• மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.
· மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையாக இருந்தவர் எம்.ஜி.ஆர் - வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு.
· எம்ஜிஆர் சிறப்பு புகைப்பட கண்காட்சி.
· பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்.
காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைகழகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைதலைவர் சங்கர் விசுவநாதன் வரவேற்றார்.
துணைதலைவர் ஜி.வி.செல்வம், விழா நோக்கம் குறித்தும், எம்ஜிஆர் வாழ்வில் நடைபெற்ற மனிதநேய செயல்களை குறித்தும், விரிவாக எல்லோர் மனதில் நிகழும் வகையில் பேசினார்.
எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சியை முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் திறந்து வைத்து பேசுகையில்,
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. கட்சி இரண்டாக உடைந்ததால் அப்போது நடந்த பேரவை தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியவில்லை. பின்னர், ஜெயலலிதா என்னை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியிடம் சமாதானம் பேச அனுப்பி வைத்தார். அதன்பிறகு மீண்டும் கட்சி இணைந்ததால் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கணிசமான வெற்றியை பெற்றது.
தற்போது அதிமுக 3-ஆக உடைந்துள்ளதால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒன்றாக இணைந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். எனவே அ.தி.மு.க.-வினர் சாதி, மத, பேதங்களை மறந்து சகோதரர்களாக இணைய வேண்டும் என்றார்.
விழாவில் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது;
தமிழகத்தில் சுயநிதி கல்லூரி என்ற புதிய தத்துவத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர்.தான். அதன்படி, 1984-ல் தொடங்கப்பட்ட 8 சுயநிதி பிரிவு கல்லூரிகளில் வேலூர் பொறியியல் கல்லூரிக்கான அனுமதி எனக்கு தரப்பட்டது. அப்போது, 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட வி.ஐ.டி, 2021-ல் பல்கலைகழகமாக தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 4 வி.ஐ.டி வளாகங்களில் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி சுமார் 70 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு பயில்கின்றனர். இதற்கான அனைத்து புகழும் எம்.ஜி.ஆரை மட்டுமே சேரும்.
தற்போது இருமொழியா, மும்மொழியா என்ற விவாதம் மேலோங்கி உள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர் அதிமுக-வை தொடங்கியபோதே ஒரு மொழியின் முன்னேற்றம் மற்ற மொழியின் அழிவில் ஏற்படக்கூடாது. மொழியின் முன்னேற்றம் மக்களின் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது என்றார்.
1968-ல் நான் எம்.பி.-யாக இருந்தபோது மொழிக் கொள்கை தொடர்பான நாடாளுமன்றத்தில், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி, ஆங்கிலம், ஹிந்தி படிக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி, ஆங்கிலம், அத்துடன் தென்னிந்திய மொழிகளில் ஒன்றை படிக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மொழி பளு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என எண்ணி பிரதமர் இந்திராகாந்தி தலைமையில் கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத்தனை ஆண்டுகளாகியும் ஹிந்தி பேசும் எந்த மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாக தென்னிந்திய மொழி கற்பிக்கப்படுவதில்லை என்பதை நினைவு கூற விரும்புகிறேன். எனவே, மொழிக் கொள்கையை பொருத்தவரை இரு மொழி கொள்கைதான் என்பது எம்.ஜி.ஆரின் கருத்து. அதில் வேறுபாடு இல்லை.
எம்.ஜி.ஆர் மக்களாட்சியை காக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். பொருளாதார கொள்கையை பொருத்தவரை கறுப்பு பணத்தை கட்டுப்படுத்த 100 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என அப்போதே தீர்மானம் போட்டார். அண்ணாவை போன்றே எம்.ஜி.ஆரும் ஜாதியை பார்த்து அல்லாமல் நல்ல கட்சிக்காரர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.
உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5-வது இடத்தில் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் 141-வது இடத்தில் உள்ளது. இதனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன் ஒரு சிலருக்கு மட்டுமே சென்று சேருகிறது. இதனை சரி செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அத்தகைய விழிப்புணர்வு கல்வியால் மட்டுமே ஏற்படுத்த முடியும். இந்தியா உயர்கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளது. இருந்தாலும் தமிழகம் உயர்கல்வியில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அத்தகைய மாற்றத்துக்கு எம்.ஜி.ஆர்.-தான் காரணம்.
கல்வியில் வளர்ந்தால்தான் நாம் பொருளாதாரத்திலும் வளர முடியும். ஆனால், தற்போது எல்லோராலும் உயர்கல்வி பெற முடிவதில்லை. எனவே, அனைவருக்கும் உயர்கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும். அது முடியாவிட்டால் முதலில் பெண்களுக்காவது உயர்கல்வியை இலவசமாக அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் சிறப்புரை ஆற்றி பேசுகையில்,
உலகத்தினர் மெச்சக்கூடிய அளவிற்கு வி.ஐ.டி.யை உருவாக்கியவர் ஜி.விசுவநாதன். 1957-ல் இருந்து எம்.ஜி.ஆருடன் பழகியவர் நான். 1967-ல் திமுக ஆட்சியை பிடித்தது. அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். தான் என்றார் அண்ணா. தஞ்சாவூரில் தமிழ் பல்கலைகழகத்தை கொண்டு வந்தார். மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்ததை இந்தியா கொண்டாடி கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் எல்லோரும் தமிழ்தான் கையெழுத்து போட வேண்டும் என்று அன்றே உத்தரவிட்டவர் எம்.ஜி.ஆர். தமிழீழ பெண்களின் மானம் காக்க அப்போது பண உதவியும், மருத்துவ உதவியும் செய்தார். மாநிலத்திற்கு பொருளாதார நிதி பகிர்வதை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியும், இப்போது ஆளும் பா.ஜ.க-வும் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கின்றனர் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, பாண்டுரங்கன், சு.ரவி,எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன், தமிழரசன், சூரியகலா, தமிழரசன், லோகநாதன், அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஆர்.கே.அப்பு, த.வேலழகன், எஸ்.எம்.சுகுமார், ஓ.பி.எஸ் பிரிவு மாவட்ட செயலாளர் டி.ஆர்.முரளி உள்பட திரளான அ.தி.மு.க., அ.ம.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வி.ஐ.டி. துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளர் ஜெயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment