• வேலூர் மாவட்டத்தில் புற்றுநோய் கண்டறிதல் முகாம்
· வேலூர் மாவட்டத்தில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டத்தின்கீழ் சமுதாய புற்றுநோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேலூர் மாவட்டத்திற்கான புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டத்தை 12.05.2025 அன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சமூக அளவிலான கருப்பை வாய், மார்பக மற்றும் வாய் புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் மக்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களான வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஆகிய மூன்று புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கி உயிரிழப்புகளை தவிர்த்து அவர்களின் வாழ்நாளை நீட்டித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தும் உயரிய நோக்கோடு மக்களின் நலன் கருதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி செயல்படுத்தப்பட உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் பணிபுரியும் பெண் சுகாதார தன்னார்வலர்களைக் கொண்டு மேற்கூறிய புற்றுநோய்களுக்கான விழிப்புணர்வு வழங்கி மற்றும் பரிசோதனை செய்து கொள்வதற்கான அழைப்பிதழை அவர வீடுகளிலேயே வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி ஆண் மற்றும் பெண் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்படின் அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் பணிபுரியும் இடங்களான அரசு அலுவலகங்கள் மற்றும் தொழில் சார் நிறுவனங்களில் மருத்துவக் குழுவினரைக் கொண்டும் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் இலவச புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 89 கிராமப்புற துணை நல்வாழ்வு மையங்களில் MLHP (செவிலியர்கள்) மூலம், 46 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செவிலியர்கள் மூலம், 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 1 மருத்துவக்கல்லூரியில் மேற்கொண்ட புற்றுநோய் பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வருடமாக 465 நபர்கள் கர்ப்பபை வாய் புற்றுநோய், 180 நபர்கள் மார்பக புற்றுநோய் மற்றும் 10 நபர்கள் வாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை விரிவாக்க திட்டத்தின்கீழ் சமுதாய புற்றுநோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை முகாம் நடத்துவது குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் அரசு மருத்துவக் கல்லூரி, துணை இயக்குநர் அரசு மருத்துவமனை, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், சமூக நலத் துறை, சிறைத் துறை. மகப்பேறு பெண்கள் நல மருத்துவ குழு தலைவர், ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, பள்ளி கல்வித் துறை, கிருத்துவ மருத்துவ கல்லூரி, ரூசா, நறுவி மருத்துவமனை, இந்திய மருத்துவ கழகம் வேலூர் தலைவர், தனியார் மருத்துவமனைகள், தனியார் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டு இத்திட்டத்தை மாவட்ட அளவில் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது.
தமிழ்நாடு புற்றுநோய் பதிவேடு 2017-ன்படி மார்பக புற்றுநோய் 1 இலட்சம் மக்கள் தொகையில் 25 பேருக்கு ஒரு வருடத்தில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஒரு வருடத்திற்கு 18 பேருக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் வாய் புற்றுநோய் 1 இலட்சம் மக்கள்தொகையில் ஒரு வருடத்திற்கு 10 பேருக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தரவுகளின்படி வேலூரில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 6.5 இலட்சம் உள்ளார்கள். வருடத்திற்கு 163 நபர்கள் மார்பக புற்றுநோயும், அதேபோல் ஒரு வருடத்திற்கு 117 நபர்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், ஒரு வருடத்திற்கு ஆண் மற்றும் பெண்களில் 130 நபர்கள் வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.
இந்த நபர்களை ஆரம்ப நிலையிலே கண்டறிந்தால் அவர்களின் உயிர், உடமை, பொருளாதாரம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கை தரத்தை உறுதி செய்ய முடியும். எனவே பொது மக்கள், சங்கங்கள், தொழிற்சாலைகள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டுமென அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாவட்ட சுகாதார அலுவலர் (பொ) மரு.பிரதாப்குமார், தேசிய நல்வாழ்வு குழும மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மரு. ஆதித்யா, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.ரோகிணிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment