• மாணவர்களுக்கு சிறந்த ரோல்மாடல்முன்னாள் முதலமைச்சர் காமராஜர்.
· மாணவர்களுக்கு சிறந்த ரோல்மாடல்முன்னாள் முதலமைச்சர் காமராஜர் - வி.ஐ.டி. துணைதலைவர் ஜி.வி. செல்வம் பேச்சு
காட்பாடி, காந்தி நகரில் அக்சீலியம் ரவுண்டானாவில் வி.ஐ.டி துணைதலைவர் ஜி.வி.செல்வம், சிதிலமடைந்திருந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் உருவ சிலையை தன்னுடைய சொந்த செலவில் புதுப்பித்தார். இதன் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு வி.ஐ.டி துணைதலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கி முன்னாள் முதலமைச்சர் காமராஜர் உருவ சிலையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றி பேசுகையில்,
காந்தி நகரில் உள்ள காமராஜர் சிலையை தினமும் நாம் அனைவரும் பார்க்கின்றோம். ஆனால் அது சற்று சிதைந்து காணப்பட்டது. அதனை சீரமைக்கும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தியதற்கு நன்றி. தினமும் மாணவர்கள் காமராஜரை பார்க்க வேண்டும் என்பதற்காகதான் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது.
அவர் தொண்டனுக்கு தொண்டனாகவும், தலைவனுக்கு தலைவனாகவும் இருந்தவர். மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்த ஒரே தலைவர் அவர்தான். அவருக்கு எந்த சொத்தும் கிடையாது. குடும்பமும் கிடையாது. தமிழ்நாடும், மக்களுமே அவரது குடும்பம்.
அவர் முதலமைச்சரான பிறகு, சொந்த ஊரில் இருந்த அவரது தாயார் தண்ணீர் எடுக்கத் தெரு முனையில் உள்ள பம்பிற்குச் செல்ல வேண்டி இருந்தது. முதலமைச்சரின் வீடு என்பதற்காக அரசாங்க அதிகாரிகள் அந்த வீட்டிற்கு மட்டும் குழாய் இணைப்பு வழங்கினர்.
இதனை அறிந்த காமராஜர், உடனடியாக அந்த இணைப்பை துண்டிக்க செய்தார். அனைவர் வீட்டிற்கும் தண்ணீர் வசதி இருக்கிறதா? உனக்கு மட்டும் எதற்கு? என தனது தாயிடம் கேட்டு, எந்தவொரு சிறப்பு சலுகையும் தனது தாய்க்கு வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அவருடன் ஒரு கார் மட்டுமே செல்லும்.
இந்திய அளவிலான இரும்புப் பெண்மணி எனப்படும் இந்திரா காந்தியை பிரதமராக்கியவர் காமராஜர். அதனால்தான் அவர் 'கிங் மேக்கர்' என்று அழைக்கப்பட்டார்.
மாணவர்கள் நீங்கள் அனைவரும் பள்ளியில் படிப்பதற்கு காரணம் காமராஜர்தான். அவர் முதலமைச்சராவதற்கு முன்பு குலக்கல்வி முறை இருந்தது. அதனை ஒழித்து, 6 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். அதன்பிறகு 30 ஆயிரம் பள்ளிகளை திறந்தார். அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 7 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றனர். அவர் முதலமைச்சரான பிறகு அது 37 சதவீதமாக உயர்ந்தது.
குறைந்தபட்சம் 300 பேருக்கு ஒரு பள்ளி, கிராமத்திற்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார். வறுமையின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வராததைக் கண்டு, அவர்களுக்குப் பள்ளியிலேயே உணவு வழங்கும் 'மதிய உணவு திட்டத்தை' கொண்டு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் இதனை 'சத்துணவு திட்டமாக' விரிவுபடுத்தினார்.
இன்று தமிழ்நாட்டில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் இருப்பதற்கு காரணம் காமராஜர். அவரது ஆட்சி காலத்தில் தமிழ்நாடு இந்தியாவில் 2-வது பெரிய தொழில் மாநிலமாக மாறியது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக சாத்தனூர் அணை உள்பட பல அணைகளைக் கட்டினார். நூறு ஆண்டுகள் கழித்துத் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று அன்றே யோசித்தவர் அவர்.
மாணவர்களுக்கு எல்லாம் ஒரு சிறந்த ரோல்மாடல் காமராஜர். உங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் மொபைல் போன் உள்ளது. அதில் கூகுளில் காமராஜர் என்று தேடிப் பாருங்கள். அவர் எப்படிப்பட்டவர், எப்படி வாழ்ந்தார், மக்களுக்காக என்னென்ன செய்தார் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் இரா.ப.ஞானவேலு, ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் பொன்.கு.சரவணன், வீரமாமுனிவர் சங்க தலைவர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் பேசினர். பி.எம்.டி.ஜெயின் பள்ளி செயலாளர் ருக்ஜி கே.ராஜேஷ்குமார் 50 மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கினார்.
காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் தீனா என்ற தினகரன், ஓ.பி.சி அணி மாநில துணைத்தலைவர் கே.எஸ்.ரவி, வேலூர் மாவட்ட துணைதலைவர் சந்திரபிரகாஷ், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட செயலாளர் ஏ.வி.எம்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக டேவிட்ராஜ் வரவேற்றார்.
முடிவில் ஜோசப் நன்றி கூறினார்.

Comments
Post a Comment