கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா

·        வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேலூர் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா.

            வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வேலூர் நகர்ப்புற வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் நகர அரங்கில் இன்று (29.09.2023) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

                இவ்விழாவில் வேலூர் நகர்புற வட்டாரத்தை சேர்ந்த 100 கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டனர். அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் புடவை, மஞ்சள் குங்குமம் உட்பட சீர் வரிசைகளை மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி மேயர், துணை மேயர் ஆகியோர் வழங்கினார்கள்.

                நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஐந்து வகையான சத்தான உணவுகள் பரிமாறப்பட்டன.

                இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது

                சமுதாய வளைகாப்பு என்பது பெயரளவில் நடத்தப்படும் விழா அல்ல. மனப்பூர்வமாக ஆக்கப்பூர்வமான சிந்தனைகளுடன் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம். கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி என்பது அவர்களுடைய மனதிற்கு ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. ஏழை கர்ப்பிணி தாய்மார்களின் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படாமல் இருக்கக் கூடாது என்கின்ற ஒரு உயர்ந்த எண்ணத்தில் அரசின் சார்பில் சமூக நலத்துறையின் மூலம் கர்ப்பிணி  தாய்மார்களுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

                இது மட்டுமின்றி கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவர்கள் கருவுற்ற மூன்றாவது மாதத்தில் இருந்து அரசின் சார்பில் அவர்களுடைய உடல் நலம், ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதம் தோறும் அவர்களுக்கு தேவையான சத்துமாவு உள்பட இணை உணவுகள் வழங்கப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற  மூன்றாவது மாதம் முதல் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை அரசின் சார்பில் அவர்களின் உடல் நலம் குறித்து நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது.

                கர்ப்பிணி தாய்மார்கள் அடுத்த தலைமுறைக்கான ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க  வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இது போன்ற திட்டங்கள் அரசின் சார்பில் செயல்படுத்தப்படுகிறது. எனவே கர்ப்பிணி தாய்மார்கள் சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்து வளமான அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று இந்நிகழ்வின் மூலமாக கேட்டுக் கொண்டு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

                  இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன்,  மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார்,  துணைமேயர் எம்.சுனில்குமார், மண்டல குழு தலைவர் எம்.கே.நரேந்திரன், மாநகராட்சி துணை ஆணையாளர் சசிகலா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) பா. சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.