• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தலைமையில் இன்று (29.12.2023) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் டிசம்பர் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 2023-ஆம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது
இக்கூட்டத்தில் முதலாவதாக வேளாண்மை துறையின் மூலம் சம்பா பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட ஜனவரி 15-ம் தேதி வரையில் கால கெடு உள்ள நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெற ஆலோசனை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண்மைத் துறையின் மூலம் இயற்கை உரங்கள் வழங்குதல், போகி பட்டத்திற்கு தேவையான உரங்கள் விதைகள் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைத்திட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
தோட்டக்கலைத் துறையின் மூலம் மாஞ்செடிகளுக்கு பூச்சி நோய் தாக்குதல்களை தடுக்க உரிய தரமான மருந்துகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
வேளாண் வணிகத் துறையின் மூலம் மாம்பழ கூழ், தேங்காய் எண்ணெய் மற்றும் பூக்களில் இருந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைத்தல், காட்பாடி உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
வேளாண் பொறியியல் துறையின் மூலம் நெல் நடவு செய்யும் இயந்திரம் மற்றும் நெல் நடவு முறைகள் குறித்த பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி வழங்குதல் மற்றும் குடியாத்தம் பகுதியில் கால்நடை சந்தை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கூட்டுறவு துறையின் மூலம் நகர்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்கடன்கள் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
நீர் ஆதாரத் துறையின் மூலம் பள்ளத்தூர் – செஞ்சி கிருஷ்ணபுரத்தில் செக்டேம் கட்டுதல், வேப்பம்குப்பம் மற்றும் அகரம் ஏரிகளில் தண்ணீர் திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
வனத்துறையின் மூலம் விவசாய நிலங்களில் அதிகளவில் பாம்புகள் உள்ளதால் அதனை கட்டுப்படுத்துதல், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையினை உயர்த்தி வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
மின்சாரத் துறையின் மூலம் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்துதல், ஒழையாத்தூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
வார சந்தைகளில் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதனை குறைத்திட உரிய துறை நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, இணை இயக்குநர் வேளாண்மை சோமு, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா மற்றும் வெங்கட்ராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால்மொய்தின் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment