• வேலூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்டவார விழா.
· வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள், தமிழறிஞர் பெருமக்கள், தமிழ் அமைப்பினர், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 2024 - 25ஆம் ஆண்டில் வேலூர் மாவட்டத்தில் 18.12.2024 தொடங்கி ஒரு வார காலத்திற்கு சட்ட வார விழா கொண்டாடப்படவுள்ளது.
முதல் மூன்று நாள்களுக்கு (18,19,20.12.2024) மின்காட்சியுரையின் மூலம் செயல்முறை ஆணைகள், குறிப்பாணைகள், சுற்றோட்டக் குறிப்புகள், அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல், ஆட்சிமொழிச் சட்டம் வரலாறு, அரசாணைகள், கணினிப் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்டு அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பெறவுள்ளது.
நான்காம் நாள் 23.12.2024 அன்று ஆட்சிமொழிச் சட்டம் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் நடத்தப்பெறவுள்ளது.
ஐந்தாம் நாள் 24.12.2024 அன்று அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து தமிழ் சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆட்சிமொழித் தொடர்பான பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பெறவுள்ளது. பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளார்.
ஆறாம் நாள் 26.12.2024 அன்று வணிக நிறுவன பெயர்ப்பலகைகள் 5 : 3 : 2 என்ற விகிதத்தின் அடிப்படையில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள்) அமைத்திட வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவன அமைப்புகளைச் அழைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மற்றும் வணிகவரி அலுவலர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.
ஏழாம் நாள் 27.12.2024 அன்று ஆட்சிமொழிச் சட்டம் மற்றும் திட்டச் செயலாக்கத்தை பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் குடியேற்றத்தில் விளம்பரப் பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடத்தப்பெறவுள்ளது. ஒருவாரகால நிகழ்வுகள் அனைத்தும் வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரால் ஒருங்கிணைத்து நடைபெறவுள்ளன. தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும் ஆட்சிமொழிச் சட்டவார விழாவின் அனைத்து நிகழ்வுகளிலும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள், தமிழறிஞர் பெருமக்கள், தமிழ் அமைப்பினர், பொதுமக்கள், பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி அழைப்பு விடுத்துள்ளார்.
Comments
Post a Comment