சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ திருவுருவ சிலை

·         குடியாத்தம் சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ திருவுருவ சிலை - முதலமைச்சர் மு..ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறப்பு - மலர் தூவி மரியாதை.

                        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.02.2024) வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகி கு.மு.அண்ணல் தங்கோ அவர்களின் திருவுருவ சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி அன்னாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அறிவிப்பு

                    தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டு, வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம் , சைமன் குழு எதிர்ப்பு, உப்பு சத்தியாகிரகம் மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைத்தண்டனை பெற்று மறைந்த தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என 2023-24-ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையின்போது மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிக்கப்பட்டது.

வாழ்க்கை வரலாறு

                        தியாகி அண்ணல் தங்கோ, வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் முருகப்ப முதலியார்- மாணிக்கம்மாள் தம்பதியருக்கு  மகனாக ஏப்ரல் 12 , 1904-இல் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் சுவாமி நாதன்.’ தொடக்க கல்வி மட்டுமே படித்த இவர் தனது சுய முயற்சியால் தமிழ் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றார். இளம் அகவையில் தந்தை இழந்த இவருக்கு பள்ளி செல்லும் வாய்ப்பு கிட்டாமையால் நெசவுத் தொழில் மேற்கொள்ள சொந்த ஊரான குடியாத்தம் திரும்பினார். பெற்றோர் இட்ட பெயரான சுவாமி நாதன் என்பதை மாற்றி, அண்ணல் தங்கோ என்ற தனித்தமிழ் பெயராக தன் பெயரை  மாற்றி அமைத்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் மற்றவர்களின் பெயர்களையும், தனித்தமிழில் மாற்றினார். அறிஞர் பெருமக்கள் பலரின் வடமொழிப் பெயர்களை தமிழ்ப்படுத்தியவர் . தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.

             அண்ணல் தங்கோ அவர்கள் 1918-இல் காங்கிரசில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றார். 1923-இல் கள்ளுக்கடை மறியல், 1925-இல் வைக்கம் போராட்டம், 1927-இல் சைமன் குழு எதிர்ப்பு போராட்டம், 1930-இல் உப்பு சத்தியாகிரகப் போராட்டம், நீல் சிலை சத்தியகிரகம் ஆகியவற்றில் பங்கேற்று 5 முறை சிறை சென்றார். 1923-இல் மதுரை வைத்தியநாத ஐயருடன் இணைந்து கள்ளுக்கடை மறியலை தலைமை தாங்கி நடத்தினார். நாக்பூரில் தடையை மீறி கொடிப் போராட்டம் நடத்தி சிறை சென்றார். டாக்டர் வரதராசுலு நாயுடுடன் இணைந்து குருக்குல போராட்டத்திலும் கலந்து கொண்டார். அண்ணல் தங்கோவின் தலைமையில் நடந்த நீல் சிலை எதிர்ப்பு போராட்டத்தில் காமராஜர் ஒரு தொண்டராக கலந்து கொண்டிருக்கிறார்- நீல் சிலை எதிர்ப்பு போராட்டத்தில்  கலந்து கொண்டதற்காக, அப்போது நீதிபதியாக இருந்த பம்மல் சம்மந்த முதலியார் அண்ணல் தங்கோவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனைக்கு உத்தரவிட்டார். சிறைக்கு சென்ற அண்ணல் தங்கோ அங்கு பம்மலாரின் நாடகத்தை நடித்து சிறை கைதிகளின் மறுவாழ்வுக்கு நிதி திரட்டினார்.

                        1936-இல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமை சங்கத்தில் இணைந்தார். வேலூரில் 1937-இல் உலகத் தமிழ் மக்கள்  தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை வேலூரில் மிகவும் விமரிசையாக கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும், சான்றோர்களையும் கலந்து கொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938-இல் தமிழ் உரிமை மாநாடுகளை நடத்தினார்.
1927-
இல்திருக்குறள்நெறி தமிழ் திருமணத்தை அறிமுகப்படுத்தி குடியாத்தம் சிவமணி அம்மையாரை மணந்தார். 1942- இல்தமிழ் நிலம்என்ற பத்திரிக்கையை தொடங்கினார்.

                        நடிகர் சிவாஜி கணேசனை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியபாரசக்திபடத்திலும், ‘பெற்ற மனம்’, ‘பசியின் கொடுமை’. ‘கோமதியின் காதலன்ஆகிய திரைப்படங்களில் பாடல்களும், தமிழ்மொழியின் சிறப்பை வளர்க்கும் வகையில் பல நூல்களையும் எழுதியுள்ளார். வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும், தனித்தமிழை வளர்க்கவும் பாடுப்பட்ட  அண்ணல் தங்கோ சனவரி 4, 1974 அன்று  இயற்கை எய்தினார்.

அரசு உடைமை

          தமிழறிஞரும், சுதந்திர போராட்ட வீரருமான அண்ணல் தங்கோ அவர்களை கவுரவிக்கும் வகையில் அவருடைய படைப்புகள் தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளது.

சிலை  அமைவிடம்

              மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற மானிய கோரிக்கை செயல்படுத்தும் விதமாக வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சிக்கு சொந்தமான நேரு பூங்காவில் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

             இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலுவிஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், நகர மன்ற தலைவர் சவுந்தரராஜன்,  ஒன்றியக்குழுத் தலைவர் சத்யானந்தம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன்  மற்றும் அண்ணல் தங்கோ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.