் உள்ள கரைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இவ்விடங்களில் தேவையான இடங்களில் தடுப்புகளை அமைக்கவும், பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வதற்கான முறையான அறிக்கையினை அளிக்கவும் காவல்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார்.

கெங்கையம்மன் சிரசு திருவிழாவின் போது செல்ல உள்ள திருத்தேரினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் திருத்தேரினை  ஆய்வு செய்து நிலைத்தன்மையை உறுதிசெய்து  சான்றிதழ் வழங்க கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது

குடியாத்தம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவானது நம்முடைய மாவட்டத்தை சார்ந்த பொதுமக்கள்  மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1.50 இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு பெரிய திருவிழாவாகும்.  இந்த திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதிக அளவு பொதுமக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து விதமான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 10 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தல் மற்றும்  அந்த குடிநீர் தொட்டிகளில் முறையான குளோரினேஷன் செய்யப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களுக்கு ஆங்காங்கே நடமாடும் கழிவறைகள் அமைக்க வேண்டும். கவுண்டன்ய மகாநதியின் கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும்.

 பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் முதலுதவி சிகிச்சைகளை வழங்குவதற்காக மூன்று இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் நகரத்தின் முக்கிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடு பேட்டை அரசு பள்ளி, பாலாறு மருத்துவமனை ஆகியவற்றில் உயிர் காக்கும் அவசர சிகிச்சை மருந்துகள் தயார் நிலையில் இருப்பதை மருத்துவ துறை அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

திருத்தேர் செல்கின்ற வழிகளில் உள்ள மரகிளைகள், மின்சார கேபிள்கள், தொலைபேசி மற்றும் கேபிள் டிவி கேபிள்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மின்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும். திருத்தேர் மற்றும் சிரசு செல்கின்ற வழிகளில் உள்ள மின் துறையின் மின்மாற்றிகளை அந்த நேரங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் திருவிழாவின்போது மேற்கொள்ளப்பட உள்ள வானவேடிக்கை நிகழ்விற்கு முறையாக தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையில் அனுமதி பெற வேண்டும். வானவேடிக்கை நடைபெறுகின்ற இடத்தில் பொதுமக்கள் அணுகாத வகையில் காவல் துறையின் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும். தீயணைப்பு துறையின் சார்பில் வானவேடிக்கை நடைபெறும் இடத்திலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

திருத்தேர் மற்றும் சிரசு செல்கின்ற வழிகளில் உள்ள கடைகளில் கூரைகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை தீயணைப்பு துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக ஓலைகளால் நெய்யப்பட்ட கூரைகள் இருப்பின் அவ்விடங்களில் தீப்பற்றுதல் போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது அந்த ஓலைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

திருக்கோயிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்யும் இடங்களில் அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து தூய்மையாக பராமரிக்கும் வகையில் இரண்டு டேங்கர் லாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். திருத்தேர் செல்கின்ற சாலை மற்றும் தெருக்களில் உள்ள மேடு பள்ளங்களை ஒரு தனி குழுவினை அமைத்து உடனடியாக சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருவிழாவிற்கு பிறகு நகர பகுதிகளில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த திருவிழா பாதுகாப்பு பணிகளில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 1,043 காவலர்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும், மேலும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் காவலர்களை பணியமர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறையின் சார்பில் ஒலிபெருக்கியின் மூலம் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து திருத்தேர் மற்றும் சிரசு செல்கின்ற ஒவ்வொரு தெருவிலும் வருவாய் துறையின் சார்பில் ஒரு அலுவலர் மற்றும் கங்கை அம்மன் திருக்கோயிலில் உள்ள ஒவ்வொரு நுழைவுப் பகுதியிலும் 1 வருவாய் துறை அலுவலர்களை பணி அமர்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.உ.சிவராமன், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சௌந்தரராசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், குடியாத்தம் நகராட்சி ஆணையர் தனலட்சுமி, உதவி ஆணையர் கோகுல், கெங்கையம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் சிவக்குமார்,  வட்டாட்சியர் சந்தோஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.

• PT LEE Employment Opportunities & Career Guidance Program.