• வேலூர் மாநகராட்சி மண்டலம் 1 மற்றும் 2 ல் ஆய்வுக் கூட்டம்.
· வேலூர் மாநகராட்சி, மண்டலம் 1 மற்றும் 2 ல் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சி, மண்டலம் 1-ல் நடைபெற்று வரும் குடிநீர் பணிகள், சாலை பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மண்டலம் 1-ல் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் 13 சாலை பணிகள், 24 பாதாள சாக்கடை திட்டப்பணிகளை ஏப்ரல் மாதத்தின் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.
மண்டலம் 1 இல் உள்ள 15 வார்டுகளுக்கு 14 MLD அளவு குடிநீர் விநியோகம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் 13 MLD அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தண்டல்கிருஷ்ணாபுரம், பள்ளிகுப்பம், பாலாற்று பகுதி போன்ற உள்ளூர் நீர் ஆதாரங்களில் இருந்து சிறு பழுதுகளை நீக்கப்பட்ட பிறகு 2 MLD அளவு குடிநீர் கூடுதலாக வழங்கப்படும்.
மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகளை முறையாக பாரமரிக்க வேண்டும். தெரு விளக்குகள் குறித்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரு விளக்கு பராமரிப்பில் மண்டலம் 1-ல் புகாராக பதிவு செய்யப்பட்டிருந்த பொதுமக்கள் 2 பேரிடம் தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டது என தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் மண்டலம் 2-க்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து 2 மண்டல அலுவலகத்தில் ஆணையாளர், உதவி ஆணையாளர், உதவி செயற்பொறியாளர், மாநகர நல அலுவலர், சுகாதார அலுவலர் உட்பட மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மண்டலம் 2-க்குட்பட்ட வார்டுகள் 18 முதல் 30 வரை, 34, 35 ஆகிய 15 வார்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 121 சாலை பணிகள் குறித்து கேட்டறிந்தார். இவற்றில் 70 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், 9 சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வரும் தெருக்களில் பணிகளை விரைந்து முடித்து சாலை பணிகளை தொடங்க உத்தரவிட்டார்.
15 வார்டுகளிலும் உள்ள 31 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து வழங்கப்படும் குடிநீர் குறித்தும் கேட்டறிந்தார். கோடை காலத்தில் 15 வார்டுகளிலும் எவ்வித குடிநீர் பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
மண்டலம் 2-ல் நாள்தோறும் பெறப்படும் 72 மெட்ரிக் டன் திடக்கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து பண்டல்களாக கட்டி மறு சுழற்சியாளர்களிடம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நித்யானந்தம், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment