• வேலூர் மாவட்டம் அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு.

                 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

                அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சிக்குட்பட்ட அல்லேரி மலை கிராமம், அணைக்கட்டு, வரதலாம்பட்டு என்ற இடத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் மலை பகுதியில் அமைந்துள்ளது. அல்லேரி மலை கிராமத்தை சுற்றி 14 குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. அல்லேரி கிராமத்திற்கு வரதலாம்பட்டிலிருந்து சாலை அமைக்க வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து நில அளவீடு பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு தோராய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை அமைக்க தேவையான இடத்திற்கு வனத்துறையிடமிருந்து அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                இந்நிலையில் அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  வரதலாம்பட்டு பகுதியில் இருந்து அல்லேரி மலை கிராமம் வரை நடந்து சென்று சாலை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

                இந்த ஆய்வின் போது வளைவுகளில் சாலை அமைப்பது, மழைநீர் சாலையை அரிக்காமல் வெளியேற தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பக்கவாட்டு சுவர் அமைத்தல் மற்றும் செங்குத்தாக உள்ள பகுதிகளை சமன்செய்து சாலை அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் குறித்து உடன் இருந்த வனத்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளரிடம் ஆலோசனைகளை வழங்கினார். மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் அல்லேரி மலைப் பகுதிக்கு சாலை அமைக்க மறு திட்ட மதிப்பீடு தயாரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

                தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அல்லேரி மலை கிராமத்தில் உள்ள ஆட்டுக்காரன்துரை குடியிருப்பு பகுதியில் பாம்பு கடித்து மரணமடைந்த சங்கர் என்பவரின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.50,000/-க்கான காசோலையை வழங்கினார்.

                பின்னர் அருகில் உள்ள ஏரிக்கொல்லை குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் அவர்களுக்கு அனைவருக்குமான வீடு கட்டும் திட்டத்தில் கணக்கெடுப்பு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.  விடுபட்டவர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கவும் அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் அவர்களுக்கு வீடு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  அறிவுறுத்தினார். மேலும், ஏரிக்கொல்லை பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையில் கரைகளை ஏற்படுத்தி ஏரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

                இதனைத் தொடர்ந்து, மருதவல்லிமேடு குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களிடம் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.  அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையான குடிநீர் வசதியினை உடனடியாக குழாய்களை பதித்து வழங்கும்படி உத்தரவிட்டார். இப்பகுதி மக்களிடம் சுயதொழில் புரிய ஆர்வமுள்ள மகளிருக்கு விதிமுறைகளுக்குட்பட்டு கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

                முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அல்லேரியில் உள்ள உண்டி, உறைவிட ஆரம்ப பள்ளியில் நடைப்பெற்று வந்த கலைஞரின் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவேற்ற முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

                பின்னர் செய்தியானர் சந்திப்பில் அல்லேரி மலைகிராமத்திற்கு ஒரு புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒருமாத காலத்திற்குள் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்பட்டு அல்லேரி மலை பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படும். மலைப் பகுதியில் உள்ள மக்கள் கல்வியில் பின்தங்கி உள்ளனர்.  எனவே, இந்த பகுதியில் 4 தொடக்க பள்ளிகள் அமைக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. துணை சுகாதார நிலையம் அமைக்கவும் அல்லேரி கிராமத்தில் மருத்துவர், செவிலியர், ஆசிரியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தங்கி பணியாற்ற குடியிருப்பு அமைப்பது தொடர்பான சாத்திய கூறுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்தார்.

                இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மு.பாபு, மாவட்ட வன அலுவலர் கலாநிதி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில், வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகாஆனந்தன், வட்டாட்சியர் வேண்டா உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.