• பீஞ்சமந்தை ஊராட்சி நலத்திட்டங்கள்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சியில் ரூ.1.54 கோடி மதிப்பில் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 2 தார் சாலைகள், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.12.67 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், பீஞ்சமந்தை பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் திறந்து வைத்து, பீஞ்சமந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 65 பயனாளிகளுக்கு ரூ.81,05,000/- மதிப்பில் கறவை மாட்டு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்கள்.
மேலும் பீஞ்சமந்தை கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அரசு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.36 கோடி மதிப்பில் தாட்கோ மூலம் கட்டப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 14.04.2025 அன்று திறந்து வைக்கப்பட்ட அரசு பழங்குடியினர் நல மாணவியர் விடுதியை பார்வையிட்டனர்.
முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்
முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள தொங்குமலை முதல் தேக்குமரத்துர் வரை 1.50 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.55.13 இலட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை அமைக்கப்பட்டதன் மூலம் பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள செங்காடு மற்றும் தேக்குமரத்தூர் கிராமங்களை சார்ந்த சுமார் 500-க்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைவார்கள்.
மேலும் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தொங்குமலை ஆலமரம் முதல் நாயக்கனூர் வரை 2.8 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.98.65 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை அமைக்கப்பட்டதன் மூலம் பீஞ்சமந்தை, கீழ்பீஞ்சமந்தை, தொங்குமலை, கோனூர், பெரிய எட்டிப்பட்டு ஆகிய கிராமங்களை சார்ந்த சுமார் 1000-ற்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைவார்கள். இவ்விரு சாலைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் இன்று திறந்து வைத்தனர்.
பீஞ்சமந்தை மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம்
வேலூர் மாவட்டத்தில் 506 முழு நேர நியாய விலைக் கடைகளும், 258 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 764 பொது விநியோக திட்ட நியாய விலைக் கடைகள் 4,55,585 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்ட எல்லையில் செயல்பட்டு வரும் பீஞ்சமந்தை-558 குடும்ப அட்டைகள், நெக்கினி-328 குடும்ப அட்டைகள், கோனூர்-238 குடும்ப அட்டைகள், தொங்குமலை -448 குடும்ப அட்டைகள் மற்றும் பாலம்பட்டு-476 குடும்ப அட்டைகள் ஆகிய 5 நியாய விலைக் கடைகள் 2048 குடும்ப அட்டைகளுடன் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நம்மியம்பட்டு மலைவாழ் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வந்தது.
தற்போது மாவட்ட ஆட்சியர் ஆணையின்படி வேலூர் மாவட்டத்திலுள்ள பீஞ்சமந்தை மலைவாழ் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்திற்கு 5 நியாய விலைக் கடைகள் மாற்றப்பட்டு மார்ச் 2025 முதல் செயல்பட்டு வருகிறது. பீஞ்சமந்தை கூட்டுறவு முழுநேர நியாய விலைக் கடை 558 குடும்ப அட்டைகளுடன் பஞ்சாயத்து கட்டிடத்தில் இலவசமாக செயல்பட்டு வந்தது.
தற்போது இந்நியாய விலைக் கடைக்கென அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.67 இலட்சம் மதிப்பில் பீஞ்சமந்தை நியாய விலைக் கடைக்கு தனியாக அரசு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய கட்டடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தனர்.
அரசு பழங்குடியினர் நல மாணவியர் விடுதி கட்டடம்
மாநில அரசு திட்டத்தின்கீழ், வேலூர் மாவட்டம், பீஞ்சமந்தை கிராமத்தில் அரசு பழங்குடியினர் நல மாணவியர் விடுதி (50 எண்ணிக்கை) தங்கும் விடுதி கட்டடம் கட்ட ரூ.135.57 இலட்சத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தரைத்தளம் 201.70 சதுர மீட்டர், முதல் தளம் 201.70 சதுர மீட்டர், இரண்டாம் தளம் 166.63 சதுர மீட்டர் மொத்தம் கட்டடப் பரப்பளவாக 570.03 சதுர மீட்டர் கொண்ட விடுதி கட்டடமாக கட்டப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் இருப்பு வைப்பு அறை, காப்பாளினி அறை, உணவு தயாரிக்கும் அறை. உணவு உண்ணும் அறை, நவீன வசதியுடன் வடிவமைக்கப்பட்ட மூன்று குளியல் அறை மற்றும் நான்கு கழிவறைக் கூடம் உள்ளது. முதல் தளத்தில் மூன்று தங்கும் அறை. நவீன வசதியுடன் வடிவமைக்கப்பட்ட மூன்று குளியல் அறை மற்றும் நான்கு கழிவறைக் கூடம் உள்ளது. இரண்டாம் தளத்தில் இரண்டு தங்கும் அறை, நவீன வசதியுடன் வடிவமைக்கப்பட்ட குளியல் அறை மற்றும் நான்கு கழிவறைக் கூடம் உள்ளது. விடுதி தரைத்தளம், முதல்தளம் மற்றும் இரண்டாம் தளத்திற்கு குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியும் உள்ளது. இவ்விடுதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 14.04.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விடுதியை மாவட்ட ஆட்சித் தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டனர்.
விஎல்ஆர் 339 பீஞ்சமந்தை பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட விஎல்ஆர் 339 பீஞ்சமந்தை பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 15.04.2025 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இச்சங்கத்தில் 50 பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது 10 உற்பத்தியாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு சராசரியாக 50 முதல் 100 லிட்டர் வரை சங்கத்தின் மூலமாக பால் கொள்முதல் செய்து முத்துகுமரன்மலை தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டு வரப்படுகிறது.
இச்சங்கத்தில் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பாலின் தரத்திற்கு ஏற்றுவாறு பால் பணம் பெறும் பொருட்டு தினசரி பால் தரபரிசோதனை மேற்கொள்ள ரூ.60,000/- மதிப்புள்ள மில்க் அனலைசர் (MILK ANALYSER) கருவி வழங்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் புதிய சங்கம் தொடங்கப்படுவதை முன்னிட்டு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு 100% மானியத்தில் தீவன விதைகள் சோளம் மற்றும் மக்கா சோளம் (sorghum and maize) வழங்கப்படும். இச்சங்கத்தில் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் புதிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதம் ரூ.10/- பெற்று ரூ.4 இலட்சம் காப்பீடு செய்து தரப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பால் உற்பத்தியாளரின் வாரிசுகளுக்கு கல்விக்காக ரூ.50,000/- (தலா 2 குழந்தைகள்), திருமணத்திற்காக ரூ.60,000/- மற்றும் ஈமச்சடங்கு ரூ.25,000/- போன்ற உதவிதொகைகள் வழங்கப்படும்.
அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சி, தேந்தூர் அங்கன்வாடி மையம்
அணைக்கட்டு வட்டாரம். பீஞ்சமந்தை ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் பணிகள் துறை கீழ் செயல்பட்டு வரும் தேந்தூர் அங்கன்வாடி மையம் 2023- 2024 நிதியாண்டில் ரூ.1431000/- மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. இம்மையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இம்மையத்தில் 6 கர்ப்பிணிகள், 8 பாலூட்டும் தாய்மார்கள், 96-பிறப்பு முதல் 6 வயது குழந்தைகள் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். இதில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு துணை உணவாக நாளொன்றுக்கு 150கி வீதம் மாதத்தில் 25 நாட்களுக்கு கணக்கிட்டு வழங்கப்படுகிறது. 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள 12 குழந்தைகளுக்கு 125 கி வீதம் மாதத்தில் 25 நாட்களுக்கு கணக்கிட்டு வழங்கப்படுகிறது. மேலும் 1 வயது முதல் 2 வயது வரை உள்ள 9 குழந்தைகளுக்கு கூடுதலாக வாரத்திற்கு 3 வேகவைக்காத முட்டை வழங்கப்படுகிறது. இம்மையத்தில் 50 குழந்தைகள் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர். முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு வார அட்டவணைபடி முட்டை மற்றும் ஊட்டச்சத்தான மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும் முன்பருவ கல்வி குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 50கி சத்துமாவில் கொழுக்கட்டை வழங்கப்படுகிறது. இம்மையத்தில் பதிவு செய்யப்பட்ட 103 குழந்தைகளுக்கும் மாதந்தோறும் எடை மற்றும் உயரம் கணக்கிட்டு போஷன் ட்ரக்கர் என்ற அரசு செயலியில் பதிவிட்டு அவர்களின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நலதிட்ட உதவிகள்
பீஞ்சமந்தை ஊராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட பீஞ்சமந்தை பழங்குடியினர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு ஆவின் சார்பில் இலவசமாக பால் சேகரிக்கும் கேன்கள், பரிசோதனை இயந்திரம், பொருட்கள் கலவை இயந்திரம் மற்றும் விவசாயிகளுக்கான சோள பயிர், கால்நடை தீவன விதைகளையும்,
கூட்டுறவுத் துறையின் சார்பில் பீஞ்சமந்தை மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.6,05,000/- மதிப்பில் பயிர் கடன் உதவிகளையும்.
பீஞ்சமந்தை ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்காக தாட்கோ நிறுவனத்தின் மூலம் ஒரு பயனாளிகளுக்கு தலா ரூ.1,50,000/- வீதம் மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கான வங்கி கடன் உதவிகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
தாட்கோ மூலம் ஒரு பயனாளிக்கு வழங்கப்படும் கறவை மாடு கடனுதவி தொகையான 1,50,000 ல் ரூ.52,500/- மானியமாக வழங்கப்படுகிறது.
பீஞ்சமந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது,
பீஞ்சமந்தையில் புதிய தார் சாலைகள், அங்கன்வாடி மையம், நியாய விலை கடை, பால் கூட்டுறவு சங்கம் போன்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்துள்ள இன்றைய நாள் மகிழ்ச்சியான நாள். பீஞ்சமந்தை மலைப்பகுதியில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் சாலை வசதி இல்லாத நிலை தற்போது மாற்றப்பட்டு, முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை வரை கடந்த ஆண்டு புதிய சாலை அமைக்கப்பட்டது. பீஞ்சமந்தையில் இருந்து அருகில் உள்ள கிராமங்களுக்கும் தற்பொழுது சாலைகள் ஒவ்வொன்றாக அமைக்கப்பட்டு வருகிறது.
பீஞ்சமந்தையில் மலை கிராமத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த முறை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டபோது இந்த தகவல் கூட்டுறவுத் துறை அலுவலர்களின் மூலம் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலை பகுதியில் இருந்து பொருட்கள் இங்கே கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்குவதற்குள் மாதத்தில் பத்து அல்லது பதினைந்து நாட்கள் ஆகிவிடுகிறது. தற்பொழுது இந்த நிலை மாற்றப்பட்டு இந்த நியாய விலை கடைகளுக்கு நம்முடைய வேலூர் மாவட்டத்தில் இருந்து பொருட்கள் கொண்டு வரப்பட்டு மாதத்தின் முதல் வாரத்திலேயே ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பீஞ்சமந்தை ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும், அவசர சிகிச்சைக்கும் சாலை வசதி இன்றியமையாததாக உள்ளது. அனைத்து கிராமங்களுக்கும் முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
மலை கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி இருக்கின்றனர். இதனால் அண்டை மாநிலங்களுக்கு மலை தோட்ட வேலைகளுக்காக சென்று விடுகின்றனர். அந்த நேரங்களில் இவர்களின் குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் மலை கிராமங்களில் இடைநிற்றலும் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் சுயதொழில் புரிய ஏதுவாக கறவை மாடு வாங்குவதற்காக தாட்கோவின் மூலம் 100 நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது.
பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு மினி பேருந்து கூடிய விரைவில் இயக்கப்படும். அதேபோன்று தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நம்முடைய மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் பெற்றவர்களின் விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு எடுத்து அறிக்கையாக வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் சாதி சான்றிதழ் பெறாத பழங்குடியின மக்களுக்கு இவற்றை வழங்குவதற்காக அடுத்த வாரத்தில் இப்பகுதியில் சிறப்பு முகாம் ஒன்று நடத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழுத் தலைவர் சி.பாஸ்கரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் ச.திருகுணஅய்யப்பத்துரை, ஆவின் பொது மேலாளர் ஜி.இளங்கோவன், உதவி பொது மேலாளர் லிடியாமார்கரேட், தாட்கோ மேலாளர் ரேகா, தாட்கோ செயற்பொறியாளர் சுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி சாந்தி பிரியதர்ஷினி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் ரேகா ஆனந்தன், வட்டாட்சியர் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment