• வேலூர் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் –II ன் கீழ் 2021 -23 ரூ.47.26 கோடி மதிப்பில் 721 பணிகள்
அனைத்து கிராம ஊராட்சிகளும் முழுமையான வளர்ச்சியை அடையும் நோக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டமானது மாநில அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே ஆகும்.
அனைத்து குக்கிராமங்களும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியினை முழுமையாக அடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தற்போது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் –II அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 2021-2022 ம் ஆண்டு முதல் 2025-2026 ம் ஆண்டு முடிய ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் படிப்படியாக நிறைவேற்றப்படும். அனைத்து குக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் பொருட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பல்வேறு திட்டங்களுடனும் ஏறத்தாழ 16 துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து ஊரக மக்களுக்கு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II–ன் கீழ், குறைந்தபட்ச அடிப்படை நிதியாக தலா ரூ.30 இலட்சமும், செயல்திறன் ஊக்க நிதியாக ரூ.5 இலட்சம் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்படும் பணிகள் நீர் நிலைகள் புதுப்பித்தல், குக்கிராமங்களில் தெருக்கள் / வீதிகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சமத்துவ சுடுகாடு / இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்டவைகளின் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப் பயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்குதல், சுத்தமான மற்றும் பசுமை கிராமம், வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல் வசதிகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை ஆகும்.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் IIன் கீழ் வேலூர் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த 2021 முதல் 2023 வரை இரண்டு நிதி ஆண்டுகளில் ரூ.7,90,99,814 /- மதிப்பில் 75 நீர்நிலை புணரமைப்பு பணிகளும், ரூ.14,99,82,631/- மதிப்பில் தெருக்கள் மற்றும் வீதிகள் அமைக்கும் 300 பணிகளும், ரூ.36,50,223/- மதிப்பில் சமத்துவசுடுகாடு, இடுகாடுகள் என அடிப்படை வசதிகளுக்கான 6 பணிகளும், ரூ.12,57,13,000/- மதிப்பில் பள்ளி உட்கட்டமைப்புகள், பொதுபயன்பாட்டு கட்டமைப்புகள் போன்ற 144 பணிகளும், ரூ.4,19,18,039/- மதிப்பில் பசுமை மற்றும் சுத்தமான கிராமமாக பராமரிக்கும் வகையில் 108 பணிகளும், ரூ.7,22,47,466/- மதிப்பில் பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தும் 88 பணிகளும் என மொத்தம் ரூ.47,26,11,173/-மதிப்பில் 721 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் 2023-24-ஆம் நிதியாண்டில் வேலூர் மாவட்டத்திலுள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் II ன் கீழ் நீர்நிலைகளை புணரமைத்தல், குக்கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீதிகள் அமைத்தல், சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடுகள், பள்ளிகளில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுபயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்குதல், பசுமை மற்றும் சுத்தமான கிராமமாக பராமரித்தல், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தும் வசதிகளை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல் போன்ற 490 எண்ணிக்கையிலான பணிகளுக்கு ரூ.21,38,20,878/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் IIன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 20 விழுக்காடு கிராம ஊராட்சிக்ள் குக்கிராமங்களில் உள்ள அடிப்படை உட்கட்டமைப்பு இடைவெளி தேவைகள் குறித்த கணக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளின் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு ஊரக மக்களிடையே ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment