• வேலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா
·
வேலூர் 3-வது மாபெரும்
புத்தகத் திருவிழாவின் நிறைவு விழா - மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
வேலூர் கோட்டை மைதானத்தில் வேலூர் மாவட்டத்தின் 3-வது மாபெரும் புத்தக திருவிழாவின் நிறைவு விழா மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நாட்களுக்கு புத்தகத் திருவிழாவினை நடத்த உத்தரவிட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மாபெரும் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறார்கள்.
நம்முடைய வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டோடு மூன்றாவது ஆண்டாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த புத்தகத் திருவிழாவானது நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. அந்த இடத்திற்கு சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் புத்தக ஆர்வலர்களால் அதிக அளவில் வர முடியவில்லை.
போக்குவரத்து வசதி அதிகம் உள்ள மிக முக்கிய இடமான வேலூர் கோட்டை மைதானத்தில் இந்த புத்தகத் திருவிழாவினை நடத்தினால் சிறப்பாக இருக்கும். பார்வையாளர்கள் அதிக அளவிலே வருவார்கள் என்று அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தெரிவித்தனர். அதனடிப்படையில் தொல்லியல் துறையில் அனுமதி பெறுவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முயற்சிகள் மேற்கொண்ட பொழுது நம்முடைய நீர்வளத்துறை அமைச்சரும், வேலூர் பாராளுமன்ற உறுப்பினரும் இதற்காக தொல்லியல் துறை அலுவலர்களிடமும், மத்திய அமைச்சர்களிடமும் பேசி 10 நாட்களுக்கு இந்த அனுமதியை பெற்று தந்தனர்.
இந்த இடத்திலே புத்தகத் திருவிழா நடைபெறுவதனால் சுமார் 70,000 அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகளில் பயிலும் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக உயர்கல்வி சேர வேண்டும் என்பதனை மாவட்ட அளவிலான நிர்வாகிகளும், ஆசிரியர்களும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர வேண்டும் என்பதற்காக அரசின் சார்பில் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும்
அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன்
திட்டத்தில் மாதம் ரூபாய் ஆயிரமும், மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.ஆயிரமும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவ்விரு திட்டங்களின் மூலம் நம்முடைய மாநிலத்தில் உயர்கல்வி
பயிலும் மாணவ, மாணவிகளின்
சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இது மட்டுமின்றி படிக்கும்பொழுதே மாணவர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகளையும், வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் நான் முதல்வன் எனும் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு, கல்லூரி காலங்களிலேயே திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெறும் அளவிற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. படித்து முடித்த பிறகு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அரசின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு கல்வியிலே சிறந்து விளங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் மாவட்டத்தில் வீட்டில் சிறப்பான முறையில் நூலகத்தை பராமரிக்கும் எபினேசர் சௌந்தர்ராஜ் என்பவரை பாராட்டி கேடயமும், பாராட்டு சான்றிதழையும் வழங்கினார். தொடர்ந்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா “கடிகாரம் ஓடும் முன் ஓடு” என்ற தலைப்பில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் சிறப்புரையை வழங்கினார். மேலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சித்த மருத்துவர் தில்லைவாணன் நலமோடு வாழ என்கின்ற தலைப்பில் சித்த மருத்துவம் மற்றும் உணவு முறையின் பயன்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, துணைமேயர் மா.சுனில்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செ.மணிமொழி, மாவட்ட நூலக அலுவலர் பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment