• வேலூர் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்.
- வேலூர் மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 371 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 371 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் 68-வது தேசிய அளவிலான நடைபெற்ற ஓட்டப்பந்தயம், கைப்பந்து, சாப்ட் டென்னிஸ் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள், மாநில அளவிலான நடைபெற்ற டேபிள் டென்னிஸ், ஜுடோ, ஹாக்கி போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகள், மாநில அளவிலான மதுரையில் நடைபெற்ற முத்த வீரர்களுக்கான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
மேலும் தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம் வென்று நேபாளம் காத்மண்டில் நடைபெறவுள்ள சர்வதேச வில்வித்தை போட்டியில் பங்கேற்பதற்கு வேலூர் பகுதியை சார்ந்த செல்வன் லோகித் கிஷோர், செல்வி ராஜாஸ்ரீ ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.25,000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் கடந்த 2022-23. 2023-24 மற்றும் 2024-25ஆம் ஆண்களில் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடைபெற்று 24.01.2025 அன்று பரிசுகள் வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டில் 2024-25 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 பிரிவுகளாக கலைத்திருவிழா 2024-25 சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டிகளில் 11 மாணவ, மாணவிகள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்கள் தங்களுடைய பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். இப்போட்டிகளில் நடப்பு ஆண்டில் வேலூர் மாவட்டம் கலையரசன் விருது முதல் முறையாக பெறப்பட்டுள்ளது.
கலைத்திருவிழா போட்டியில் மாநில அளவில் ஒப்புவித்தல் போட்டியில் 2-ஆம் இடம் பிடித்த ஜமல்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கிஷான் என்பவருக்கு பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவரின் விருப்பு உரிமை நிதியிலிருந்து ரூ.5,000/க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
மேலும் கீ.வ.குப்பம் வட்டம், மேல்காவனூர் கிராமத்தை சார்ந்த செல்வி சத்யபிரியா-க்கு மருத்துவ சிகிச்சைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வேண்டி மனு அளித்தவருக்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ந.இராமசந்திரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment