• பேர்ணாம்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்.

  • பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் - வேலூர் மாவட்ட  வருவாய் அலுவலர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்.
  • முகாமில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் “நிறைந்தது மனம்“ நிகழ்ச்சியின்  வாயிலாக  மாற்றுத் திறனாளிகளுக்கான  அனைத்து துறைகள்.
  • ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் பயனடைந்த  மாற்றுத் திறனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு நன்றி.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window Approach) வட்டார வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID),  பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊரக வளர்ச்சித்துறை மூலமாக வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறையின் மூலம் இலவச பஸ் பாஸ் மற்றும் இரயில்வே பாஸ் பதிவு செய்தல், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் பாரத பிரமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) போன்ற திட்டங்களின்கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலமாக வங்கி கடன், கூட்டுறவு வங்கியின் மூலமாக வங்கி கடன் பெறுதல் (NHFDC), முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பல்துறை அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, அணைக்கட்டு வட்டாரம், அகரம், வேலூர், குடியாத்தம், கணியம்பாடி, கீ..குப்பம் ஆகிய வட்டாரங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாமை மாவட்ட வருவாய் அலுவலர்  .மாலதி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன் தொடங்கி வைத்தனர்.

இந்த முகாமில் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலிருந்து 593 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு  அரசின் அனைத்து துறைகளின் சேவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி மனு அளித்தனர். இவற்றில் 110 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகளும், 98 மாற்றுத் திறனாளிகளுக்கு UDID  அடையாள அட்டை பதிவுகளும்,  3 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா  ரூ.1,09,000/- வீதம் என மொத்தம் ரூ.3,27,000/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 3 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 01  மாற்றுத் திறனாளிக்கு ரூ.9,800/- மதிப்பிலான சக்கர நாற்கலியும், 32 மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்தில் இலவச பயணத்திற்கான அட்டைகளும், 32 மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர் வண்டியில் இலவச பயணத்திற்கான அட்டைகளும், சக்கர நாற்காலி, பேட்டரியால் இயங்கும் நாற்காலி, காதொலி கருவி போன்ற உபகரணங்களை கோரி 40 பேருக்கு ALIMCO- Artificial Limbs Manufacturing Corporation Of India  திட்டத்தின்கீழ் பதிவு என 276 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

                தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் “நிறைந்தது மனம்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் குறித்து செய்தியாளர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

நிறைந்தது மனம் நிகழ்ச்சி வாயிலாக மாவட்ட வருவாய் அலுவலர் இம்முகாம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடந்த ஜீன் 2024 இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அழைத்துச் சென்று அரசின் திட்டங்களால் பயனடைந்து வரும் பொதுமக்களிடம் நேரடியாக கருத்துகளைக் கேட்டு அவ்விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கிறார்கள் என்றும், மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின் பேரில் இந்நிகழ்ச்சிக்குநிறைந்தது மனம்என பெயரிட்டு செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் குறித்த விவரங்களும், இம்முகாம்களின் மூலம் பயனடைந்த  மாற்றுத் திறனாளிகளின் அனுபவங்களும் செய்தியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது.  மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window Approach) வட்டார வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

                வேலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 7 வட்டாரங்களில்  காட்பாடி வட்டாரத்தில் 24.01.2025 அன்றும், அணைக்கட்டு வட்டாரத்தில் 05.02.2025 மற்றும் 12.02.2025 ஆகிய 2 நாட்களிலும், வேலூர் வட்டாரத்தில் 07.02.2025 அன்றும், குடியாத்தம் வட்டாரத்தில் 14.02.2025 அன்றும், கணியம்பாடி வட்டாரத்தில் 20.02.2025 அன்றும், கீ..குப்பம் வட்டாரத்தில் 21.02.2025 அன்றும் என ஏற்கனவே 7 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 7 முகாம்களில் 4,504 மனுக்கள் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2,506 மனுக்கள் பெறப்பட்டு 2,101 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இம்முகாம்களில் 695 மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளும், 798 மாற்றுத்திறனாளிகளுக்கான UDID அடையாள அட்டை பெறுவதற்கு பதிவுகளும், 558 மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து மற்றும் இரயிலில் இலவச பயணத்திற்கான ஆணைகளும், 24 மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடனுதவிகளும், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.3,15,000/- மதிப்பிலான சக்கர நாற்காலிகளும், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.4,07,200/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதர மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டு அம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இம்முகாம்களில்  பயனடைந்த மாற்றுத்திறனாளிகள் தெரிவித்ததாவது.

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பரவக்கல் கிராமத்தை சார்ந்த  மாற்றுத் திறனாளி பிரபாவதி, என்பவர்  தெரிவித்ததாவது.

             என்னுடைய பெயர் பிரபாவதி. பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பரவக்கல் கிராமத்தில் வசித்து வருகிறேன். என்னால் முதுகு தண்டுவட பாதிப்பின் காரணமாக நடக்க இயலாது. 4 மாதத்திற்கு முன்  முதுகு தண்டுவட பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் பேட்டரில் இயங்கும் சக்கர நாற்காலி கோரி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன். அம்மனுவின்மீது தீர்வு காணப்பட்டு  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் காட்பாடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்  பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி எனக்கு வழங்கப்பட்டது. தற்போது என்னால் எந்தவொரு இடத்திற்கு மற்றொருவரின் துணையின்றி சுயமாக சென்று வரமுடிகிறது. வீட்டிலுள்ள நேரங்களில் ஏதாவது சுயதொழில் செய்யலாம் என எனக்கு தோன்றியது. எனக்கு ஏற்கனவே தையல் வேலை தெரியும். தையல் இயந்திரம் கிடைத்தால் சுயமாக டெய்லரிங் வேலை செய்யலாம். இதனால் நான் அரசின் இலவச தையல் இயந்திரத்தை பெற மாற்றத்திறனாளிகள் நலத்துறையில் விண்ணப்பிக்க வேலூருக்கு செல்லலாம் என எண்ணியிருந்தேன். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில்  அனைத்து வட்டாரங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான  அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த  சிறப்பு முகாம் பேர்ணாம்பட்டில் இன்று நடைபெறுவதாக செய்திதாளில் வெளியான  செய்தியின் மூலம் அறிந்து கொண்டேன்.  நான் சொந்தமாக தொழில் செய்யும் பொருட்டு இம்முகாமில் தையல் இயந்திரம் கோரி மனு அளித்தேன். இம்மனு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விரைவில் தையல் இயந்திரம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு  இது போன்ற அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமை எங்கள் பகுதியிலேயே நடத்துவதால் எங்களுக்கு சிரமமின்றி அணுக முடிகிறது. இல்லையென்றால் நாங்கள் இங்கிருந்து பஸ்சில் வேலூருக்கு சென்று மனு அளிக்க வேண்டும். ஏற்கனவே நடக்க முடியாமல் சிரமமப்படும் என்னை போன்ற மாற்றத்திறனாளிகளுக்கு 100 கி.மீ. பயணித்து சென்று வருவது என்பது மிகவும் சிரமமான விசயம்.  எனவே எங்கள் பகுதியிலேயே மாற்றுத்திறனாளிகளுக்க்கான சிறப்பு முகாமை நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கொத்தபல்லி ஊராட்சியை சார்ந்த பாரா விளையாட்டு வீரர்  மாற்றுத்திறனாளி பிரபாகரன் என்பவர் தெரிவித்ததாவது.

நான் ஒரு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர். நான் இதுவரை பல்வேறு பாரா விளையாட்டுகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற்றுள்ளேன். மேலும் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு பாரா விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது ரயிலில் சென்று வர என்னால் இயலாது. மேலும் அதற்கான கட்டணத் தொகையும் என்னால் செலவிட இயலாது. எனவே முகாமில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ரயில்வே பயண கட்டண சலுகை அட்டை கோரி மனு அளித்திருந்தேன். என்னுடைய மனுவினை உடனடியாக பரிசினை செய்து எனக்கு இன்று ரயில்வே பயண கட்டண சலுகை அட்டையை இன்று வழங்கினார்கள். என்னைப் போன்ற மாற்றுத்திறனாளி வீரர்கள் வேலூர் சென்று வர தனிநபர் உதவி இல்லாமல் சென்ற வர இயலாது. என்னுடைய பகுதியிலேயே இம்முகாமை அமைத்துக் கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை போன்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அதிகமான நலத்திட்ட உதவிகளை செய்து வருவதால் என்னுடைய மனம் நிறைவாக உள்ளது.

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், இராஜக்கல் ஊராட்சி, பன்னீர் குட்டை கிராமத்தை சார்ந்த மாற்றுத் திறனாளி  ரமேஷ், என்பவர் தெரிவித்ததாவது.

 நான் பேரணாம்பட்டு பகுதியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு பந்தல் அமைப்பாளர் பணியினை மேற்கொண்டு வருகிறேன். எனக்கு சில காலங்களுக்கு முன்னர் நடந்த விபத்தில் என்னுடைய வலது கால் பாதிக்கப்பட்டு என்னால் நடக்க முடியாமல் போனது. பின்னர் அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கால் பொருத்தி தற்போது நடந்து வருகிறேன். ஆகையால் என்னுடைய பணியினை பந்தல் வேலைகளை மற்றவர் உதவியுடன் செய்து வந்தேன். மேலும் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் எனக்கு என் தொழிலை சிறப்பாக நடத்திட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டும் என்று கடந்த மாதம் மனு அளித்திருந்தேன். என்னுடைய மனுவினை கூர்ந்து பரிசீலனை செய்து இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நல முகாமில் எனக்கு ரூ.1,01,800/- மதிப்பிலான  இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் நான் மற்றவர்களை சார்ந்து  இல்லாமல் என்னுடைய பந்தல் அமைக்கும் தொழிலை சிறப்பாக செய்வேன். மேலும் என்னை போன்ற மாற்றுத்திறனாளிகள் ஏதேனும் நலத்திட்ட உதவிகள் பெற வேண்டுமானால் வேலூரில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு சென்று வந்த பிறகு தான் பெற முடியும். எங்கள் பகுதியிலே இத்தகைய அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் முகாமை ஏற்படுத்திக் கொடுத்ததனால் அனைத்து துறைகளும் இங்கே ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால் எங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உதவியாக இருந்தது. இம்முகாமை அமைத்து கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர்-க்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் என்னுடைய மனமும் நிறைவாக உள்ளது.

பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், டி.டி.மோட்டூர் ஊராட்சி, கமலாபுரம் கிராமத்தை சார்ந்த மாற்றுத் திறனாளி பன்னீர், என்பவர் தெரிவித்ததாவது.

நான் ஒரு தையல் தொழிலாளி. நான் தொழில் செய்வதற்கு தேவைப்படும் துணிமணிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் துணிகளை தைத்து வெளியே கொடுத்து செல்ல வேண்டுமானால் மற்றவர் உதவியை நாட வேண்டியிருக்கும். மேலும் என்னுடைய தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் வாங்கவும் அடுத்தவர் உதவியை நாட வேண்டியிருந்தது. மேலும் எனக்கு சில காலம் முன்பு விபத்து ஏற்பட்டு கால் அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியாமல் போனது. நான் கடந்த மாதத்திற்கு முன் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் வண்டி வேண்டும் என்று மனு அளித்திருந்தேன், என்னோட மனுவினை பரிசீலித்து இன்று நடைபெற்ற முகாமில் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இம்முகாமை ஏற்படுத்திக் கொடுத்த முதலமைச்சர்-க்கு நன்றி

இம்முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமுலு விஜயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்தனன், பேர்ணாம்பட்டு நகர்மன்ற தலைவர் பிரேமா, மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத்தலைவர் கிருஷ்ணவேனி, நகர்மன்ற துணைத்தலைவர் ஆலியார் ஜுபேர் அஹமத், பேர்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் துணைத்தலைவர் லலிதாடேவிட், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், கௌரி, பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் சிவசங்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.