• பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை

·        கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் தடை செய்யப்பட்டுள்ளதால், நுகர்வோர்களும் வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும் – வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல்.

          கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸானது தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ளதால், உணவு வணிகர்கள் அதனைத் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என்றும், அந்த வகையான மையோனைஸை நுகர்வோர்களும் வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

                கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும்போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஒராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இத்தடையாணையானது 08.04.2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

           எனவே, உணவு வணிகர்கள் எவரும்  கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிக்கவோ, அவ்வாறு தயாரித்த மையோனைஸை இருப்பு வைக்கவோ, போக்குவரத்து செய்யவோ, விநியோகம் அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள். அரசு உத்திரவினை மீறி கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, விற்பனை செய்வது உள்ளிட்ட வணிக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், மேற்படி மையோனைஸானது பறிமுதல் செய்யப்பட்டு, உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வு செய்யப்பட்டு பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், உணவு பாதுகாப்புத் துறையினரின் ள ஆய்வின்போது கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்குப் பின்னர், உணவு பாதுகாப்பு உரிமம் இடைநீக்கம் உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது. மேலும், உடல்நலனை பேணி காக்க ஏதுவாக, நுகர்வோர்களும் தடை செய்யப்பட்டுள்ள கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

                எனினும், மையோனைஸ் பிரியர்களுக்கு மாற்றுத் தேர்வாக, கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ வணிகர்களுக்குத் தடையேதுமில்லை. கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் ஆகியவற்றை நுகர்வோர்கள் தன் தமது உடல் நிலைக்கு ஏற்றவாறு உணவின் அளவிற்குள் சாப்பிடலாம். உணவு வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களின் வசதிக்காக கீழ்கண்டவாறு தெளிவுரைகள் வழங்கப்படுகின்றது.

எது தடை செய்யப்பட்ட மையோனைஸ்? உணவக உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

·        கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸை தடை செய்யப்பட்டதாகும்.

·        உணவக உரிமையாளர்கள், தமது உணவகங்களில் கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்க கூடாது.

·        உணவக உரிமையாளர்கள் தமது நுகர்வோர்களுக்காக, உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று, தயாரிக்கப்பட்டு, பொட்டலிமிடப்பட்டு, லேபிள் விபரங்களுடன் சந்தையில் கிடைக்கும் கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ் பொட்டலங்களை மட்டுமே கொள்முதல் செய்து பயன்படுத்தலாம்.

எது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ்?

·     கிருமிநீக்கம் செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மையோனைஸ் அனமதிக்கப்பட்டதாகும்.

·     இவை இரண்டும், பொட்டலமிடப்பட்டு, லேபிள் விபரங்களுடன் விற்பனை செய்யப்பட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் தயாரித்து விற்பனை செய்ய உணவு வணிகர்கள் என்ன செய்ய வேண்டும்?

·        கிருமிநீக்கம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்ட முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ் அல்லது முட்டை கலக்காத சைவ மையோனைஸ்சொந்தத் தயாரிப்பு உணவுப் பொருளாக” (Properrietary Food) உள்ளதால், அதனைத் தயாரித்து விற்பனை செய்ய, மத்திய உணவு பாதுகாப்பு உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, ரூ.7,500/- கட்டணம் செலுத்தி பெற்ற பின்னரே தயாரித்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்ட விதிகளுக்குட்பட்டு விற்பனை செய்ய வேண்டும். தவறினால், மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 63-ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

நுகர்வோர் மையோனைஸ் குறித்து ஏதேனும் புகார் அளிக்க விரும்பினால் 944440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் புகார் சேவை எண்ணிற்கோ அல்லது TNFSD App-ன் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியம் பாதுகாக்கப்படும். அதே வேளையில், உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட மையோனைஸ் குறித்து மேலும் தகவல் அறிய விரும்பினால், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்தை அணுகி உரிய தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்படுகின்றது.

 

                                                                                                                               


Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.