• ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் தேர்வு தொகுதி 4 - பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணியியல் தேர்வு தொகுதி 4-க்கான தேர்வுகள் வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணியியல் தேர்வு தொகுதி 4-க்கான தேர்வுகள் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 6 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த 6 மையங்களில் மொத்தம் 13 தேர்வு கூடங்கள் உள்ளன. மொத்தம் 36,705 தேர்வர்கள் இத்தேர்வுகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
இத்தேர்வின்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது
130 தேர்வு கூடங்களுக்கும், 130 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் 130 தேர்வு கூட ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு பணிகள் தொடர்பாக மாவட்டத்தில் மொத்தம் 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அலுவலர்களாக துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு கூடங்களில் தவறான நடவடிக்கைகளை யாரும் ஈடுபடாவண்ணம் கண்காணிக்க வேண்டும். தவறு நிகழும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அறை கண்காணிப்பாளர், முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் தேர்வாணைய அலுவலர்கள் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வு நாளன்று தேர்வு கூடங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து தேர்வு கூட்டங்களையும் தவறாமல் பார்வையிட வேண்டும்.
தேர்வுக்கூட பொருட்கள் மாவட்ட கருவூலம், காட்பாடி சார் கருவூலம், குடியாத்தம் சார் கருவூலம் ஆகிய இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இது தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கருவூல அலுவலர் மேற்கொள்ள வேண்டும். கருவூலங்களிலிருந்து வினாதாள்களை கொண்டு செல்வதற்காக 48 மொபைல் யூனிட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள்கள் வைக்கப்படும் கருவூல பகுதிகளில் தீயணைப்புத் துறையின் சார்பில் தீ தடுப்பு வாகனங்களையும், தீயணைப்பு வீரர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
விடைத்தாள்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு எடுத்துச் செல்ல பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் வருவாய் துறையில் துணை வட்டாட்சியர் நிலையில் ஒருவரும், காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் நிலையில் ஒருவரும், துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரும் இருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வு கூடத்திற்கும் ஒரு காவலரை பாதுகாப்பு பணிக்காக அமர்த்த வேண்டும்.
. தேர்வு நாளன்று தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை மின்சார துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும் தேர்வு முடிவுற்ற பின்னர் விடைத்தாள்கள் கொண்டு செல்லும் பணி இரவு நேரம் வரை நடைபெறும் என்பதால் முழு நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நாளுக்கு முன்னதாக தூய்மைப்பணி மேற்கொள்ள வேண்டும் அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தேர்வு நாளன்று பேருந்து நிலையங்களில் இருந்து தேர்வு நடைபெறும் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
கண்காணிப்பு அலுவலர்களாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு கூடங்களை தேர்விற்கு முன்னதாகவே பார்வையிட்டு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். வினாத்தாள் மற்றும் விடைத்தாள்கள் வைக்கப்பட உள்ள கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தீயணைப்பு துறையினர் பணியில் உள்ளனர் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்வு கூட முதன்மை கண்காணிப்பாளர்கள் வினாத்தாள் கட்டுகளை சார் கருவூலங்களில் இருந்து சரிபார்க்க வரும்பொழுது உடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வீடியோகிராபர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட தேர்வு கூடங்களுக்கு சென்று விட்டாரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கருவூலங்களில் வினாத்தாள்கள், விடைத்தாள்கள் மற்றும் தேர்வு கூட பொருட்கள் ஆகியவற்றை இருப்பு வைக்கப்பட்ட நாள் முதல் தேர்வு முடிந்து சார்நிலை கருவூலங்களில் இருப்பு வைக்கப்படும் வரை அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும்.
தேர்வு அறைகளில் கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்களை நியமிக்க கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) முத்தையா, வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள் கவிதா (வேலூர்), செல்வி சுபலட்சுமி (குடியாத்தம்), மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இராமச்சந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சி) செல்வி உமா, உதவி ஆணையர் (கலால்) முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment