• அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி கள ஆய்வு

 அணைக்கட்டு வட்டத்திற்குட்பட்ட  பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.

                 வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் அணைக்கட்டு வட்டம் பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, செதுவாலை ஏரி ஆகிய இடங்களில் இன்று (29.08.2023) ஆய்வு மேற்கொண்டு செதுவாலை மற்றும் வேலூர் வட்டத்திற்குட்பட்ட கீழ்மொணவூர் ஆகிய கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் அளித்த பயனாளிகளிடம் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார்.

                மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சைக்கு வந்திருந்த கர்ப்பிணி தாய்மார்களிடம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மருத்துவ சிகிச்சை பதிவு அட்டைகளை சரிபார்த்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

                இதனைத் தொடர்ந்து, பொய்கை ஊராட்சியில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள குழந்தைகள் மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுக்கு சத்துணவு தினமும் முறையாக வழங்கப்படுவதையும், குழந்தைகளின் எடை பதிவேட்டில் சரியாக பராமரிக்கப்படுவதையும்  ஆய்வு செய்தார்.

                பின்னர், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளிக்கு சுற்றுசுவர்  அமைப்பது குறித்தும், ஒருசில வகுப்பறைகளில் கதவு மற்றும் ஜன்னல்களை பழுதுபார்த்து சீர்செய்யவும் அறிவுறுத்தினார். பள்ளியில் உள்ள மதிய உணவு திட்ட சமையலறையை பார்வையிட்டு மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள மதிய உணவினை தரமானதாக உள்ளதா என சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார்.

                 மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அணைக்கட்டு வட்டம் செதுவாலை கிராமத்திலும், மற்றும் வேலூர் வட்டம் கீழ்மொணவூர் ஆவாரம்பாளையம் கிராமத்திலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ள பயனாளிகளிடம் விவரங்கள் குறித்து நேரடி கள ஆய்வு செய்தார். தொடர்ந்து, செதுவாலை ஏரியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.

            இதனை தொடர்ந்து, வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மொணவூரில் அமைக்கப்பட்டு வரும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுற்றுசுவர் அமைப்பது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.  

                இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செந்தில், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, வேலூர் தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு மெர்லின்ஜோதிகா, பொய்கை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.நிகிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.