• புதுமைப்பெண் விரிவாக்க திட்டம் - நிறைந்தது மனம்.

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் 909 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்திற்கான பற்று அட்டைகளை வழங்கினார்.
  • புதுமைப்பெண்  விரிவாக்க திட்டத்தில் பயனடைந்த மாணவிகள் தங்களுக்கு மாதம் ரூ. 1000 கல்வி உதவித்தொகை  கிடைக்குமா என்ற ஏக்கம் நீங்கி தங்களுடைய மனம் நிறைந்துள்ளதாக தெரிவித்து இத்திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில்  முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் 909 மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.  கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதார முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை உருவாக்கிட இயலும் என்பதை உணர்ந்த நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பெண்களின் உயர்கல்வி மேம்பாட்டிற்கான வரலாற்றுச் சாதனை திட்டமான புதுமைப் பெண் திட்டத்தினை 5.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

புதுமைப் பெண் திட்டம்

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப் படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000/ வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயின்ற மாணவிகள் உட்பட சுமார் 4.25 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் டிசம்பர்-2024 மாதத்தில் 2.98 இலட்சம் மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தினை செயல்படுத்த 370 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல், உயர்கல்வி நிறுவனங்களில் பெண்களின் சேர்க்கையை அதிகரிப்பதில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்

உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசால் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தில் கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு. தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும்) போன்ற உயர்கல்வி படிப்புகள் படிக்கும் மாணவியர்கள் பயன்பெறுவர்.

அதேபோன்று பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவிகளும் இத்திட்டத்தில் பயன்பெறுவர்.

வருமான உச்சவரம்பு ஏதுமின்றியும், மற்ற கல்வி உதவித் தொகை திட்டங்களின் பயன்பெற்று வந்தாலும் (BC /SC/ST/ Minority Scholarship) மற்றும் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இருந்தாலும் இந்த திட்டங்களின் கீழ் பயன்பெறலாம் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

இந்த சமூகத்தில் பெண்களுக்கு எந்தவிதமான வாய்ப்பினை வழங்குகிறோமோ, அந்தவிதமான தலைமுறையைத்தான் உருவாக்க இயலும் என்பதற்கேற்ப, அடுத்த தலைமுறை முன்னோக்கிச் செல்ல மிக முக்கியமான திட்டமான புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தற்போது மாநில அளவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவிகள் சுமார் 75,028 பேர் இணைய உள்ளனர். 

இத்திட்டத்தின் கீழ், உயர் கல்வி மூலம் பெறும் அறிவும், பொருளாதார சுதந்திரமும், மாணவிகளின் தன்னம்பிக்கையை அதிகரித்து, அவர்களது வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைத் தேட ஊக்குவிப்பதோடு, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்களிப்பினை உறுதி செய்யும் வாய்ப்பாக அமைகிறது.

இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மகத்தான திட்டமானபுதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கமானது” இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்,  தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் மாணவிகளுக்கு பற்றட்டைகளை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் பயனடையவுள்ள 909 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துரங்கம் அரசினர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.

            புதுமைப்பெண் திட்டம் என்பது நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் முன்னோடி திட்டங்களில் ஒரு திட்டமாகும். இத்திட்டம் மாவட்டங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர், சமூக நலத்துறை செயலாளர் காணொலி காட்சி வாயிலாக மாதத்திற்கு 2 முறை ஆய்வு செய்கிறார்கள்.

                நம்முடைய மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் 11,966 மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் ஏற்கனவே பயனடைந்து வருகின்றனர். தற்பொழுது அரசு உதவிபெறும் பள்ளிகளில்  பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளும் பயன்பெறும் வகையில் புதுமைப்பெண் திட்டம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்  புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தில் 909 மாணவிகள் பயனடையவுள்ளனர்.

                மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் நிச்சயம் உயர்கல்வி பயில வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களையும், பல்வேறு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்.  கடந்த காலங்களில் நம்முடைய மாவட்டத்தில் 10,000 மாணவிகள் 12-ஆம் வகுப்பு முடித்திருந்தால் அவர்களில் சுமார் 2000 மாணவிகள் உயர்கல்வி பயில்வதில்லை என தரவுகள் தெரிவித்திருந்தன. தற்பொழுது அரசின் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 1000 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

                அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவரும் உயர் கல்வியில் சேருவதை உறுதி செய்யும் வகையில் அரசின் சார்பில் உயர்வுக்குப்படி போன்ற வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மேலும் ஆசிரியர்களுக்கு உயர்க்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்து  பயிற்சிகள் வழங்கப்பட்டு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

                அரசின் புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வரும் நம்முடைய மாவட்டத்தை சேர்ந்த  சுமார் 13,000 மாணவிகள் இத்திட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.

புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் பயனடைந்த மாணவி செல்வி சௌமியா  தெரிவித்ததாவது.

            நான் வேலூர் வேலப்பாடி பகுதியில் வசித்து வருகிறேன். என்னுடைய பள்ளி படிப்பை வேலூர் விநாயக முதலியார் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன் தற்பொழுது முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பி.ஏ. வரலாறு இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறேன். என்னுடைய தந்தை ஒரு ஓட்டல் கடையில் வேலை செய்து வருகிறார். என்னுடைய பெற்றோர் கடினமான பொருளாதார சூழ்நிலையிலும் என்னை உயர்க்கல்வி பயில  கல்லூரியில் சேர்த்துள்ளனர். அரசு பள்ளிகளில் பயின்று உயர்க்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ. 1000 வழங்கப்பட்டு வந்தது. அரசு உதவிப்பெறும் பள்ளியில் பயின்ற எனக்கு இந்த உதவிதொகை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. தற்பொழுது நம்முடைய முதல்வர் புதுமைப்பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று உயர்க்கல்வி பயிலும் என்னை போன்ற மாணவிகளும், மாதம் ரூ. 1000 கல்வி உதவித்தொகை பெறலாம் என  அறிவித்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.  இதன் மூலம் என்னுள் இருந்த ஏக்கம் நீங்கி இத்திட்டத்தில் பயன்பெற்று என்னுடைய மனம் நிறைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாதம் பெறும்  ரூ.1000 த்தை நான் என்னுடைய தேர்வு கட்டணம் அல்லது போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்திடும் வகையிலான புத்தங்களை வாங்குவது அல்லது எனக்கான சிறிய மருத்துவ செலவு என பயன்படுத்தி கொள்வேன். இதன் மூலம் என்னுடைய  பெற்றோரின் சுமையை  என்னால் குறைக்க முடியும். இத்திட்டத்தை கொண்டு வந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் பயனடைந்த மாணவி செல்வி செண்பகவல்லி  தெரிவித்ததாவது

                நான் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பி.எஸ்.சி. நர்சிங் படித்து வருகிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் கல்வி அறிவில் மட்டுமின்றி ஆற்றலிலும் சிறந்து விளங்க வேண்டும் என தொடங்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். முதலில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மட்டும் மாதம் ஆயிரம் வழங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டமானது தற்பொழுது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த உதவித்தொகையின் மூலமாக என்னுடைய மேற்படிப்பிற்கு மட்டுமல்லாமல் சிறு சிறு தேவைகளான பாட புத்தகங்கள் வாங்குவது, என்னுடைய பெற்றோரை சார்ந்து அல்லாமல் என்னுடைய தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் இந்த புதுமைப்பெண் திட்டம் எனக்கு பயனுள்ளதாக உள்ளது. எனவே இத்திட்டத்தை தொடங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் மா.சுனில்குமார், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன், மண்டலக் குழுத் தலைவர்கள் ஆர்.நரேந்திரன், கே.யூசுப்கான், மாமன்ற உறுப்பினர் க.சு.சண்முகம், மாவட்ட சமூக நல அலுவலர் இரா.உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.