• கீ.வ.குப்பம் ICDS குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்
· கீ.வ.குப்பம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் பெற்றோர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த ஆலோசனை வழங்குவதற்கான முகாமை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, லத்தேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டத்தில் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியம் Focus Block Development Programme என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து நிலைகளிலும் முன்னேற்றிட பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கீ.வ.குப்பம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையில் மூலம் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அக்குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் இம்முகாமானது ஏற்கனவே 07.11.2024 அன்று பசுமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 08.11.2024 அன்று வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தப்பட்டுள்ளது. இம்முகாம்களில் கடுமையான மெலிவுத்தன்மை, மிதமான மெலிவுத்தன்மை, கடுமையான எடை குறைவில் பாதிக்கப்பட்ட 401 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வயதிற்குட்பட்ட 2000 குழந்தைகள் உள்ளனர். இக்குழந்தைகளின் உடல் எடை மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் 401 குழந்தைகள் வயதிற்கு ஏற்ற எடை அளவில் இல்லாமல் குறைவான எடையுடன் உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க வேண்டுமெனில், குழந்தை பிறந்த முதல் 3 ஆண்டுகள் அதாவது 1000 நாட்கள் வரை ஊட்டச்சத்துகளை சரியாக வழங்க வேண்டும்.
ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அக்குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குவது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் மாதத்திற்கு ஒருமுறை 3 அல்லது 4 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு முகாம்களிலும் 100 முதல் 125 குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கப்படவுள்ளது.
பெற்றோராகிய உங்களுக்கு எவ்வளவு வேலை பளு இருந்தாலும், குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 5 வேளை ஊட்டச்சத்துகளை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கோதுமை, கேழ்வரகு மற்றும் வேர்க்கடலை கலந்த ஊட்டச்சத்து மாவினை குழந்தைகளுக்கு வழங்குவதன் மூலம் அவர்களின் உடல் எடையானது 3 மாதத்தில் அதிகரிக்கிறது.
எனவே கீ.வ.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் எடை குறைவாக உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளவர்களின் வீடுகளுக்கு இந்த ஊட்டச்சத்து மாவு வழங்கப்படவுள்ளது. இதனை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வழங்கி அவர்களை சத்துள்ள குழந்தைகளாக வளர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
தொடர்ந்து லத்தேரி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்து, காலாண்டு தேர்வில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவர்களிடம் பொது தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று இப்பள்ளியை 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளியாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் கீ.வ.குப்பம் வட்டம், லத்தேரி-திருமேனி இடையே இரயில்வே கடவு எண்.57-ற்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் இவ்விடத்தில் இரயில்வே மேம்பாலம் அல்லது இரயில்வே சுரங்க பாதை அமைப்பது குறித்து இரயில்வே, வருவாய் துறை மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிகழ்வின்போது துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷினி, மாவட்ட திட்ட அலுவலர் குமார், தேசிய சுகாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் மரு.ஆதித்யா, கீ.வ.குப்பம் ஒன்றியக் குழுத் தலைவர் ரவிசந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெயாமுருகேசன், லத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் மோகன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.சங்கர்கணேஷ், வட்டாட்சியர் சந்தோஷ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment