• வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி
· வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி - மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி சன்பீம் பள்ளி மைதானத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி வாகனங்களில் அவசர கால வழி சரியான முறையில் இயங்குகிறதா எனவும், வாகனத்தில் தீயணைப்பு கருவிகள் சரியான நிலையில் உள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.
மேலும் வாகனத்தில் முதலுதவி பெட்டி, ஓட்டுநர் அமரும் இடம், பள்ளி குழந்தைகள் ஓட்டுநரை நெருங்காத வகையில் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதையும், வாகனத்தின் தரை தளம் பள்ளி குழந்தைகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளதா எனவும், வாகனத்தின் சக்கரங்கள் உள்ள பகுதிகளில் தரைதளம் உறுதி தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்கு கொண்டுவரப்பட்ட ஒரு சில வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதனையும், வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளதா என்பதையும், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பள்ளி குழந்தைகள் கை மற்றும் தலை வெளியே நீட்டாமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீயணைப்பு துறையினரால் தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து நேரத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்உதவி செய்வது குறித்து 108 ஆம்புலன்ஸ் குழுவினரால் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு கண் பரிசோதனை, இரத்த அழுத்தம் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் செய்யப்பட்டது.
மேலும் வாகனத்திலிருந்து இறங்கும்பொழுது படிக்கட்டுகளுக்கும் தரைதளத்திற்கும் இடையேயான இடைவெளி 250 மிமீ இருப்பதை உறுதி செய்து கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி உத்தரவிட்டார்.
வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள இயங்கும் 102 தனியார் பள்ளிகளிலிருந்து 618 வாகனங்கள் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் குடியாத்தம் பகுதி அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள 33 தனியார் பள்ளிகளின் 236 வாகனங்கள் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரி மைதானத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பி.ரமேஷ்பாபு, காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டார போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Comments
Post a Comment