• வேலூர் மாவட்ட தமிழ் வார விழா போட்டிகள்.
வேலூர் மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு.
வேலூர் மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே-5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்பதை மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் இணைந்து பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு "தமிழ் வார விழா' மிகச் சிறப்பாக 05.05.2025 முதல் 15.05.2025 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தமிழ் வார விழாக் கொண்டாட்டதில் பள்ளி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டும், அவர்தம் திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டும் 05.05.2025 மற்றும் 06.05.2025 ஆகிய இரண்டு தினங்களில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியன நடத்தப்பட்டன.
இப்போட்டிகள் வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் குடியாத்தம் ஆகிய இரண்டு கோட்டங்களில் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்தோடு போட்டிகளில் பங்கேற்று தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தினர்.
பேச்சுப் போட்டிகளில் 40 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றதில் 19 மாணவ, மாணவிகளும், கட்டுரைப் போட்டிகளில் 29 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றதில் 14 மாணவ, மாணவிகளும், கவிதைப் போட்டிகளில் 22 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றதில் 15 மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றனர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 180 மாணவர்கள் பங்கேற்று அதில் 30 திருக்குறள் ஒப்புவித்தலில் 27 மாணவ, மாணவிகளும், 50 திருக்குறள் ஒப்புவித்தலில் 06 மாணவ, மாணவிகளும், 100 திருக்குறள் ஒப்புவித்தலில் 06 மாணவ, மாணவிகளும், 150 திருக்குறள் ஒப்புவித்தலில் 02 மாணவ, மாணவிகளும், 400 திருக்குறள் ஒப்புவித்தலில் 01 மாணவியும் ஒப்புவித்து வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், நீதிநெறிவகுப்புகள் இரண்டு மையங்களிலும் 05.05.2025 முதல் தொடங்கி 15.05.2025 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
தமிழ் அறிஞர்களில் சிறந்த தமிழறிஞர் தமிழ் தாயின் தவப்புதல்வர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவை தமிழ் வார விழாவாக மாநில முழுவதும் ஏப்ரல் 29-ம் நாள் முதல் மே 5--ஆம் நாள் வரை கொண்டாட வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள். அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் தமிழ் வார விழாவானது வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியிலும், குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. போட்டிகளில் மாணவ, மாணவிகள் திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, எழுத்துப்போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுள்ளன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 30 திருக்குறள் முதல் அதிகபட்சமாக 400 திருக்குறள் வரை மாணவ, மாணவிகள் ஒப்புவித்துள்ளனர்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை போதிக்கும் வகையில் தமிழ் நூல்களான ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, திரிகடுகம், நாலடியார், பழமொழி நானூறு, பாரதிதாசனின் புதிய ஆத்திசூடி போன்ற நீதி நூல்கள் போன்ற நல்லொழுக்க நீதி நூல்களும் போதிக்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியங்கள் நம் வாழ்வில் ஒன்றர கலந்து நமக்கு நல்ல ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக விளங்குகிறது. அப்படிப்பட்ட தமிழ் இலக்கியத்தின் நீதி நூல்களை நாம் அனைவரும் பயின்று அவற்றை பின்பற்றி வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், 2-வது மண்டலக் குழுத் தலைவர் ஆர். நரேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment