• தேசிய அறிவியல் தினம்
வேலூர் ஜுனியர் சேம்பர் மற்றும் வேலூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து தேசிய அறிவியல் தின விழா முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டியது. மேலும் இளைஞர்களுக்கு அதிகாரமளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், காட்பாடி, பிரம்மபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி உதவி தலைமையாசிரியர் ஆர்.எஸ்.அஜீஸ்குமார் வரவேற்று பேசினார்.
வேலூர் ஜுனியர் சேம்பர் சங்கத்தின் மண்டல பயிற்சி விரிவுரையாளர்கள் டி.பிரபு, எம்.ஜான்மோசஸ் ஆகியோர் “இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்போம்” என்ற தலைப்பில் உரை நிகழ்தினர். வேலூர் கிளைத்தலைவர் ஜி.வெங்கடேசன், செயலாளர் இ.ராஜேஸ்கண்ணன், பொருளாளர் கே.சங்கீதாஶ்ரீ, துணைதலைவர் எஸ்.ராஜலட்சுமி, பயிற்சி இயக்குநர் எ.ஜி.மணிகண்டன், நிகழ்ச்சி இயக்குநர் டி.ராகுல் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் கலந்து கொண்டு அறிவியல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.
1928-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் சர் சி.வி.ராமன் விளைவை கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அறிவியலின் முக்கியத்துவத்தை பற்றிய செய்தியை பரப்புவதற்காக தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
அறிவியல் மக்களுக்காக, அறிவியல் சுயசார்பிற்காக, அறிவியல் மக்கள் ஒற்றுமைக்காக, அறிவியல் நாட்டு முன்னேற்றத்திற்காக என்ற நோக்கங்களுக்காக கடந்த 1980 முதல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அறிவியல் இயக்கம் ஒரு தன்னார்வ மக்கள் இயக்கம்.
மக்களிடம் குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக பல்வேறு விதமான செயல்பாடுகளை அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. மாணவர்கள் அறிவியல் சிந்தனைகளை வளர்த்து கொண்டும் தங்களை வளர்த்து கொண்டு நமது நாட்டினையும் வளப்படுத்த வேண்டும் என்றார்.
அறிவியல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அறிவியல் இயக்கத்தின் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற தலைவர் ஜி.ராதாகிருஷ்ணன், ஜுனியர் சேம்பர் சங்க தலைவர் ஜி.வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர்.
முடிவில் பள்ளி அறிவியல் ஆசிரியை ஶ்ரீதேவி நன்றி கூறினார்.
Comments
Post a Comment