• கரசமங்கலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
· உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் – நீர்வள துறை அமைச்சர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மார்ச் 22,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம
சபை கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில்
உள்ள 247 கிராம ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
காட்பாடி ஊராட்சி ஒன்றியம், கரசமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.
இந்த கிராம சபை கூட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், கொத்தடிமை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என அறிவித்தல், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டம் 2024-2025 கீழ் பழுதடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல் திட்டம் 2024-25, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் 2025-26, கலைஞரின் கனவு இல்லம் 2025-26 ஆம் ஆண்டு திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்ந்தெடுத்தல், ஜல்ஜீவன் திட்டம் மற்றும் கிராம ஊராட்சியின் இதர பொருட்கள் குறித்து கிராம சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நீர்வள துறை அமைச்சர் தெரிவித்ததாவது
கரசமங்கலத்தில் நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆங்கிலத்தில் I FEEL AT HOME என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதாவது நான் இருக்கும் இடத்தை சொந்த வீட்டில் இருப்பதை போல உணர்கிறேன் என்பது பொருள். தற்பொழுத கரசமங்கலத்தில் இருப்பது என்னுடைய சொந்த வீட்டில் இருப்பதை போல் உணர்கிறேன்.
கரசமங்கலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டப் பணிகளும் கலைஞருடைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டவை. இந்த ஊரின் வளர்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தயாநிதி மற்றும் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு தேவையான திட்டங்களை கேட்டு பெற்று நிறைவேற்றி வருகின்றனர்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கரசமங்கலம் ஊராட்சிக்கு மட்டும் 100 பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.
ஊராட்சி மன்ற தலைவர் 3 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இந்த கிராமத்திற்கு ஒரு கால்நடை மருந்தகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், ஒரு சமுதாய கூடம் அமைக்க வேண்டுமென கேட்டு கொண்டுள்ளனர். கால்நடை மருந்தகம் அமைக்க கால்நடைத் துறை அமைச்சர்-டம் கலந்து ஆலோசித்து இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிடப்படும். சுத்திகரிப்பு நீர் நிலையம் ஊரக வளர்ச்சி துறையின் நிதியிலிருந்து கட்டி தரப்படும். சமுதாய கூடம் என்னுடைய சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி தரப்படும்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் காட்பாடி வட்டத்தில் 30,000 மகளிர் பயனடைந்து வருகின்றனர். விடுபட்ட மகளிர் தங்களுக்கான கலைஞர் உரிமை தொகையை பெற வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெறும் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒன்றிய அரசிடமிருந்து வரவில்லை. அந்த நிதியை விடுவிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் 100 நாள் வேலைக்கான ஊதியம் அனைவருக்கும் வழங்கப்படும் என நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
பின்னர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் தோட்டக்கலைத் துறையின் சார்பில் ரூ.36,000/- மதிப்பிலான மழைதூவான் இயந்திரத்தை 1 விவசாயிக்கு வழங்கினார். மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்-டம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, மாவட்ட வருவாய் அலவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீசெந்தில்குமரன், காட்பாடி ஒன்றியக் குழுத் தலைவர் வே.வேல்முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் தணிக்காசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், கரசமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் தயாநிதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment