• அணைக்கட்டு "உயர்வுக்கு படி" உயர்கல்வி ஆலோசனை.

 ·        10-ஆம் வகுப்பு மற்றும்  12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்வு எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அணைக்கட்டு வட்டத்தில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு உயர்க்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2023-24 கல்வியாண்டில் கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 10-ஆம் வகுப்பு மற்றும்  12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்வு எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் "உயர்வுக்கு படி" நிகழ்ச்சியை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இன்று (28.09.2024) அணைக்கட்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

          மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி மூலம் 12-ஆம் வகுப்பு தோல்வியுற்ற அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உயர்வுக்கு படி” சிறப்பு முகாம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

         வேலூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டில் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத +2 தேர்வு எழுதிய, எழுதாத இடைநின்ற மற்றும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத மாணவர்களுக்கு தகுந்த உயர்கல்வி ஆலோசனை வழங்கி உயர்கல்வி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சியில் 100% சேர்கையை உறுதி செய்யும் பொருட்டு உயர்வுக்கு படி என்ற நிகழ்ச்சி முதல் கட்டமாக 11.09.2024 அன்று மற்றும்  14.09.2024 அன்று  வேலூர் மற்றும் குடியாத்தம் கோட்டங்களில்  நடைபெற்றது.

இன்று நடைபெற்ற முகாமில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு  தாங்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் விருப்ப பாடங்களை  பயிலுவதற்கான கல்லூரியை தேர்வு செய்தனர். மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.

                மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இந்த உயர்வுக்கு படி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. நம்முடைய மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்று  எந்த ஒரு மாணவ, மாணவியும் உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கக்கூடாது.

                ஒரு மாணவன் 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு தன்னுடைய படிப்பை நிறுத்தி விடாமல் உயர் கல்வி பயில வேண்டும். பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்பு தொடராத மாணவ,  மாணவிகளை கண்டறிந்து அவர்களை இதுபோன்ற உயர்வுக்கு படி முகாம்களுக்கு அழைத்து வந்து மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் எந்தெந்த பாடத்திட்டங்களில் காலியான இடங்கள் உள்ளது என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்து அதில் ஏதேனும் ஒரு பாடத்திட்டத்தில் அவர்களை இணைத்து உயர்கல்வி படிக்க வைப்பது இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.

          மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலும் போது அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.  குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 1000/- ,  அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூபாய் 1000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் இதுவரை 8000க்கும் அதிகமான மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். தமிழ் புதல்வன் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 5000-க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

                 நாளையும் (29.09.2024) நமது மாவட்டத்தில் மேலும் இரண்டு முகாம்கள் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் கல்லூரி தொடங்க இருப்பதால் உங்களோடு படித்து கொண்டு இருக்கின்ற நண்பர்கள், தோழிகள் யாரேனும் உயர்கல்வி  சேராமல் இருந்தால் அவர்களை இந்த முகாமுக்கு அழைத்து கொண்டு வாருங்கள்.

மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்து கொண்டால் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொள்ளலாம். நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக ஒவ்வொரு மாதமும் (Alternative Month) வேலைவாய்ப்பு முகாம் நடத்தி குறைந்தது 75-க்கும் மேற்பட்ட கம்பெனிகளை மாவட்டத்திற்கு அழைத்து வந்து, 200 முதல் 250 பேருக்கு  வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.  ஒவ்வொரு மாணவர்களும்  கல்லூரி படிப்பினை சிறப்பாக முடித்து தங்களின் குடும்பங்களை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும்  என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில்  அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் மு.பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.